வெங்கடரமணனை பள்ளிக்கல்வித்துறைக்கு அமைச்சராக நியமிக்கக்கூடாது என ஒட்டுமொத்த ஆசிரியர் சங்கங்களும் ஒருமித்த எதிர்ப்பு தெரிவிக்கின்றன.
சட்டப்பேரவை தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. 108 இடங்களில் வெற்றி பெற்று பெரும்பான்மை கிடைக்காவிட்டாலும், திமுகவின் கூட்டணி கட்சிகளின் தயவோடு ஆட்சியை பிடித்துள்ளார் விஜய்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை (மே.10) முதலமைச்சராக விஜயும், அமைச்சர்களாக செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், பிரபு, கீர்த்தனா, வெங்கடரமணன், அருண்ராஜ், நிர்மல்குமார் ஆகிய 9 பேர் அமைச்சர்களாக பொறுப்பேற்றனர்.

சட்டப்பேரவையில் நம்பிக்கை வாக்கெடுப்பு, தோழமைக் கட்சிகள் ஆதரவு என தொடர அரசியல் நிகழ்வுகளால் அமைச்சரவை இலாக்காக்கள் ஒதுக்கீடு தள்ளிப் போகிறது. அதைவேளையில், த.வெ.க அமைச்சர்கள் யாருக்கு என்னென்ன துறை என சமூக வலைதளங்களில் தகவல்களை த.வெ.க விர்சுவல் வாரியர்ஸ் பரப்பி வருகின்றனர்.
அதில், மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில் வெற்றி பெற்ற வெங்கடரமணனுக்கு பள்ளிக் கல்வித் துறை ஒதுக்கீடு செய்யப்படலாம் என சமூக வலைதளங்களில் பகிரப்படும் தகவல்களால் பள்ளிக்கல்வித்துறை அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளது.
இந்தியாவில் பள்ளிக்கல்வித்துறையில் சிறந்த மாநிலமாக விளங்கும் தமிழ்நாட்டில் ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் உள்ள ஒருவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக வந்தால், மாணவர்களின் எதிர்காலம் என்னவாகும் என்பதே ஆசிரியர்களின் கவலையாக உள்ளது.
மும்மொழிக் கொள்கை, பி.எம் ஸ்ரீ திட்டத்தில் தமிழ்நாட்டை இணைய தொடர்ந்து கொடுக்கப்படும் அழுத்தங்கள் என தொடர் சவால்கள் காத்திருக்கும் இந்த வேளையில், நாட்டிலேயே முதன்முறையாக மாநிலத்திற்கென்று கல்விக் கொள்கை வகுத்த சமூக நீதி மண்ணான தமிழ்நாட்டில், ஆர்.எஸ்.எஸ் சித்தாந்தத்தில் உள்ள ஒருவர் பள்ளிக்கல்வித்துறை அமைச்சராக பொறுப்பேற்றால், குழந்தைகளின் எதிர்காலம் என்னவாகும் என்பதே அனைவரின் கலக்கமாக உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்பு வராத நிலையில் இது குறித்து எப்படி பேசுவது, அரசுக்கு அழுத்தம் கொடுப்பதென்று தெரியாமல் ஆசிரியர் சங்கங்கள் மூச்சுமுட்டி நிற்கின்றன.
திருவள்ளுவருக்கு காவிசாயம், அறிவியலுக்கு எதிரான மூடநம்பிக்கைகள் என ஏதோ ஒரு சிறிய மாற்றம் கூட மாணவர்கள் மனதில் பெரும் விஷத்தை விதைத்துவிடும் என கவலை தெரிவிக்கின்றன ஆசிரியர் சங்கங்கள்.
கம்யூனிஸ்டுகள், விடுதலை சிறுத்தை கட்சியின் ஆதரவோடு மத சார்பின்மையை உயர்த்தி பிடிக்கும் த.வெ.க அரசு இதனை பரிசீலனை செய்து தமிழையும், தமிழ்நாட்டின் சமூக நீதியை காக்கும் ஒருவரை பள்ளி கல்வித்துறை அமைச்சராக நியமிக்க வேண்டும் என்பது பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், ஆசிரியர் சங்கங்கள் அனைவரது ஒருமித்த கருத்தாக இருக்கிறது.
3 ஆம் கட்ட வாக்காளர் பட்டியல் திருத்தம் மே 30 முதல் தொடக்கம் – தேர்தல் ஆணையம் அறிவிப்பு!
