கர்நாடகாவில் கனமழையால் 7 பேர் உயிரிழப்பு
கர்நாடகாவில் பெய்துவரும் கனமழையால் கடந்த ஒரு வாரத்தில் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
கர்நாடகாவின் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கனமழை தொடர்ந்து பெய்துவருகிறது. தொடர் மழையால் பல்வேறு நீர்த்தேக்கங்கள் நிரம்பியுள்ளன. எல்லை மாவட்டமான பெலகாவியில் குடியிருப்புகளுக்குள் புகுந்த வெள்ள நீர் புகுந்ததால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. தட்சிண கன்னடா, உடுப்பி, உத்தரகன்னடா, சிக்கமகளூர் ஆகிய மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோல் குடகு, சிவமோக்கா, பெலகாவி ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாகல்கோட், கலபுர்கி, விஜயபுரா, பல்லாரி, ஹாசன் ஆகிய மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
உடுப்பியில் இருவர் மற்றும் சிக்கமகளூருவில் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர். பெலகாவி, விஜயபுரா, தாவணகெரே மற்றும் கலபுர்கி ஆகிய இடங்களில் வீடு இடிந்து விழுந்ததில் மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளனர். கர்நாடகாவில் மேலும் மூன்று நாட்களுக்கு கனமழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
கர்நாடகாவில் இருந்து தமிழ எல்லையான பிலிகுண்டுலுவுக்கு வரும் காவிரி நீரின் அளவு வினாடிக்கு 7,500 கன அடியாக அதிகரித்துள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.