சிந்தூர் போரை நிறுத்தும் வல்லமை கொண்ட டிரம்பின் ஆதிக்கம் இந்தியாவில் இருப்பது குறித்து இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும், ஆனால் டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு கிடையாது என தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை கூறியுள்ளார்.
முன்னாள் பாரத பிரதமர் ராஜீவ் காந்தியின் 81 வது பிறந்த நாளான இன்று, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ராஜீவ் காந்தியின் திருவுருவப்படத்திற்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வ பெருந்தகை மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

அவரைத் தொடர்ந்து சட்டமன்ற காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர்கள் கிருஷ்ணசாமி, பீட்டர் அல்போன்ஸ், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.எம்.ஹாரூன், சட்டமன்ற உறுப்பினர்கள் ஹசன் மௌலானா, ரூபி மனோகரன் உள்ளிட்ட நிர்வாகிகள் மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து சென்னை மாநகர காங்கிரஸ் மாமன்ற உறுப்பினர்கள் சார்பில் குழந்தைகள், தூய்மை பணியாளர்கள் பெண்கள் மற்றும் பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. செல்வப் பெருந்தகை குழந்தைகளுக்கு கலர் பென்சில் நோட்டு புத்தகம் உள்ளிட்ட பள்ளி உபகரண பொருட்களை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் செல்வப் பெருந்தகை, இந்தியாவை தலை நிமிர செய்த தலைவர் ராஜீவ் காந்தி அவர்களது பிறந்த நாளை இன்று கொண்டாடி வருகிறோம். சிந்தூர் போரை நிறுத்தும் வல்லமை கொண்ட டிரம்பின் ஆதிக்கம் இந்தியாவில் இருப்பது குறித்து இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் ஆனால் இது குறித்து டிரம்பை எதிர்த்து கேள்வி கேட்கும் தைரியம் பிரதமர் மோடிக்கு கிடையாது, என்றார்.
அன்று ஈராக் மீது போர் தொடுக்க அமெரிக்கா, எரிபொருள் நிரப்புவதற்கான இடம் வேண்டுமென இந்தியாவை நாடியது. அப்போது பிரதமராக இருந்த ராஜீவ் காந்தி அவர்கள் ஈராக் மீது போர் தொடுக்க அனுமதிக்க மாட்டோம் என்றும் எரிபொருள் நிரப்புவதற்கான இடத்தை வழங்க மாட்டோம் என்றும் தீர்க்கமாக தெரிவித்தார்.
அன்றைய காங்கிரஸ் பிரதமர்களையும் இன்றைய பிரதமரையும் இன்றைய இளைஞர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்றும் ஒப்பிட்டுப் பார்க்க வேண்டும் என கூறியுள்ளாா்.
‘ராவணன்’ படத்தை தொடர்ந்து மீண்டும் இணையும் விக்ரம் – பிரித்விராஜ்!