பாமக சின்னத்தை முடக்க வேண்டும் என நினைத்து மருத்துவர் ராமதாசுடன் இருக்கும் ஒரு சிலருக்கு பதிலடியாக இந்த தீர்ப்பு வந்துள்ளது என பாமக பொருளாளர் திலகபாமா மருத்துவர் ராமதாஸுக்கு பதிலடி கொடுத்துள்ளாா்.
இது குறித்து சிவகாசியில் செய்தியாளர்களை சந்தித்த பாமக பொருளாளர் திலகபாமா, “திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என நீதிமன்றம் தீர்ப்பு கொடுத்த பின்னரும் தமிழக அரசின் அறநிலையத்துறை சார்பில் மேல்முறையீடு செய்துள்ளது மோசமான செயல். இதற்கு தமிழக மக்கள் சார்பில் வருத்தம் தெரிவிப்பதுடன் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அறநிலையத்துறையை யார் முடுக்கி விட்டார்கள் என்பது தெரிய வேண்டும். பாமகவின் நிறுவனராக மருத்துவர் ராமதாசை ஏற்றுக் கொள்கிறோம். 40 ஆண்டுகளாக கட்சியை ஒரு நபராக வளர்க்கவில்லை, பாட்டாளி சொந்தங்கள் இணைந்து வளர்த்தெடுத்திருக்கிறார்கள்.
கட்சியை அடுத்த தலைமுறைக்கு பத்திரப்படுத்தி கொடுப்பதற்கும், தமிழகத்தின் தலைமுறையை காப்பதற்கு கடுமையான முயற்சிகளை எடுக்க வேண்டிய கட்டத்தில் அன்புமணி இருக்கிறார். பாசப் போராட்டத்தையும் தாண்டி, தமிழக மக்களுக்காக உழைப்பதற்கு அவர் முறையான வழியில் சென்று கொண்டிருக்கிறார். அன்புமணி ராமதாஸ் வெறும் அதிகாரத்தை கைப்பற்ற போராடவில்லை, மக்களுடன் அவர் இருப்பதால் அதிகாரம் அவர் கையில் வந்து சேர்கிறது. சின்னத்தை முடக்காமல் இருப்பதற்கு தேவையான ஆவணங்கள் எங்களிடம் இருக்கிறது. சதிகாரர்கள் விரைவில் வெளியேற்றப்படுவார்கள்.



