எடப்பாடி பழனிசாமி கூடிய விரைவில் பாஜகவுக்கு ஒத்துவரவில்லை என்றால்?, அவரை அதிமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்யும். அதற்கு செங்கோட்டையன் பகடைக்காயாக பயன்படுத்தப்படலாம் என அரசியல் விமர்சகர் பொன்ராஜ் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையன் – எடப்பாடி பழனிசாமி இடையிலான மோதல் குறித்து முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல்கலாமின் அறிவியல் ஆலோசகர் பொன்ராஜ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்து உள்ளதாவது :- எம்ஜிஆர், ஜெயலலிதா போன்ற தலைவர்கள், தங்களை விமர்சித்தவர்களையே மீண்டும் அதிமுகவில் சேர்த்துக் கொண்டார்கள். அதற்கு காரணம் வெற்றியை தொடர்ந்து தக்க வைக்க வேண்டும் என்பதற்காக தான். ஒரு கட்சியில் கருத்து வேறுபாடுகள் என்பது இயல்பானது. அதனை ஏற்றுக்கொண்டால்தான் ஒரு கட்சி ஜனநாயக முறைப்படி நடக்கும். அப்போது, கருத்து வேறுபாடு என்று சொன்னாலே அவன் துரோகி என்று சொன்னால், அந்த கட்சியில் என்ன உட்கட்சி ஜனநாயகம் இருக்கிறது? செங்கோட்டையனுக்கு எந்தவித நோட்டீசும் அனுப்பாமல், அவரை பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளார் எடப்பாடி பழனிசாமி. அவர், தன்னை முதல்வராக தேர்வு செய்த சசிகலாவுக்கு துரோகம் செய்தார். டிடிவி தினகரனை, கட்சியில் இருந்து நீக்கி துரோகம் இழைத்தார். ஓபிஎஸ்-ஐ துரோகம் செய்து வெளியேற்றினார். இப்படி துரோகத்தின் ஒட்டுமொத்த உருவமாக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். அதிமுக சட்ட விதிகளின்படி பொதுச்செயலாளர், தொண்டர்களால் தேர்வு செய்யப்பட வேண்டும். ஆனால், அந்த விதியில் திருத்தம் மேற்கொண்டு எடப்பாடி பழனிசாமி பொதுச் செயலாளராக வந்தது ஏன்?
எடப்பாடி பழனிசாமி, தனது சொந்த கட்சிக்குள்ளே பிரித்தாளும் சூழ்ச்சியை கையாளுகிறார். ஜெயலலிதா பொதுச்செயலாளர் ஆனதும் எம்ஜிஆர் காலத்தில் இருந்த தலைவர்களை எல்லாம் வெளியேற்றிவிட்டு தனக்கு என்று ஒரு அடிமை கூடாரத்தை உருவாக்கினார். அந்த அடிமைக் கூடாரம் தான், இன்றைக்கு அதிமுகவை அடிமையாக்கி வைத்துள்ளது. இந்த அடிமைக்கூடாரம், மற்றொரு அடிமைக் கூடாரத்தை உருவாக்க பார்க்கிறார். எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், வேலுமணி போன்ற ஒவ்வொரு முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராகவும் ஒரு டீமை உருவாக்கி வருகிறார். யார் எதிர்த்து பேசினாலும், அவர்களை தூக்கி போட்டுவிட்டு மற்றொரு நபரை போட்டுவிடுவார். இப்படி கட்சியை எடப்பாடி கட்சியாக மாற்றி வருகிறார். இது எம்ஜிஆர் உருவாக்கிய அதிமுக அல்ல. செய்தியாளர் சந்திப்பின்போது திறந்த வாகனத்தில் செங்கோட்டையன் ஊர்வலமாக சென்று தனது பலத்தை நிரூபித்துள்ளார். சொந்த மாவட்டத்திலேயே அவருக்கு எதிராக மற்றொரு நபரை எடப்பாடி பழனிசாமி உருவாக்குகிறபோது, அதை எதிர்த்து கேட்கக்கூடிய தைரியம் செங்கோட்டையனுக்கு உள்ளது. வேலுமணி போன்றவர்களுக்கு இல்லை.
எடப்பாடி பழனிசாமியின் வீட்டிற்கு 6 அமைச்சர்கள் சென்று பேசியுள்ளனர். அந்த கூட்டத்தை கூட்டியவரே வேலுமணிதான். ஆனால் கடைசியாக தான் அவர் சென்றுள்ளார். எடப்பாடி பிரிந்தவர்களை மீண்டும் கட்சியில் சேர்க்க முடியாது என்று பேசி அனுப்பிய பின்னர் எடப்பாடியின் வீட்டிற்கு சென்ற வேலுமணி, தனக்கும் அந்த நிகழ்வுக்கும் தொடர்பில்லை என்று தப்பித்துக்கொள்கிறார். ஆனால் பழி செங்கோட்டையன் மீது விழுந்துவிட்டது. எடப்பாடி பழனிசாமிக்கு ஏன் காலக்கெடு விதிக்கக்கூடாது. தேர்தல் நெருங்கிவிட்டது. தோல்வியை தழுவக்கூடிய இடத்தில் அதிமுக உள்ளது. 13 இடங்களில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்டது. 7 இடங்களில் டெபாசிட்டை இழந்துள்ளது. நாம் தமிழர் கட்சியிடம் 4வது இடத்திற்கு சென்றுவிட்டது. அப்போது எடப்பாடி பழனிசாமிக்கு என்ன தலைமை பண்பு இருக்கிறது. ஜெயலலிதா கொடுத்த 44 சதவீதமும் போய்விட்டது. ஓபிஎஸ் உடன் இருந்தபோது இருந்த 33 சதவீதமும் போய்விட்டது. தற்போது அதுவும் போய் 20 சதவீதமாக மாறிவிட்டது.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, அதிமுக 20 சதவீதம், பாஜக 18 சதவீதம், வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்து 5 சதவீத வாக்குகளை பெற்றால் திமுகவை வீழ்த்தி விடலாம் என்று கணக்கு போட்டார். ஆனால் எடப்பாடியின் தான்தோன்றித்தனம் காரணமாக ஓபிஎஸ்-ஐ சேர்க்க மறுக்கிறார். டிடிவி தினகரன், பாஜகவின் காலில் விழுந்துகிடந்தார். அவரையும் சேர்க்க மறுத்துவிட்டதால், வெளியே போய்விட்டார். பாமக தற்போது இரண்டாக பிரிந்துவிட்டது. அவர்கள் எங்கே செல்வார்கள் என்று தெரியாது. அவர்களும் என்டிஏவில் இல்லை. விஜய்க்கு, 0.5 வாக்குகள் உள்ளது. அண்ணாமலையை நீக்கிவிட்டார்கள். அவர் சட்டமன்றத் தேர்தலில் நிற்க முடியாது என்று சொல்லிவிட்டார்கள். அதனால் அவருடைய ஆதரவாளர்கள் வாக்களிக்க மாட்டார்கள். அப்போது அதில் 6 சதவீத வாக்குகள் காலியாகிவிட்டது. 18 சதவீதத்தில் கிட்டத்தட்ட 16 சதவீத வாக்குகள் போய்விட்டது. எஞ்சி இருப்பது 2.5 சதவீத வாக்குகள் தான். சரி 5 சதவீதம் வாக்குகள் இருப்பதாகவே வைத்துக்கொள்வோம். அப்போது 25 சதவீத வாக்குகளை வைத்துக்கொண்டு எப்படி அமித்ஷா வெற்றி பெறுவார். வாக்குப்பதிவு இயந்திரத்தில் மோசடி செய்தாலும் மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்.
இங்குதான் பிரச்சினை ஏற்படுகிறது. எடப்பாடி பழனிசாமியை காலி செய்தால்தான் சரியாக வரும். அப்போது செங்கோட்டையனை தூக்கிவிடுகிறார்கள். அவரை கலகக் குரல் எழுப்ப செய்துள்ளனர். இந்த கலகக் குரல் ஒரு அதிமுகவில் ஒரு செங்குத்து பிளவை ஏற்படுத்தும். பாஜக அதற்குதான் கொண்டுபோய் சேர்க்கும். பாஜக தலைமை, எடப்பாடி பழனிசாமியிடம் உள்ளவர்கள் எல்லாம் செங்கோட்டையன் பின்னால் போக வேண்டும் என்று சொன்னால், வேலுமணி உள்ளிட்ட அனைவரும் செங்கோட்டையனிடம் போய்விடுவார்கள். இல்லாவிட்டால் அமலாக்கத்துறை பாயும், உங்கள் மீது வழக்கு பாயும் என்றால் அத்தனை பேரும் வந்துவிடுவார்கள். செங்கோட்டையனுக்கு சசிகலா, டிடிவி தினகரன் போன்றவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். தினகரன், முதலமைச்சர் வேட்பாளராக எடப்பாடி பழனிசாமி இல்லாமல் வேறு யாராக இருந்தாலும் ஏற்க தயார் என்று சொல்லியுள்ளார். எடப்பாடி பழனிசாமி கூடிய விரைவில் பாஜகவுக்கு ஒத்துவரவில்லை என்றால்?, அவரை பொதுச்செயலாளர் பதவியில் இருந்து நீக்குவதற்கான அனைத்து வேலைகளையும் செய்யும். அதற்கு செங்கோட்டையன் பகடைக்காயாக பயன்படுத்தப்படலாம். ஆனால் அவருடைய கோரிக்கை நியாயமானதாகும். அவரை பயன்படுத்தி ஒன்றாக சேர்ந்தால் அதிமுக – பாஜக கூட்டணி வெற்றி பெற முடியும்.
அமித்ஷா கணக்கின்படி 39 சதவீதம் வாக்குகள் இருந்த நிலையில், தற்போது அது 25 சதவீதமாக குறைந்துவிட்டது. அதை வைத்து எடப்பாடி எப்படி வெற்றிபெற முடியும். அப்போது அதிமுக அழிந்தாலும் பரவாயில்லை. செங்கோட்டையன் தலைமையில் ஒரு பிளவை கொண்டுவரலாம் என்று பாஜக நினைத்தால் பாதி அமைச்சர்கள் செங்கோட்டையன் பின்னால் வர தயாராக உள்ளனர். எம்எல்ஏக்கள், பொதுக்குழு உறுப்பினர்கள் என எல்லோரும் செங்கோட்டையன் பக்கம் வந்துவிட்டார்கள் என்றால்? எடப்பாடி பழனிசாமியை நீக்கி தீர்மானம் போட்டு, தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பினால் இரட்டை இலை முடங்கும். சின்னம் இருக்கும் திமிரில் தானே அவர் ஆட்டம் போடுகிறார். அவரை வெற்றி பெற விட்டால்தானே. அதை தான் இன்றைக்கு குருமூர்த்தி, சைதை துரைசாமி, செங்கோட்டையன் போன்றவர்கள் இணைந்து இதை செய்கிறார்கள். பாஜக பின்னால் இருக்கிறதா? இல்லையா? என்று நமக்கு தெரியாது. காரணம் அமித்ஷா நேரடியாக குருமூர்த்தி வீட்டிற்கு சென்று ஆலோசனை நடத்துகிறார். அப்போது, அமித்ஷா வழிகாட்டுதல் இல்லாமல் குருமூர்த்தி எப்படி வேலை பார்க்கிறார். செங்கோட்டையன், உண்மையாக அதிமுகவை மீட்டு எடுக்க வேண்டும் என்று நினைத்தால், பாஜகவின் ஆதரவு இல்லாமல் அவர் மீட்டு எடுத்தால், இவர்கள் எல்லோரும் சேர்ந்து நின்றால், எடப்பாடியை தோற்கடித்தால் செங்கோட்டையன், ஓபிஎஸ் போன்றவர்கள் எல்லாம் அதிமுகவை மீட்டு எடுக்கலாம். அதைவிடுத்து, பாஜக உடன் சென்றார்கள் என்றால் ஒட்டுமொத்த அதிமுகவும் அழிவை சந்திக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.