ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை
அவதூறு வழக்கில் ராகுல்காந்திக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி சூரத் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.

கடந்த 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலின்போது கர்நாடக பிரச்சார கூட்டத்தில் மோடியின் பெயர் பற்றி ராகுல் அவதூறாக பேசியதாக புகார் அளிக்கப்பட்டது. 2019 பொதுத்தேர்தல் பரப்புரையில், “எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற பெயர் இருக்கிறது” என ராகுல் காந்தி பேசியிருந்தார். இதற்கு எதிராக பாஜக எம்.எல்.ஏ புர்னேஷ் மோடி வழக்கு தொடர்ந்தார். 2019 ஆம் ஆண்டு தொடரப்பட்ட வழக்கில் 4 ஆண்டுகளுக்கு பின் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அவதூறு வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டதை அடுத்து சூரத் நீதிமன்றத்தில் ராகுல்காந்தி ஆஜரானார்.

ராகுல்காந்திக்கு சிறை தண்டனை விதிக்கப்பட்டதை எதிர்த்து காங்கிரஸ் கட்சியினர் சூரத் நீதிமன்றத்துக்கு வெளியே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இந்த வழக்கில் 30 நாட்களில் மேல்முறையீடு செய்ய ராகுல்காந்திக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மேல்முறையீடு செய்ய வசதியாக ராகுல்காந்திக்கு பிணை வழங்கி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. ரூ.15,000 பிணைத் தொகை செலுத்தி ராகுல்காந்தி ஜாமின் பெற நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


