ஐ.ஏ.எஸ். அதிகாரி என்றால் நீதின்றத்தை விட மேலானவர் என நினைத்துக் கொள்வதா என சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உயர்நீதி மன்றம் கடும் கண்டனம்.நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் நாளை நேரில் ஆஜராக வேண்டும் என உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது. சென்னையில் சட்டவிரோத கட்டுமானங்கள் தொடர்பாக வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி ஸ்ரீராம் மற்றும் நீதிபதி சுந்தர்மோகன் அமர்வில் விசாரணைக்கு வந்த போது, நீதிமன்ற உத்தரவை செயல்படுத்தாது ஏன் என கேள்வி எழுப்பியது. நீதிமன்றதின் உத்தரவை செயல்படுத்தாததற்காக ஆணையருக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்து, அதனை அவரது ஊதியத்தில் இருந்து பிடித்தம் செய்து அடையாறு புற்றுநோய் மருத்துவமனைக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விதிக்கப்பட்ட ரூ.1 லட்சம் அபராதத்தை நிறுத்தி வைக்க முறையிட்டபோது, ஐஏஎஸ் அதிகாரி என்றால் நீதிமன்றத்தை விட மேலானவர் என்று தன்னை நினைத்து கொள்கிறாரா?, எங்கள் அதிகாரத்தை காண்பிக்கலாமா? என்று காட்டமாக கூறிய சென்னை உயர்நீதி மன்ற தலைமை நீதிபதி கே.ஆர்.ஸ்ரீராம், ” வழக்கறிஞர்கள் தவறான பிரமாண பத்திரத்தை கொடுத்திருந்தாலும் அதனை நன்கு படித்துப் பார்த்து கையெழுத்திட்டிருக்க வேண்டும், இல்லையெனில் அவர் ஆணையராக இருக்கவே தகுதியற்றவர்” என்று தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவர் நேற்று ஏன் ஆஜராகவில்லை என கேள்வி எழுப்பிய தலைமை நீதிபதி, உரிய ஆவணங்களுடன் நாளை நேரில் ஆஜராகும் படி சென்னை மாநகராட்சி ஆணையருக்கு உத்தரவிட்டார்.
