மயிலாடுதுறை மாவட்டத்தில் மின்கம்பங்கள் மற்றும் மின்வாரிய கட்டமைப்புகளில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள், விளம்பரத் தட்டிகளை 7 நாட்களுக்குள் அகற்றுமாறு தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் கடுமையான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளர் (பொறுப்பு) ரேணுகா வெளியிட்ட செய்திக்குறிப்பில், மின்கம்பங்களில் சட்டவிரோதமாக கட்டப்பட்ட கேபிள் ஒயர்கள் மற்றும் விளம்பரத் தட்டிகள் மின் விபத்துகளுக்கு வழிவகுக்கும் அபாயம் உள்ளது. மேலும், பராமரிப்பு பணிகளை மேற்கொள்ளும் மின்வாரிய ஊழியர்களுக்கு பெரும் சிரமம் தருவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளாா்.

அவரது விளக்கத்தின் படி, இந்தச் சூழலில் மயிலாடுதுறை கோட்டத்தில் உள்ள அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள், இணைய சேவை வழங்குநர்கள் மற்றும் விளம்பர நிறுவனங்கள், தாங்கள் மின்கம்பங்களில் கட்டியுள்ள கேபிள் ஒயர்கள் மற்றும் தட்டிகளை 7 நாட்களுக்குள் அகற்ற வேண்டும். காலக்கெடு முடிந்த பின்னரும் அவை நீக்கப்படாவிட்டால், மின்வாரியமே நேரடியாக அவற்றை அகற்றும். அதனால் ஏற்படும் இழப்புகளுக்குப் பொறுப்பு ஏற்காது என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளாா்.
மேலும், மின்கம்பங்கள் மற்றும் அதனுடன் இணைந்த கட்டமைப்புகள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக மட்டுமே பயன்பட வேண்டும். இவற்றில் மூன்றாம் தரப்பினர் எந்தவிதமான பொருட்களையும் பொருத்துவது சட்டவிரோதமானது. இது மின் விநியோக முறையின் தரத்தையும் பாதுகாப்பையும் பாதிக்கும் என்றும் கூறியுள்ளாா்.
குறிப்பாக மழைக் காலங்களில், மின்கம்பங்களில் கட்டப்பட்டுள்ள கேபிள் ஒயர்கள் வழியாக மின்கசிவு ஏற்பட்டு, பாதசாரிகள் மற்றும் விலங்குகள் மின்சாரம் தாக்கி உயிரிழக்கும் அபாயம் அதிகரிக்கிறது. மேலும், அதிக எடையால் கம்பங்கள் சாய்ந்து விழும் அபாயமும் ஏற்படுகிறது.
இந்த ஆபத்துகளைத் தவிர்க்கவும், மின்வாரிய ஊழியர்கள் பழுது நீக்கும் மற்றும் பராமரிப்பு பணிகளைச் சிரமமின்றி மேற்கொள்ளவும், இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளாா்.
மேலும், பொதுமக்களின் பாதுகாப்பு நலனுக்காகவும், மின்சார விநியோக அமைப்பின் ஒழுங்கைக் காக்கவும், அனைவரும் மின்வாரியத்தின் இந்த உத்தரவை முழுமையாகக் கடைப்பிடிக்க வேண்டும் என மயிலாடுதுறை கோட்டச் செயற்பொறியாளர் ரேணுகா கேட்டுக்கொண்டுள்ளார்.
கனமழை எதிரொலி!! கெடிலம் ஆற்றில் மேம்பாலம் கட்டும் பணி தோய்வு…


