சட்ட விரோத கல் குவாரிக்கு எதிராக போராடிய நபர் மினி லாரி மோதி விபத்தில் உயிரிழந்த விவகாரத்தில் திடீர் திருப்பம், காவல்துறை விசாரணையில் திட்டமிட்டே விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்டது அம்பலமானதால் கல்குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைது, மற்றொரு கல்குவாரி உரிமையாளருக்கு போலீசார் வலைவீச்சு.
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே வெங்களூரில் இருசக்கர வாகனம் மீது 407 மினி லாரி மோதிய விபத்தில் அதிமுக முன்னாள் கவுன்சிலரும் சட்டவிரோத கல் குவாரிக்கு எதிராக வழக்குத் தொடர்ந்து போராடிய நபரான ஜகபர் அலி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த விவகாரத்தில் ஏற்கனவே உயிரிழந்தவரின் மனைவி கொடுத்த புகாரின் பேரில் குவாரி உரிமையாளர்கள் உட்பட நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து வந்த காவல்துறையினர் இந்த வழக்கில் ஒருவரை கூடுதலாக சேர்த்து மொத்தம் ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்து கொலை வழக்காக மாற்றி ஐந்து பேரில் குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேரை கைது செய்துள்ள நிலையில் மற்றொரு குவாரி உரிமையாளரை தேடி வருகின்றனர் இந்த சம்பவம் புதுக்கோட்டையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூர் கிராமத்தைச் சேர்ந்த அதிமுக முன்னாள் கவுன்சிலரும் மாவட்ட அமைச்சூர் கபடி கழகத்தின் தலைவருமான ஜகபர் அலி(58). மேலும் இவர் திருமயம் தெற்கு ஒன்றிய அதிமுக சிறுபான்மையினர் நலப் பிரிவு செயலாளராகவும் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் இவர் காட்டுபாவா பள்ளிவாசல் அருகே வசித்து வந்துள்ளார். இவரது மனைவி மற்றும் பிள்ளைகள் காரைக்குடி அருகே உள்ள கோட்டையூரில் உள்ளனர். இவர் மட்டும் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் அவர் வசிக்கும் வீட்டின் அருகே உள்ள பள்ளிவாசலுக்கு கடந்த வெள்ளிக்கிழமை அன்று மதியம் தொழுகைக்கு சென்று விட்டு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பியுள்ளார். அப்போது எதிரே வந்த 407 மினி டிப்பர் லாரி அவர் வந்த இருசக்கர வாகனத்தில் மோதி விபத்துக்குள்ளாகி ஜகபர் அலி இறந்து விட்டதாக காவல்துறையினருக்கு தகவல் வந்துள்ளது.
இந்த தகவலை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருமயம் காவல்துறையினர் விபத்தில் உயிரிழந்ததாக கூறப்படும் ஜகபர் அலி உடலை மீட்டு திருமயம் அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்தனர். பின்னர் ஜகபர் அலி உயிரிழந்ததை அறிந்த 50க்கும் மேற்பட்ட அவரது உறவினர்கள் திருமயம் அரசு மருத்துவமனையில் குவிந்தனர். மேலும் ஜகபர் அலி மரணத்தில் சந்தேகம் இருப்பதாகவும் மேலும் ஜகபர் அலி திருமயம் சுற்று வட்டார பகுதியில் சட்டவிரோதமாக அதிக கற்களை வெட்டி எடுக்கும் குவாரிகள் மீது பல்வேறு வழக்குகளை தொடுத்து தொடர்ந்து கனிமவள கொள்ளையை தடுக்க போராடி வந்ததாகவும் அதனால் அவர் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறியும் இதில் காவல்துறையினர் தலையிட்டு உரிய முறையில் விசாரணை செய்து இதில் தொடர்புடையவர்களை காவல்துறையினர் கைது செய்ய வேண்டும் அதுவரை ஜகபர் அலியின் சடலத்தை பெற மாட்டோம் என்று தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில் ஜகபர் அலியின் மனைவி மரியம் திருமயம் காவல் நிலையத்தில் புகார் ஒன்றை கொடுத்தார் அந்த புகாரில் திருமயம் அருகே உள்ள துளையானூர் வளையன்வயல் கிராமத்தைச் சேர்ந்த ஆர் ஆர் நிறுவனங்களின் உரிமையாளர்களான ராசு மற்றும் ராமையா ஆகியோர் கனிமவள கொள்ளையில் ஈடுபடுவதை ஜகபர் அலி தடுப்பதற்கு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தும் மேலும் பல்வேறு கட்ட நடவடிக்கையில் ஈடுபட்டதால் ஆத்திரமடைந்த அவர்கள் நேரடியாகவே ஜகபர் அலியை தொடர்ந்து இதுபோல் செயல்பட்டால் லாரியை ஏற்றி கொன்று விட்டு விபத்து நடந்தது போல் காட்டி விடுவோம் என்று மிரட்டி வந்ததாகவும் ஆனால் அதனை பொருட்படுத்தாமல் தனது கணவர் ஜகபர் அலி தொடர்ந்து கனிமவள கொள்ளைக்கு எதிராக மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அதிகாரிகளை சந்தித்து தொடர்ந்து புகார் அளித்து வந்ததால் ஆத்திரமடைந்த ராசு மற்றும் ராமையா ஆகிய இருவர் மினி லாரி வைத்துள்ள இவர்களது நண்பரான முருகானந்தம் உதவியுடன் சதி திட்டம் தீட்டி தனது கணவர் ஜகபர்அலியை விபத்து ஏற்படுத்தி கொலை செய்து விட்டதாக புகார் கொடுத்ததை அடுத்து திருமயம் காவல்துறையினர் கல்குவாரி உரிமையாளர்கள் ராசு மற்றும் இராமையா விபத்து ஏற்படுத்திய மினிலாரி உரிமையாளர் முருகானந்தம் மற்றும் மினி லாரி ஓட்டுநர் ஆகிய நான்கு பேர் மீது ஜகபர்அலி மனைவி மரியம் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்தனர்.
இதனை அடுத்து நேற்று மாலை உடற்கூறு ஆய்வு செய்யப்பட்ட ஜகபர் தலையில் உடலை பெற்ற உறவினர்கள் அவரை அடக்கம் செய்தனர். இந்நிலையில் தான் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்யப்பட்ட 407 மினி லாரி உரிமையாளர் முருகானந்தம், லாரி மோதி விபத்து ஏற்படுத்திய லாரி ஓட்டுநர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த காசி, குவாரி உரிமையாளர் ராசு ஆகியவரிடம் நடத்திய விசாரணையில் பல அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.
அதில் தொடர்ந்து பாரி உரிமையாளர் ராசு மற்றும் ராமையாவுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் ஜகபர் அலி செயல்பட்டதால் ராசுவின் மகன் சதீஷ் அதேபோல் ராசு மற்றும் ராமையா ஆகியோர் சதித்திட்டம் தீட்டி 407 மினிலாரி வைத்துள்ள ராசு மற்றும் ராமையாவின் நண்பரான முருகானந்தத்தின் உதவியோடு ஜகபர் அலியை லாரியை வைத்து மோதி விபத்து ஏற்படுத்துவதைப் போல் காட்டி அவரை கொலை செய்ய சதித்திட்டம் திட்டி உள்ளனர். பின்னர் ராமநாதபுரத்திலிருந்து மினி லாரியை ஓட்ட காசி என்பவரை வரவழைத்து அவர் மூலம் முருகானந்தத்தின் மினி லாரியை வைத்து தொழுகை முடிந்து இரு சக்கர வாகனத்தில் சென்ற ஜகபர் அலியை மோதி கொலை செய்ததை லாரி உரிமையாளர் முருகானந்தம் ஒப்புதல் அளித்ததை தொடர்ந்து ஏற்கனவே நான்கு பேர் மீது வழக்கு பதிவு செய்திருந்த காவல்துறையினர் ராசுவின் மகன் சதிசையும் இந்த வழக்கில் சேர்த்து மொத்தம் ஐந்து பேர் மீது வழக்குப்பதிந்து இந்த வழக்கை கொலை வழக்காக மாற்றி கைது செய்யப்பட்ட குவாரி உரிமையாளர் ராசு அவரது மகன் சதீஷ் 407 மினி லாரி உரிமையாளர் முருகானந்தம் அந்த லாரியை ஊட்டி வந்த ஓட்டுநர் ராமநாதபுரத்தைச் சேர்ந்த காசி ஆகிய நான்கு பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
மேலும் இந்த வழக்கில் தொடர்புடைய குவாரி உரிமையாளர் ராமையா தலைமறைவாக இருப்பதால் அவரையும் காவல்துறையினர் தேடி வருகின்றனர். இந்நிலையில்தான் ஜகபர் அலி விபத்து ஏற்படுத்தி கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் இந்த குவாரி உரிமையாளர்கள் மட்டுமின்றி மற்ற குவாரி உரிமையாளர்களுக்கும் இதில் தொடர்பு இருக்கிறதா? என்பதை காவல்துறையினர் தொடர்ந்து விசாரிக்க வேண்டும் அது மட்டும் இன்றி ஜகபர் அலி வட்டாட்சியர் மாவட்ட ஆட்சியர் கனிமவளத்துறை அதிகாரி ஆகியோரிடம் சட்ட விரோத கல் குவாரிக்கு எதிராக மனு கொடுத்து வந்தால் மனு கொடுத்த அடுத்த நிமிடமே சம்பந்தப்பட்ட கல்குவாரி உரிமையாளர்களுக்கு அவர் மனு கொடுத்த விவகாரம் தெரிந்து கல்குவாரி உரிமையாளர்களால் தொடர்ந்து ஜகபர் அலி மிரட்டப்பட்டு வந்ததாகவும் அதனால் இந்த விவகாரத்தில் அரசு அலுவலர்கள் அதிகாரிகள் காவல்துறையினருக்கும் சம்பந்தம் உள்ளதா என்பதை விசாரணை செய்ய வேண்டும் அது மட்டும் இன்றி காவல்துறையினர் விசாரணை போதுமானதாக இல்லை என்றால் சிபிசிஐடி விசாரணைக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சட்டவிரோத கல்குவாரிக்கு எதிராக தொடர்ந்து போராடி வந்த ஜகபர் அலியை கல்குவாரி உரிமையாளர்கள் சதித்திட்டம் தீட்டி லாரி வைத்து ஏற்றி கொன்றுவிட்டு விபத்தில் உயிரிழந்ததை போல் காட்டி தற்பொழுது அவர்கள் கொலை செய்த விஷயம் காவல்துறையினர் விசாரணையில் தெரிய வந்து தற்பொழுது குவாரி உரிமையாளர் உட்பட நான்கு பேர் கைதாகி உள்ள சம்பவம் ஒட்டுமொத்த புதுக்கோட்டை மாவட்டத்தையும் உலுக்கியுள்ளது.