டெல்லியில் அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பின்போது அதிமுக – பாஜக இடையே கூட்டணி உறுதி செய்யப்பட்டுள்ளதாக மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் தெரிவித்துள்ளார். இந்த நிகழ்வின்போது அண்ணாமலை குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அமித்ஷா – எடப்பாடி பழனிசாமி சந்திப்பின் அரசியல் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன் பிரபல தொலைக்காட்சிக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- டெல்லிக்கு சென்று உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்த, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, செய்தியாளர்களிடம் கட்சி அலுவலகத்தை காண வந்ததாக தெரிவித்தார். அப்படி அவர் சொல்வதற்கு காரணம் பதற்றம் மற்றும் முதிர்ச்சி அற்ற தன்மைதான். டெல்லிக்கு வந்துவிட்டார் அதிமுக கட்டிடத்தை பார்க்க வந்தேன், நாளை உங்களை சந்திக்கிறேன் என்று அவர் நிறுத்தியிருக்கலாம். குறிப்பிட்ட நபரை சந்திக்கும் திட்டம் உள்ளதா? என கேட்கிறபோது அதை மறுக்கிறார். அடுத்த 5 மணி நேரத்தில் அவர் உலகமே பார்க்கிற மாதிரி அந்த சந்திப்பை நடத்துகிறபோது, ஒரு தலைவர் சமாளிக்கிற காரியம் இதுவல்ல.
டெல்லிக்கு புறப்படும் முன்பு சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு காலம் உள்ளது. கூட்டணி குறித்து தற்போது பேச வேண்டிய அவசியம் என்ன உள்ளது என்று கேள்வி எழுப்பினார். அவர் சொன்னது உண்மையானது. தற்போது கூட்டணியை உறுதிப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏதும் கிடையாது. அப்போது எதற்காக அவர் டெல்லி செல்ல வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது. அதை தான் நான் தொடர்ச்சியாக சொல்லி வருகிறேன். அவருக்கு பாஜகவினர் அச்சுறுத்தல் விடுக்கினறனர். ஏனென்றால் அவர்களுக்கும் சில நெருக்கடிகள் இருக்கின்றன. முதல் நாள் இரவு அமித்ஷா சந்திப்புக்கான நேரம் உறுதிசெய்யப்படுகிறது. ஏனோ சில குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் சொல்லிவிட்டு, சொல்ல வேண்டிய சில மூத்த நிர்வாகிகளுக்கு சொல்லாமல் புறப்பட்டு சென்றுள்ளார். முதலமைச்சர் சட்டப்பேரவையில் சொல்கிற வரைக்கும் செங்கோட்டையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகள் பலருக்கும் இது தெரியாது.
2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு வரை அதிமுக – பாஜக கூட்டணி உறுதியாகவே இருந்தது. என்டிஏ கட்சிகள் கூட்டத்தில் பிரதமர் மோடிக்கு அருகிலேயே எடப்பாடி பழனிசாமி அமர்ந்திருந்தார். பின்னர் அண்ணாமலையின் துடுக்குத்தனம் மற்றும் எடப்பாடி பழனிசாமியின் ராஜதந்திர குறைவு ஆகியவை தான் அந்த கூட்டணி தொடராமல் போக காரணமாக அமைந்தது. அதன் காரணமாக இருதரப்பும் பாதிப்பை சந்தித்துள்ளது. இந்த சந்திப்பின்போது, கடந்த ஆண்டே நீங்கள் அந்த தவறை செய்யாமல் இருந்திருந்தால் இன்று தற்போதுள்ளதை விட வலுவான அரசு மத்தியில் அமைந்திருக்கும் என்று அமித்ஷா சொன்னதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. காரணம் என்ன என்றால் தனித்து நின்றதால் இருவருக்கும் பயன் இல்லாமல் போய்விட்டது. இந்த கூட்டணி தொடர்ந்திருந்தால் குறைந்தபட்சம் 15 இடங்களில அந்த அணி வென்றிருப்பார்கள். அது கணக்கையோ அரசியல் போக்கையோ கொஞ்சம் மாற்றி இருக்கும். அந்த வாய்ப்பை தவறவிட்டுவிட்டார்கள் என்பதுதான் அமித்ஷாவின் வார்த்தைகளில் வெளிவந்துள்ளது.

தமிழ்நாட்டின் நலன்களுக்காகவும், தமிழ்நாட்டில் நிலவுகிற சில சூழல்களை மத்திய அரசிடம் எடுத்துச் சொல்வதற்காக தான் வந்துள்ளேன். அமித்ஷாவை பார்க்க நேரம் கேட்டுள்ளேன். கொடுத்தால் சந்திப்பேன் என்று சொல்வது தான் ஒரு தலைவர் சொல்ல வேண்டிய இயல்பான வார்த்தைகளாகும். ஆனால் அவர் அதை மேலும் கனடிமாக்கி கொண்டுள்ளார். அதிமுக போன்ற மிகப்பெரிய இயக்கத்தின் தலைமை பொறுப்பில் உள்ளவர் இப்படி நடந்துகொள்ள வேண்டுமா? இந்த சந்திப்பின்போது திமுகவை டைட் பண்ணுங்க… அங்கே தவறுகள் நடக்கிறது, நடவடிக்கை எடுங்கள் என்று தான் சொல்லியுள்ளார். அதற்கு அமித்ஷா நான் பார்த்துக்கொள்கிறேன் என்று கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சந்திப்பின்போது குறைந்தபட்சம் கூட்டணியை உறுதி செய்துவிட்டனர். இதை நீங்கள் முன்பே செய்திருந்தால் என்று அமித்ஷா சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
கடந்த 2 மாதங்களாக நான் குறிப்பிட்டு வருவது போல எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி வீட்டில் நடைபெற்ற சோதனை என்பதை ஏதோ விசாரணை அமைப்புகள் மேற்கொள்கிற வழக்கமான நடவடிக்கை என்று கடந்து சென்றுவிட முடியாது. இரட்டை இலை வழக்கு தேர்தல் ஆணையத்தில் முழுமையாக விசாரிக்கப்படும் நிலையில் உள்ளதையும் நாம் மறந்துவிடக்கூடாது. செங்கோட்டையனின் அதிருப்தி. ஓபிஎஸ் போன்றோர் பயன்படுத்தும் சில வார்த்தைகள். எடப்பாடியை விட்டுவிட்டு வந்தாலும் சரி, அவரோடு வந்தாலும் சரி என்று டிடிவி தினகரன் பயன்படுத்துகிற வார்த்தைகள் இந்த புள்ளிகள் எல்லாவற்றையும் இணைத்துப்பார்த்தால் மிக விரைவில் அவருடைய கைகள் முறுக்கப்படும் என்று சொன்னேன்.அதனுடைய தொடர்ச்சிதான் இது. இதனை 2 வாரங்களுக்கு முன்பே எடப்பாடி வெளிப்படுத்த தொடங்கி விட்டார்.
பாஜகவுடன் எந்த காலத்திலும் கூட்டணி கிடையாது என்று தொடர்ந்து சொல்லிவந்த எடப்பாடி பழனிசாமி, கூட்டணி குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்து கொள்ளலாம். 6 மாதங்கள் பொறுங்கள் என்று சொல்லி தள்ளிவிட பார்த்தாரே தவிர அந்த உறுதி காணாமல் போனதுதான் முதல் புள்ளியாகும். தற்போதைய டெல்லி பயணம் அந்த தயக்கத்தை எல்லாம் உடைத்து எறிந்துவிட்டது. ஒரு அழுத்தம் கொடுக்கப்பட்டதன் காரணமாக எடப்பாடி பழனிசாமி டெல்லிக்கு சென்றார். மற்றபடி தேர்தல் கூட்டணியை உறுதி படுத்துகிற நேரமும் இது அல்ல. ஒன்றுபட்ட அதிமுகவும், பேசப்பட்ட விஷயங்களில் ஒன்று. அதற்கு எடப்பாடி என்ன சொன்னார். பாஜக தரப்பில் என்ன சொல்லப்பட்டது என்பது போக போக தான் தெரியவரும். எடப்பாடியின் மகன் மிதுன் தான் பாஜக உடனான கூட்டணியை உறுதிப் படுத்தியதாக சில தகவல்கள் சொல்லப்படுகிறது. ஆனால் அது உண்மையா? என உறுதிபடுத்தப்படவில்லை. மிதுன் டெல்லி சென்றார் என்பது உண்மைதான். ஆனால் அது தொழில் தொடர்பாக கூட இருக்கலாம்.
எடப்பாடியின் வெளிப்படையான நடவடிக்கைகளை டிகோடிங் செய்து நாம் பார்க்கலாம். அவசியம் இல்லாத நேரத்தில் இந்த பயணம் எதற்கு? தமிழ்நாட்டின் நலனுக்காக தான் சென்றேன் என்றால், அதனை ஏன் வெளிப்படையாக சொல்லவில்லை?. இந்த 2 விஷயங்கள்தான் எங்க அப்பன் குதுருக்குள்ள இல்ல… என்று அவரே மறைமுகமாக ஒப்பக்கொண்டதாக ஆகிவிட்டது. நமக்கும் கிடைக்கும் தகவல்களும் அதை உறுதிபடுத்துகிறது. அதிமுக – பாஜக கூட்டணியை உறுதிபடுத்தி இருக்கிறார்கள். அண்ணாமலை பற்றியும் சிறிய விவாதம் நடைபெற்றிருக்கிறது. அண்ணாமலையோடு, அதிமுகவினர் சேர்ந்து செயல்படுவதில் உள்ள சில சங்கடங்களை பற்றி எடுத்து சொல்லியுள்ளனர். அதை பற்றி கவலைப்பட வேண்டாம் சரி செய்து கொள்ளலாம் என்று அமித்ஷா சொன்னதாக கூறப்படுகிறது.
இதுபோன்ற தகவல்கள் கூட முன்பு வரவில்லை என்பதால்தான் எடப்பாடி பழனிசாமி பாஜக உடனான கூட்டணியை முறித்தார். அதையும் கூட எடப்பாடியால் ராஜதந்திரமாக சமாளித்திருக்க முடியும். ஜெயலலிதாவின் ராஜதந்திரத்தில் ஒரு 10 சதவீதத்தை அவர் காண்பித்திருந்தார் என்றால், அந்த சூழலை சமாளித்து அந்த கூட்டணியை தொடர செய்திருக்க முடியும். அதிமுகவுக்கு பிரயோஜனமாக பல இடங்களை வென்று காட்டியிருக்க முடியும். அந்த வாய்ப்பை எடப்பாடி தவறவிட்டுவிட்டார். தற்போது நெருக்கடியின் காரணமாக இந்த கூட்டணிக்கு ஒப்புக்கொண்டிருக்கிறார். திரும்பவும் சொல்கிறேன். சட்டமன்ற தேர்தலை பொறுத்தவரை பாஜகவுடன் கூட்டணியால் எந்த கட்சிக்கும் பயன் கிடையாது. திமுகவை கொஞ்சம் மிரட்டலாம். அதை தவிர அதிமுகவுக்கு எந்த பயனும் கிடையாது.