பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக மாற்றுத்திறனாளிகள் சட்டப் பாதுகாப்பு சங்கம் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சென்னை எழும்பூரில் ராஜரத்தினம் மைதானம் அருகே மாற்றுத்திறனாளிகள் சமூகத்தின் வாழ்க்கைத் தரம் மேம்படுத்த வேண்டியும் மாற்றுத்திறனாளிக்காக முக்கிய கோரிக்கைகள் மற்றும் கிடப்பில் கிடக்கும் அரசாணைகளை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் 100க்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டு தங்களது கோரிக்கையை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தமிழக மாற்றுத்திறனாளிகளின் சட்டப் பாதுகாப்பு சங்க மாநில தலைவர் சண்முகசுந்தரம் பேசியது , மாற்றுத்திறனாளி தொழில் முனைவோரை உருவாக்கிட தமிழ்நாட்டிலுள்ள அனைத்து சிட்கோ தொழில்பேட்டைகளிலும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஐந்து சதவீத இட ஒதுக்கீடு முறையில் தொழில்மனை வழங்க அரசு உத்தரவிட வேண்டும்.
தமிழக அரசு வளாகங்களில் எந்தெந்த அரசு வளாகங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு ஆவின் பாலகம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது என்பதை அரசாணை நிலை எண் 20ல் தெளிவுபட விளக்க வேண்டும் .தற்போதைய அரசாணையின்படி மாற்றுத்திறனாளிகள் ஆவின் பாலகம் அமைப்பதில் அரசு அதிகாரிகளால் அங்கும் இங்கும் அழைக்களிக்கப்படுகின்றனர்.
உள்ளாட்சி அமைப்புகள் மூலம் கட்டப்படும் வணிக வளாகங்கள் மற்றும் கடைகளில் மாற்றுத்திறனாளிகளுக்கு 5% இட ஒதுக்கீடு முறையில் கடைகள் வழங்கும் அரசாணை எண் 82ல் அரசு அதிகாரிகள் ஏலம் விடுவதில் முறைகேடு செய்து வருகின்றனர். முறைகேடுகள் செய்கின்ற அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மாற்றுத்திறனாளிகள் சாலை ஓரங்களில் தள்ளுவண்டிகள் நிறுத்தி தொழில் செய்து பிழைக்க வேண்டி பிறப்பிக்கப்பட்ட அரசாணை நிலை எண் 23 அடிப்படையில் மாநகராட்சிகள் நகராட்சிகள் உள்ளிட்ட உள்ளாட்சி பகுதிகளில் தொழில் செய்து வருகின்றனர் .அவர்களின் கடைகள் அப்புறப்படுத்தப்படுவதும் இடமாற்றம் செய்வது போன்ற செயல்களை அதிகாரிகள் மிகுந்த கெடுபிடி கொடுத்து கடுமையான நெருக்கடி கொடுத்து மாற்று திறனாளிகளை தொழில் செய்ய விடாமல் தடுத்து வருகின்றனர் .அரசு இதற்கு உடனடியாக தீர்வு காண வேண்டும் என கூறினார்.