தேர்தல் மோசடிகள் மூலம் மக்களின் ஜனநாயக உரிமைகள் உதாசீனப் படுத்தப்படுகிறபோது, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி இதை பற்றி எடுத்துச் சொல்வதில் என்ன தவறு உள்ளது? என்று மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாஜக தேர்தல் ஆணையத்துடன் இணைந்து வாக்குகளை திருடுவதாக ராகுல்காந்தி முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி மகாராஷ்டிரா தேர்தலில் வெற்றித் திருட்டு நடைபெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். ஒரே வாக்காளர் பல மாநில தேர்தல்களில் வாக்களித்துள்ளார் என்று ஆதாரங்களையும் ராகுல்காந்தி முன்வைத்துள்ளார். இந்த குற்றச்சாட்டுகளை ராகுல்காந்தி ரொம்ப நாட்களாக சொல்லி வந்தார். ஆனால் அவர் எழுப்பிய குற்றச்சாட்டுகளுக்கு இதுவரை தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தை வைத்து நடைபெறும் மோசடிகள் குறித்து நாங்களும் பேசுகிறோம். அதற்கும் தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. தொழில்நுட்ப ரீதியாக பலரும் பேசினார்கள். அதற்கும் பதில் அளிக்கவில்லை. ராகுல்காந்தி சுட்டிக்காட்டியிருக்கும் அனைத்து விஷயங்களும் நடைபெற்று இருக்கிறது. சிலர் அவை எல்லாம் தரவுகள் என்கிறார்கள். ஆனால் அப்படி இல்லை. அவை எல்லாம் ஆதாரங்கள். 6.5 வாக்குகள் உள்ள தொகுதியில் ஒன்றரை லட்சம் வாக்குகள் போலியானவை என்றால் என்ன சொல்வது. ராகுல்காந்தி ஒரு பலமான குற்றச்சாட்டை தரவுகளுடன் முன்வைத்துள்ளார். இதற்கு பிரதமர் மோடி என்ன பதில் சொல்ல போகிறார் என்று பாருங்கள்.
பீகார் மாநிலத்தில் SIR என்கிற பெயரில் தேர்தல் ஆணையம் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்கிறார்கள். 6.5 லட்சம் வாக்காளர்களை நீக்கிவிட்டு வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. அப்போது நீக்கப்பட்டவர்களின் பட்டியலை ஏன் வெளியிடவில்லை. மகாராஷ்டிராவில் ஏராளமானோர் வாக்களித்தனர். ஆனால் யார் வாக்களித்தனர்? எப்படி வாக்களித்தனர் என்பதற்கு பதில் இல்லை. தேர்தல் ஆணையம் ஒரு கட்சி சார்பற்ற அமைப்பு என்கிற நிலை மாறிவிட்டது. இன்றுள்ள தேர்தல் ஆணையம், ஆளுங்கட்சியினருக்கு ஆதரவாக என்ன எல்லாம் செய்ய முடியுமோ, அதை செய்து கொண்டிருக்கிறது. மக்களின் ஜனநாயக உரிமைகள் உதாசீனப்படுத்தப்படுகிறது. மோசடி செய்யப்படுகிறபோது, எதிர்க்கட்சி தலைவரான ராகுல்காந்தி இதை பற்றி எடுத்துச்சொல்வதில் என்ன தவறு உள்ளது? பாஜக, இந்த விவகாரத்தில் ராகுல் உச்சநீதிமன்றத்திற்கு செல்லட்டும். நீதிமன்றம் என்ன சொல்கிறதோ அதை ஏற்கிறோம் என்றுதானே சொல்ல வேண்டும். ஆனால், அவர்கள் தேர்தல் ஆணையத்திற்கு ஆதரவாக வாதிடுகிறார்கள்.
பீகாரில் இருந்து நீக்கப்பட்ட வாக்காளர்களில் 6 லட்சம் பேர் தமிழ்நாட்டில் சேர்க்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தியாவில் உள்ள அரசியலமைப்பு சட்டத்தின் படி எல்லோரும் எங்கு வேண்டுமானாலும் வசிக்கலாம். எங்கு வேண்டுமானாலும் தொழில் செய்யலாம். எங்கு வேண்டுமானாலும் வாக்களிக்கலாம் என்று சொல்கிறார்கள். அது உண்மை என்றால்? பாண்டியன் ஐஏஎஸ் ஒடிசாவின் முதலமைச்சராக வர முயற்சி செய்கிறார். அப்போது நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கும் அமித்ஷா, எப்படி ஒரு தமிழன் ஒடிசாவின் முதல்வராக வரலாம் என்று கேட்கிறார். அப்போது சட்டத்திற்கு புறம்பாக பேசிய அமித்ஷா மீது தேர்தல் ஆணையம் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை?. உள்துறை அமைச்சராக இருக்கும் குஜராத்தி ஒருவர், தமிழர் முதலமைச்சர் ஆகக்கூடாது என்று சொல்கிறார். அப்போது நீங்கள் மட்டும் எப்படி தமிழ்நாட்டில் வந்து அரசியல் செய்யலாம். அதை எப்படி எடப்பாடி பழனிசாமி வரவேற்கலாம்.
ஒடிசாவில் உள்ள கோவில் சாவி திருடப்பட்டு தமிழ்நாட்டில் ஒளித்து வைக்கப்பட்டிருப்பதாக பிரதமர் மோடி பேசியபோது, இந்த தேர்தல் ஆணையம் என்ன செய்தது? நாட்டில் இன்று பல்வேறு மொழிகள் புழக்கத்தில் இருப்பதற்கு காரணம், தமிழன் மொழியை காப்பாற்ற இந்தியை எதிர்த்து செத்தான். அன்றைக்கு தமிழர்கள் மடிந்திருந்தால் இன்றைக்கு நாடு முழுவதும் இந்திதான் இருந்திருக்கும். தமிழ் இனம் செய்த தியாகம் இன்றைக்கு இந்தியா முழுவதும் இவ்வளவு மொழிகள் உள்ளன. எனவே வெளி மாநிலத்தவர்கள் இங்கு வந்து பிழைக்கலாம். ஆனால் அவர்களுக்கு வாக்குரிமை வழங்கிட கூடாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.