பா.ஜ.க கர்நாடகா மேலவை உறுப்பினர் சி.டி.ரவிக்கு எதிரான வழக்கின் விசாரணைக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்து வழக்கின் விசாரணையை ஒத்திவைத்துள்ளனர்.கர்நாடக சட்டமன்றத்தில் தகாத வார்த்தைகளைப் பயன்படுத்தியதாக அமைச்சர் லட்சுமி ஹெப்பால்கர் அளித்த புகார் அடிப்படையில் சி.டி.ரவி மீது முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்யப்பட்டது. இதனை எதிர்த்து கர்நாடக மேலவை பா.ஜ.க உறுப்பினர் சி.டி.ரவி தாக்கல் செய்திருந்த மனுவை விசாரித்த கர்நாடகா உயர்நீதிமன்றம், சட்டமன்றத்திற்குள் ஒரு பெண்ணின் கண்ணியத்தை அவமதிக்கும் செயல்களை சட்டமன்ற உறுப்பினரின் சிறப்புரிமையின் கீழ் பாதுகாக்க முடியாது என்று திட்டவட்டமாக தெரிவித்து அவரது மனுவை தள்ளுபடி செய்திருந்தது.
இந்த நிலையில் மேற்கண்ட கர்நாடகா உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக சி.டி.ரவி தாக்கல் செய்திருந்த மேல்முறையீட்டு மனுவானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் ராஜேஷ் பிந்தல் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ராம்சங்கர் இந்த விவகாரத்தில் கர்நாடகா உயர்நீதிமன்றம் சில விஷயங்களை கருத்தில் கொள்ளாமல் உத்தரவு பிறப்பித்துள்ளது.

மேலும் மேல்முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் ஒரு இறுதி உத்தரவு பிறப்பிக்கப்படும் வரையில் கீழமை நீதிமன்ற விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும் என கோரினார். இதையடுத்து நீதிபதிகள், இந்த மேல முறையீட்டு மனு தொடர்பாக கர்நாடகா அரசு பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பித்தனர். அதேநேரத்தில் சி.டி.ரவி விவகாரம் தொடர்பாக கீழமை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணை உட்பட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தடை விதித்தும் உத்தரவிட்டு வழக்கின் விசாரணையை ஒத்திவைத்தனர்.
தனியார் பல்கலைக்கழகத்தில் மோசடி – துணை வேந்தர் உட்பட 10 பேர் கைது!