கோவை வடவள்ளி அருகே வாடகைக்கு இருந்த பெண்ணின் வீட்டிலிருந்த ரூ.1.20 கோடியை திருடிய உரிமையாளர் கைது செய்யப்பட்டாா். வீட்டை புகைப்படம் எடுக்கச் சென்ற போது பணத்தை பார்த்து திருடியது அம்பலமானது.கோவை இடையர் பாளையம் பகுதியை சேர்ந்தவர் வேல்முருகன் (41). இவர் டெய்லரிங் தொழில் செய்து வருகிறார். மேலும் வங்கியில் கடன் வாங்கி கோவை வடவள்ளி பொங்காளியூரில் சமீபத்தில் வீடு கட்டியுள்ளார். இதில் வரும் வாடகையை வைத்து கடனை அடைக்க திட்டமிட்ட வேல்முருகன் இது குறித்து ஓ.எல்.எஸ் தளத்தில் விளம்பரம் செய்தார். ரூ.30 ஆயிரம் வாடகைக்கு விடப்படும் என விளம்பரபடுத்திய நிலையில், கடந்த 2 மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர் ராமகிருஷ்ணன், மனைவி பிரியா ராமகிருஷ்ணன் வேல்முருகனை தொடர்பு கொண்டு வாடகைக்கு வீடு வேண்டும் என கேட்டுள்ளார். இதனையடுத்து ரூ.20 லட்சத்திற்கு ஒப்பந்தம் போடப்பட்டு வீடு பிரியாவிடம் கொடுக்கப்பட்டது.
இந்நிலையில் பிரியா தனது வீட்டில் சுமார் 30-க்கும் மேற்பட்ட பூனைகள், நாய்களை வளர்த்து வந்ததாக தெரிகிறது. இதனால் வீடு பாழாகி விடும் எனக் கூறி வேல்முருகன் வீட்டை காலி செய்ய வேண்டும் என வற்புறுத்தி வந்தார். ஆனால் ஒப்பந்தம் போட்டதால் வீட்டை காலி செய்ய முடியாது என பிரியா மறுத்துவிட்டார். இது தொடர்பாக இருவருக்கும் பல முறை தகராறு ஏற்பட்ட நிலையில், விவகாரத்தை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றுள்ளனர். இறுதியாக ரூ.20 லட்சம் பணத்தை கொடுத்துவிட்டால் வீட்டை காலி செய்ய பிரியா ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதனையடுத்து வீட்டை வேறுநபர்களுக்கு கொடுக்க வேல்முருகன் திட்டமிட்டார்.

அதன்படி வீட்டை பார்க்க வரும் நபர்களை பிரியா உள்ளே விடாமல் தடுத்து வந்ததாக தெரிகிறது. வங்கியில் கடன் பெற ஊழியர்கள் வந்த போதும் அவர் உள்ளே விடவில்லை. இதனிடையே பிரியா ரேஸ்கோர்ஸ் பகுதியில் இருந்த தங்களுக்கு சொந்தமான சொத்தை விற்பனை செய்து ரூ.3.24 கோடி பெற்று அதில் தனது கடன் உள்ளிட்ட செலவுகள் போக மீதம் உள்ள ரூ.1.20 கோடியை வீட்டில் வைத்திருந்தார். இந்நிலையில் நேற்று பிரியா வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்றிருந்தார். அப்போது வீட்டிற்கு வந்த வேல்முருகன் வீட்டை புகைப்படம் எடுப்பதற்காக கதவை தட்டி பார்த்துள்ளார். நீண்ட நேரமாக யாரும் கதவை திறக்காததால் கிளம்பிச் சென்ற அவர் மீண்டும் வீட்டின் பின் வழியாக ஏறி வீட்டிற்குள் சென்று ஒவ்வொரு அறையாக புகைப்படம் எடுத்துள்ளார். அப்போது படுக்கை அறையில் இருந்த ஒரு பெட்டியை திறந்து பார்த்த போது அதில் கட்டுக்கட்டாக பணம் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து பணத்தை எடுத்துக் கொண்டு வேல்முருகன் கிளம்பியுள்ளார்.
மேலும் பணத்தை வேறு பையில் மாற்றிவிட்டு பெட்டியை வீசிய வேல்முருகன் அதனை தனது தையல் கடையில் பணியாற்றும் பெண்ணின் வீட்டிற்கு எடுத்துச் சென்று ஜாக்கெட் பிட்டுகள் எனக் கூறி வைத்துச் சென்றார். இதனிடையே வீட்டிற்கு வந்த பிரியா படுக்கை அறையில் துணிகள் கலைந்து கிடந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்து சோதனையிட்ட போது பெட்டியில் இருந்த ரூ.1.20 கோடி மாயமானது தெரிய வந்தது. இதையடுத்து பிரியா வடவள்ளி போலீசில் புகார் அளித்தார். புகார் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார் ஆய்வாளர் ரமேஷ்குமார் தலைமையில் விசாரணையை தீவரப்படுத்தினர். அப்போது எதிர் வீட்டில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்த போது வேல்முருகன் ஹெல்மட் அணிந்து வந்து சென்றது தெரியவந்தது.
இதையடுத்து போலீசார் வேல்முருகனை பிடித்து விசாரித்த போது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் சந்தேகமடைந்த போலீசார் மேற்கொண்ட தொடர் விசாரணையில் பணத்தை திருடியதை வேல்முருகன் ஒப்புக்கொண்டார். ரூ.1.20 கோடியை பறிமுதல் செய்த போலீசார் வேல்முருகனை கைது செய்து சிறையில் அடைத்தனர். வீட்டை காலி செய்ய வலியுறுத்தி வீட்டின் உரிமையாளர் மற்றும் வாடகைக்கு இருந்த பெண்ணுடன் தகராறு ஏற்பட்டு வந்த நிலையில், வீட்டை புகைப்படம் எடுக்க சென்ற உரிமையாளர் பணத்தை பார்த்து திருடி சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கணவர்களே உஷார்… பேய் பிடித்தது போல் நடித்து கணவனை அடித்து நொறுக்கிய மனைவி