குடியரசுத் துணைத் தலைவர் வேட்பாளராக தமிழரை அறிவித்தாலும் தமிழர்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.காங்கிரஸ் முன்னாள் தலைவர் மகாதேவன் பிள்ளையின் நூற்றாண்டு பிறந்தநாள் மற்றும் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் 80-வது பிறந்த நாளையொட்டி, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, முன்னாள் தலைவர் கே.வி. தங்கபாலு உட்பட மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சத்தியமூர்த்தி பவனில் வைக்கப்பட்ட தலைவர்களின் திருவுருவப்படங்களுக்கு மாலை அணிவித்தனர்.
அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய செல்வப்பெருந்தகை, தூய்மை பணியாளர்கள் நிரந்தரமாக்கப்பட வேண்டும் என்பதே தங்கள் நிலைப்பாடு என்றார். தனியார் நிறுவனத்திற்கு தூய்மை பணியை ஒப்படைப்பதை விட கூட்டுறவு முறையில் தூய்மை பணியாளர்களை நிரந்தரமாக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்தார்.இந்தியாவில் மின்சாரம் இல்லாத வீடு இல்லை என சுதந்திர தின உரையில் பிரதமர் கூறிய நிலையில், தலைமை தேர்தல் அதிகாரியோ, வீடு இல்லாத வாக்காளர்கள் என கூறுவது வேடிக்கையாக உள்ளதென செல்வப்பெருந்தகை விமர்சித்தார்.

குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலுக்கான வேட்பாளராக தமிழரை அறிவித்தாலும் தமிழர்கள் பாஜகவை ஏற்றுக் கொள்ள மாட்டார்கள் என தெரிவித்த அவர், மண்ணை கைப்பற்ற மன்னர்கள் படையெடுப்பது போல், உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழ்நாட்டிற்கு தொடர்ச்சியாக படையெடுத்து வந்தாலும் பலன் ஏதும் ஏற்படாது என்று செல்வப்பெருந்தகை சாடினார்.