spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்தமிழ்நாடுதொழில்துறையை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை அவசியம் – எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்

தொழில்துறையை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை அவசியம் – எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்

-

- Advertisement -

திருப்பூர், கோவை, ஆம்பூர் உள்ளிட்ட தொழில் மண்டலங்களைப் பாதுகாக்க மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி வலியுறுத்தியுள்ளது.தொழில்துறையை காப்பாற்ற மத்திய-மாநில அரசுகள் போர்க்கால நடவடிக்கை அவசியம் – எஸ்.டி.பி.ஐ வலியுறுத்தல்இதுதொடர்பாக எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; ”அமெரிக்க அரசு இந்தியப் பொருட்களுக்கு 50 சதவீதம் வரை வரி உயர்த்தியது இந்திய தொழில்துறையில் கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, தமிழ்நாட்டின் முக்கிய தொழில் மையங்களான திருப்பூர், கோவை மற்றும் ஆம்பூர் பகுதிகளில் ஜவுளி, ஆயத்த ஆடை, பொறியியல் மற்றும் தோல் பொருட்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதித் துறைகள் பெரும் பாதிப்பை எதிர்கொள்கின்றன. இந்த வரிவிதிப்பு இந்தியப் பொருட்களின் போட்டித்தன்மையைக் குறைத்து, விலையை உயர்த்தி, ஏற்றுமதி அளவைக் குறைக்கும் அபாயத்தை உருவாக்கியுள்ளது. இதனால், லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வேலை இழப்பு மற்றும் பொருளாதாரத் தேக்கத்தை எதிர்கொள்ளும் அபாயம் உள்ளது.

திருப்பூர், இந்தியாவின் முக்கிய ஜவுளி மற்றும் ஆயத்த ஆடை ஏற்றுமதி மையமாக உள்ளது. அமெரிக்க சந்தையை பெருமளவு நம்பியுள்ள இப்பகுதியில், காட்டன் ஆடைகளுக்கு 69% மற்றும் செயற்கை நூலிழை ஆடைகளுக்கு 82% வரி உயர்வு காரணமாக ஆடை ஏற்றுமதி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், 500 கோடி ரூபாய் மதிப்பிலான 12 லட்சம் ஆடைகள் தேக்கமடைந்துள்ளன, மேலும் 25 லட்சம் அமெரிக்க பனியன் ஆர்டர்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால், சுமார் 5 லட்சம் தொழிலாளர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. டையிங், பிரிண்டிங், நிட்டிங் போன்ற உபதொழில்களும் பாதிக்கப்பட்டு, திருப்பூர் முழுமையாக முடங்கும் நிலை உருவாகியுள்ளது.

we-r-hiring

கோவையின் பொறியியல் நிறுவனங்கள் ஆண்டுக்கு 4,000 கோடி ரூபாய் மதிப்பிலான ஏற்றுமதியை நம்பியுள்ளன. 50% வரி உயர்வு மற்றும் மத்திய அரசின் 12% ஸ்டீல் இறக்குமதி வரி உயர்வு ஆகியவை உற்பத்திக் குறைவை ஏற்படுத்தி, இத்தொழிலை நெருக்கடிக்கு உள்ளாக்கியுள்ளன.

ஆம்பூர் தோல் தொழில் மையமும் இந்த வரிவிதிப்பால் பாதிக்கப்பட்டு கடும் சவால்களை எதிர்கொள்கிறது. அமெரிக்க அரசின் நடவடிக்கையால் சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (SMEs) இந்த வரி உயர்வைத் தாங்க முடியாமல் மூடப்படும் அபாயத்தில் உள்ளன. இது விநியோகச் சங்கிலியில் இடையூறு ஏற்படுத்தி, மறைமுகமாக மற்ற துறைகளையும் பாதிக்கும்.

எனவே, மத்திய மற்றும் மாநில அரசுகள் இந்திய தொழில்துறையையும் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். மத்திய அரசு ஏற்றுமதியாளர்களுக்கு 10% வரி மானியம் வழங்கி, அமெரிக்க வரிவிதிப்பின் தாக்கத்தை ஈடுகட்ட வேண்டும். அமெரிக்காவைத் தவிர, ஐரோப்பிய ஒன்றியம், ஆஸ்திரேலியா மற்றும் ஆசிய நாடுகளில் புதிய சந்தைகளை அடையாளம் கண்டு, ஏற்றுமதி ஒப்பந்தங்களைத் துரிதப்படுத்த வேண்டும். சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்கு குறைந்த வட்டி விகிதத்தில் கடன்கள் வழங்க அரசுகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். அமெரிக்க அரசுடன் உயர்மட்ட பேச்சுவார்த்தைகள் மூலம் வரி விகிதங்களைக் குறைக்க முயற்சிக்க வேண்டும். தமிழக அரசு, திருப்பூர் ஆடைத் தொழிலைப் பாதுகாக்க, பனியன் துறைக்கென தொழில்துறையினர் அடங்கிய குழு அமைத்து, தனி வாரியம் ஏற்படுத்தி, அரசு வங்கிகள் மூலம் உதவி மற்றும் மானியங்களை வழங்க வேண்டும்.

இதுபோன்ற விரைவான நடவடிக்கைகள் மூலம் இந்தியாவின் தொழில்துறை மற்றும் ஏற்றுமதி திறனைப் பாதுகாக்க வலுவான, ஒருங்கிணைந்த அணுகுமுறை அவசியமாகிறது. இத்தொழிற்துறைகளைப் பாதுகாக்காவிட்டால், லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வு பாதிக்கப்படும் என்பதை அரசுகள் உணர்ந்து உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்”  என எஸ்டிபிஐ கட்சியின் மாநிலத் தலைவர் நெல்லை முபாரக் தெரிவித்துள்ளார்.

‘ஜெயிலர் 2’ படத்தில் இணைந்த பிரபல வில்லி நடிகை…. யார் தெரியுமா?

MUST READ