Homeசெய்திகள்தமிழ்நாடுநள்ளிரவு 12 மணி வரை நீண்ட பரபரப்பு விசாரணை: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனை...

நள்ளிரவு 12 மணி வரை நீண்ட பரபரப்பு விசாரணை: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் – போலீஸ் கோரிக்கை நிராகரிப்பு!

-

- Advertisement -

தமிழக முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசியதாகக் கைது செய்யப்பட்ட திருச்செந்தூர் சட்டமன்ற உறுப்பினரும், முன்னாள் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனுக்குத் திருச்செந்தூர் நீதிமன்றம் நிபந்தனை ஜாமீன் வழங்கி உத்தரவிட்டுள்ளது. காவல் துறையினரின் நீதிமன்றக் காவல் (ரிமாண்ட்) கோரிக்கையை நீதிபதி அதிரடியாக நிராகரித்தார்.நள்ளிரவு 12 மணி வரை நீண்ட பரபரப்பு விசாரணை: முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு நிபந்தனை ஜாமீன் – போலீஸ் கோரிக்கை நிராகரிப்பு!

​கடந்த ஜூன் 20ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், அனிதா ராதாகிருஷ்ணன் முதலமைச்சர் குறித்து அவதூறாகவும் ஒருமையிலும் பேசியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாகத் தமிழக வெற்றிக்கழகத்தின் (தவெக) ஆத்தூர் நகரச் செயலாளர் அளித்த புகாரின் பேரில், அனிதா ராதாகிருஷ்ணன் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் ஆத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். ​இவ்வழக்கில் விசாரணைக்கு ஆஜராகக் கோரி காவல் துறை சார்பில் 41A நோட்டீஸ் அனுப்பப்பட்டது. இரண்டாவது முறை நோட்டீஸ் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, வரும் ஜூலை 10ஆம் தேதி விசாரணைக்கு ஆஜராவதாக அனிதா ராதாகிருஷ்ணன் தனது வழக்கறிஞர் மூலம் பதிலளித்திருந்தார். இதற்கிடையே அவர் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடியான நிலையில், நேற்று ஆத்தூர் பேரூராட்சி அலுவலகத்தில் ஆய்வுப் பணியில் இருந்த அனிதா ராதாகிருஷ்ணனை போலீஸார் அதிரடியாகக் கைது செய்தனர்.

we-r-hiring

​5 மணி நேர விசாரணை – மருத்துவப் பரிசோதனை
​கைது செய்யப்பட்ட அவரை மாவட்ட காவல் அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று போலீஸார் சுமார் 5 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். மாலை 6 மணியளவில் தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு, 3 மணி நேரத்திற்கும் மேலாகப் பல்வேறு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டு தகுதிச் சான்று பெறப்பட்டது.

​நள்ளிரவில் இயங்கிய நீதிமன்றம் – இருதரப்பு காரசார வாதம்
​வழக்கமாக இரவு நேரத்தில் கைதிகளை ஆஜர்படுத்தும்போது நீதிபதிகள் தங்கள் இல்லங்களிலிருந்தே விசாரிப்பது வழக்கம். ஆனால், இந்த வழக்கின் முக்கியத்துவத்தைக் கருதி திருச்செந்தூர் நீதித்துறை நடுவர் (Magistrate) சிதம்பரம் அவர்கள், இரவு 10:30 மணிக்கு நீதிமன்றத்திலேயே காத்திருந்து விசாரணையைத் தொடங்கினார். நள்ளிரவு 12 மணி வரை சுமார் ஒன்றரை மணி நேரம் இந்த விசாரணை நீதிமன்றத்தில் நடைபெற்றது.

​அரசு தரப்பு வாதம்
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வனிதா, “முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தொடர்ந்து இதுபோன்று அவதூறாகப் பேசி வருகிறார். இவரை வெளியில் விட்டால் மாவட்டத்தில் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும். எனவே, இவரை நீதிமன்றக் காவலில் (சிறையில்) வைக்க உத்தரவிட வேண்டும்” என வாதாடினார்.

​அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பு வாவம்
அனிதா ராதாகிருஷ்ணன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜான் அலெக்சாண்டர், “இந்தக் கைதே சட்டவிரோதமானது. உச்ச நீதிமன்ற விதிமுறைகள் சரியாகப் பின்பற்றப்படவில்லை. 41A நோட்டீஸிற்குப் பதிலளித்து, வரும் 10ஆம் தேதி விசாரணைக்கு வருவதாகக் கூறிய பிறகும் ஏன் இவ்வளவு அவசரமாகக் கைது செய்ய வேண்டும்? ஒரு மக்கள் பிரதிநிதியும், முன்னாள் அமைச்சருமான இவரால் சட்டம்-ஒழுங்குப் பிரச்சினை ஏற்படும் என்று காவல் துறை கட்டுக்கதைகளைக் கூறுகிறது. எனவே, அவரது உடல்நிலை மற்றும் சட்டவிரோதக் கைதை ஏற்று அவருக்கு ஜாமீன் வழங்க வேண்டும்” என வாதிட்டார்.

நீதிபதி அதிரடி தீர்ப்பு – ஆதரவாளர்கள் கொண்டாட்டம்
​இருதரப்பு வாதங்களையும் விரிவாகக் கேட்டறிந்த நீதித்துறை நடுவர் சிதம்பரம், காவல் துறையின் ரிமாண்ட் கோரிக்கையை முழுமையாக நிராகரித்தார். ​அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கி அவர் பிறப்பித்த உத்தரவில், “தலா 10,000 ரூபாய் மதிப்பிலான இரு நபர் பிணை (Two sureties) வழங்க வேண்டும். மேலும், அடுத்த 10 நாட்களுக்கு தினமும் காலை 10 மணிக்குச் சம்பந்தப்பட்ட ஆத்தூர் காவல் நிலையத்தில் ஆஜராகி அனிதா ராதாகிருஷ்ணன் கையெழுத்திட வேண்டும்” என்று நிபந்தனை விதித்தார். ​நீதிமன்றக் காவலுக்கு அனுப்பாமல் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதைத் தொடர்ந்து, நள்ளிரவிலும் நீதிமன்றத்திற்கு வெளியே திரண்டிருந்த அவரது நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் பட்டாசு வெடித்தும், முழக்கங்களை எழுப்பியும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் திருச்செந்தூர் நீதிமன்ற வளாகப் பகுதியில் நள்ளிரவில் பெரும் பரபரப்பு நிலவியது.

கொள்கை முரண்பாடா? சமரச அரசியலா?: தவெகவின் புதிய சேர்க்கைகளும் எழும் காரசாரக் கேள்விகளும்!

MUST READ