சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவுதான் சங்ககாலத்தின் தொடக்கம் என்று ஒரு கருத்தை உருவாக்க முயற்சிப்பதாகவும், ஆனால் கீழடி என்பது தொடக்கம் தான் என்று முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

கீழடி அகழாய்வு முடிவுகள் தொடர்பாக அறிக்கையில் திருத்தம் மேற்கொள்ள மத்திய தொல்லியல் துறை கடிதம் அனுப்பியுள்ளதன் பின்னணி குறித்தும், இதில் உள்ள அரசியல் குறித்தும் முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலகிருஷ்ணன் பிரபல யூடியுப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- கீழடி அகழாய்வு குறித்த அறிக்கையை 2 ஆண்டுகளுக்கு பின்னர் திருத்தி அனுப்புமாறு மத்திய தொல்லியல்துறை உத்தரவிட்டு உள்ளது. கேட்கப்பட்டு உள்ள கேள்விகளும், திருத்தமும் நியாயமானது கிடையாது. இது தொல்லியல் துறை தொடர்பான விவகாரமாக இருந்தபோதும் நான் ஒரு நிர்வாகியாக இருந்தவன். இந்த உத்தரவை எதனால் பிறப்பித்துள்ளனர் என்றால் கீழடி குறித்த அறிக்கை இன்னும் வெளியாகவில்லை. அதனை வெளியிடக்கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அப்போது தொல்லியல் துறை விரைந்து அறிக்கையை வெளியிடுவதாக தெரிவித்தனர். இதேபோல், மதுரை எம்.பி. மத்திய தொல்லியல் துறை அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார். நாடாளுமன்ற உறுதிமொழிக்குழுவின் கூட்டம் உதகையில் நடைபெற உள்ளது. அப்போது, வெங்கடேசன் நிச்சயமாக இந்த பிரச்சினையை கிளப்புவார். அப்போது, கீழடி குறித்த அறிக்கை இன்னும் முழுமை அடையாததால் அதை வெளியிட முடியவில்லை என்று தங்களை சமாளித்துக் கொள்வதற்காக தான் இந்த கடிதம் எழுதப்பட்டு உள்ளதாக நினைக்கிறேன்.
மத்திய தொல்லியல் துறை கடிதம் எழுதுவதற்கு காரணம் என்ன என்றா? அறிக்கை தாக்கல் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். ஆய்வு அறிக்கைதான் தயாராகி விட்டதே என்றா? அதற்கு இன்னொரு நேரட்டிவ் உள்ளது. வரலாறு என்பது ஆதாரங்களை அடிப்படையாக கொண்டதாக இருக்க வேண்டும். கீழடியில் உள்ள உறுதியான ஆதாரங்கள் என்பது, வடஇந்தியர்களின் நேரேட்டிவ்களுக்கு எதிராக உள்ளது. இதுவரை எழுதப்பட்ட வரலாறு எல்லாம் இந்தியாவின் நாகரிகம் என்பது வடஇந்தியாவில் தொடங்கியது என்பதுதான். வின்சென்ட் ஸ்மித் என்பவர்தான் இந்தியாவின் உண்மையான வரலாறு எழுதப்பட வேண்டும் என்றால் அது தெற்கில் இருந்துதான் எழுதப்பட வேண்டும் என்று சொன்னார். முன்னாள் முதல்வர் கலைஞருக்கு ஏழை எளிய மக்களின் நன்மைக்காக எதை உடனடியாக செயல்படுத்த முடியுமோ அதை செயல்படுத்த வேண்டும். அதனால் தான் வறுமை ஒழிப்பு திட்டங்களாகட்டும், பழமையான மூட நம்பிக்கைகளில் இருந்தும் மக்களை முன்னேற்றினார். அன்றைக்கு இருந்த அதிகார குழுமம், இதை எல்லாம் ஆதரிக்கும் நிலையில் இல்லை. ஆனால் இன்றைக்கு நிலைமை மாறியுள்ளது.

கீழடியில் இரண்டாம் கட்ட அகழாய்வு முடிந்த உடன் ராமகிருஷ்ணனை மாற்றிவிட்டு, மற்றொருவரை கொண்டு வந்து அமர்த்தினார்கள். அவர் ஒரு அறிக்கை அளித்தார். இதில் மேற்கொண்டு குறிப்பிடும்படி எதுவும் இல்லை என்று சொன்னார். தற்போது தொல்லியல் துறை கொடுத்த கடிதத்தில் அந்த காலகட்டம் எல்லாம் சரியாக சொல்லப்பட்டு உள்ளதா என்று கேட்கிறார்கள். இதுதான் அடிப்படை பிரச்சினையாகும். கி.மு. 8 முதல் கி.மு 5ஆம் நூற்றாண்டு வரை மொத்தமாக சொல்லப்படுவதாகவும், எந்த வருடம் என்று துல்லியமாக சொல்ல வேண்டும் என்று கேட்கிறார்கள். கார்பன் வயது கணிப்பு முறையில் 100 வருடங்கள் வரை வித்தியாசம் இருக்க முடியும். ஆனால் சிவகளையில் நடைபெற்ற ஆய்வு முறையில் 20 வருடங்கள் தான் வித்தியாசம் இருக்கும். கி.மு.8ஆம் நூற்றாண்டு அல்ல கி.மு.7ஆம் நூற்றாண்டு என்று வைத்துக்கொள்வோம். இதுவரை கி.பி. 3ஆம் நூற்றாண்டை சேர்ந்த அசோகரின் கல்வெட்டுகளை பார்த்து, அதில் உள்ள பிராகிருத மொழிதான் இந்தியாவில் முதலில் எழுத்து வடிவம் பெற்ற மொழி என்று சொல்லப்பட்டது. கீழடியை கி.மு. 5ஆம் நூற்றாண்டு என்று வைத்துக்கொண்டால் கூட தமிழ்தான் முதலில் எழுத்து வடிவம் பெற்ற மொழி என்பது உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
இது ஏன் பெரிய பிரச்சினை இல்லை என்றால் இரும்பு முதன் முதலில் துருக்கியில் பயன்படுத்தப்பட்டது. தற்போது சிவகளையில் இரும்பு பயன்பாடு இருந்தது கி.மு.15ஆம் நூற்றாண்டு என்று ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. அந்த ஆய்வுகள் சொன்னதை அமெரிக்காவின் புளோரிடா உள்ளிட்ட 4 இடங்களுக்கு அனுப்பினார்கள். 4 ஆய்வுகளிலும் நமது முடிவு சரியானது என்று அவர்களே சொல்லிவிட்டனர். அப்போது, நமது இரும்பு பயன்பாடு என்பது கிமு 15ஆம் நூற்றாண்டிற்கு ஏற்கனவே போய்விட்டது. அப்போது நீங்கள் கீழடியின் 5 அல்லது 8வது நூற்றாண்டை வைத்து ஏன் சண்டை போடுகிறீர்கள். இதை கி.மு.5ஆம் நூற்றாண்டு என்று சொல்லிக்கொள்ளுங்கள்.
ஆரிய நாகரிகம் தான் இந்தியாவில் நாகரிகத்தை கொண்டு வந்தது என்று நம்ப வேண்டும். நம்ப வைக்க வேண்டும் என்று இருந்தது. மார்ஷலும், சுனித் சட்டர்ஜியும் இணைந்து 1904ல் ஹரப்பா மொகாஞ்சதரோவில் அகழாய்வு மேற்கொண்டனர். இது தொடர்பாக சுனித் சாட்டர்ஜி எழுதுகிறபோது தெற்கு வரை ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்று சொன்னார். தொல்லியல் ஆய்வாளர்கள் எல்லோரும் சிந்து சமவெளி நாகரிகத்தை அடிப்படையாக கொண்டே வரலாற்றை எழுதினர். நாகரிகம் பழைய கற்காலம், புதிய கற்காலம், பித்தளை, வெண்கலம், கடைசியாக இரும்பு வந்தது என்று சொன்னார்கள். நாகரிகங்கள் ஆறுகளின் அருகே நிகழ்ந்தது. காரணம் அங்கே வளமான நிலங்கள் இருந்தன. கீழடி என்பது ஒரு ஒர்க்ஷாப். அங்கேயே எப்படி பட்ட மேன்மையான கட்டட அமைப்புகள் இருந்தன என்பதை கீழடி காட்டியுள்ளது என்றால், உருத்திரங்கண்ணனார் பட்டினப்பாலையில் எழுதினாரே பூம்புகாரில் அல் அங்காடி, நாள் அங்காடி என 2 அங்காடிகள் இருந்ததாக சொல்கிறார். யார் யார் எல்லாம் அங்கு வந்து வியாபாரம் செய்தனர் என்கிற தகவலும் உள்ளது.
பழங்கால சோழர்கள் தங்களின் தலைநகரையே, துறைமுகத்தில் வைத்திருந்தனர். விளை நிலங்களில் இருந்து துறைமுகத்திற்கு இடையே தடையே இல்லாமல் பொருட்களை அனுப்பினர். காவிரி பூம்பட்டினம், குமரிக்கடல் பற்றி இன்னும் நாம் ஆய்வுகள் மேற்கொள்ளவில்லை. எப்படி அவர்களது நேரட்டிவ் தவறானதோ அதுபோல தமிழ்நாட்டில் நேரட்டிவ் கொண்டுவர முயன்றாலும் தவறுதான். அதை நாம் செய்யக்கூடாது. எப்படி திராவிடர்கள் தான் முதல் மைகிரன்ட் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று சொன்னேனோ. அதுபோல கீழடி ஆய்வு முடிவின்போது ஒரு நேரேட்டிவ் கொண்டு வந்தார்கள். சிந்து சமவெளி நாகரிகத்தின் முடிவு தான் சங்க காலத்தின் தொடக்கம் என்று சொன்னார்கள். நான் அப்போதே சொன்னேன். கீழடி ஒரு தொடக்கம் தான். இது முடிவு அல்ல. வைகை, தாமிரபரணி கரையில் உள்ள பல சிற்றூர்களை நீங்கள் ஆய்வு மேற்கொண்டால் பல தங்கச் சுரங்கங்கள் வரும்.
சிவகளை இரும்பு மட்டுன்றி நெல்லையும் எடுத்துக்காட்டியது. நெல்லை கண்டுபிடித்ததால் என்ன ஆகிவிட்டது என்று கேட்பவர்கள் அறிவிலிகள். ஏனென்றால் அந்த நெல் 5000 ஆண்டுகள் பழமையானது என்று ஆய்வாளர்கள் கண்றிந்துள்ளனர். நெல் விதைக்கப்பட்டது என்றால் வேளாண்மை நடைபெற்றுள்ளது. வேட்டுவச் சமுதாயமாக இருந்த மனித குலம், வேளாண்மை சமுதாயமாக மாறியதுதான் நாகரிக வளர்ச்சி என்று நாம் கருதுவதன் முதல் படியாகும். 5300 வருஷங்களுக்கு முன்பு இங்கு நெல் விளைந்துள்ளது. சிலுவைப் போர்களின்போது ஒட்டமான் படைகள் பயன்படுத்திய வாள்களுக்கான மூலப் பொருட்கள் தென்னிந்தியாவில் இருந்து அனுப்பப்பட்டு உள்ளது. அப்போது நாம் எப்படிபட்ட நாகரிகத்தோடும் அறிவியல் வளர்ச்சியுடன் இருந்துள்ளோம். இந்தியாவில் ஒரே காலகட்டத்தில் பல நாகரங்கள் நிலவியுள்ளன என்று ஆய்வாளர்கள் சொல்கின்றனர். சிந்து சமவெளி நாகரிகம் என்பது ஆரிய நாகரிகத்திற்கு முந்தைய நாகரிகம் என்றுதான் சொன்னார்கள். நாம் அதை திராவிட நாகரிகம் என்று காட்ட வேண்டும். மார்ஷல், சுனித் சட்டர்ஜி தொடங்கி எல்லோரும் அதைதான் சொல்லி உள்ளனர், இவ்வாறு அவர் தெரிவித்தார்.