கேரளாவில் கொட்டும் கனமழை- ஆரஞ்ச் அலர்ட்
கேரளாவில் இன்றும் தொடரும் பருவமழை காரணமாக ஆறு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
திருச்சூர் மாவட்டம் சாலக்குடியிலும் மலப்புரம் மற்றும் கோட்டயம் மாவட்டங்களில் வீசிய சூறாவளி காற்றில் நூற்றுக்கணக்கான மரங்கள் முறிந்தும் வேரோடும் சாய்ந்தும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முறிந்த மரங்கள் மின் கம்பங்கள் மீது விழுந்துள்ளது. இதனால் மின் கம்பங்கள் விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது. முறிந்த மரங்கள் வீடுகள் மீது விழுந்ததில் ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. ஒவ்வொரு மாவட்டங்களிலும் பல கோடி ரூபாய் மதிப்பிலான பொருட்சேதம் ஏற்பட்டுள்ளது. மழையோடு சூறாவளி காற்றும் வீசியதால் திருச்சூர் மலைப்புரம் மாவட்டங்களில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. 11 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. இடுக்கி, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய 6 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


மலையோர மாவட்டங்களில் பெருமழை பெய்து வரும் காரணத்தால் காட்டார்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் மழை நீர் புகுந்துள்ளது. பாதிக்கப்பட்ட மக்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மழைநீர் வேகமாக வடிவதற்கு தேவையான நடவடிக்கைகளை அந்தந்த மாவட்ட நிர்வாகம் செய்து வருகிறது. மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்து மின்சாரம் துண்டிக்கப்பட்ட பகுதிகளில் மின் இணைப்புகள் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகளும், முறிந்து விழுந்த மரங்களை அப்புறப்படுத்தும் நடவடிக்கையிலும் தீயணைப்பு மற்றும் மின்வாரியத் துறையினரும் ஈடுபட்டுள்ளனர்.

கேரளாவில் பருவ மழை மேலும் இரண்டு நாட்களுக்கு தீவிரமாக இருக்கும் என்பதால் மக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர். மேலும் தேவையான பாதுகாப்பு நடவடிக்கைகளில் மாநில அரசு அந்தந்த மாவட்ட நிர்வாகிகளுடன் இணைந்து எடுத்து வருகிறது.


