பீகார் சட்டமன்றத் தேர்தலில் அதிகளவு வாக்குகள் பதிவாகி இருப்பதன் மூலம் அங்கு ஆட்சி மாற்றம் ஏற்படப் போவது உறுதியாகி இருப்பதாக மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் தெரிவித்துள்ளார்.


பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு குறித்து மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- பீகாரில் முதற்கட்ட தேர்தலில் 65 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளது. அம்மாநிலத்தில் 1951-க்கு பிறகு தற்போது தான் அதிகளவு வாக்குகள் பதிவாகி இருப்பதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. முந்தைய தேர்தல்களின்போது, வாக்குப்பதிவு தினத்தன்று ஒரு வாக்கு சதவீதத்தையும், மறுநாள் அதைவிட சற்று அதிகமாகவும் வாக்கு சதவீதத்தை சொல்வார்கள். ஆனால் இம்முறை தேர்தல் ஆணையம் முதல் நாளில் பதிவான வாக்கு சதவீதத்தை தான் சொல்லியுள்ளனர். பீகார் மக்களின் வாக்குரிமையை பறிக்க பாஜகவும், தேர்தல் ஆணையமும் ஒன்று சேர்ந்து செயல்பட்டார்கள். அவர்கள் மீதான கோபத்தின் வெளிப்பாடாக பீகாரில் அதிகளவு வாக்கு சதவீதம் பதிவாகி உள்ளது. எமர்ஜென்சிக்கு பிறகு கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தான் வடஇந்தியாவில் வாக்கு சதவீதம் அதிகரித்தது. தற்போது அவற்றை எல்லாம் கடந்து இம்முறை அதிகளவு வாக்குகள் பதிவாகி உள்ளது. இதற்கு காரணம் எதிர்க்கட்சிகளின் பலமாகும். பாஜக, ஜே.டி.யு என்பது குர்மிஸ், மகதிஸ், பிராமின்ஸ் மற்றும் பனியாக்கள் போன்ற உயர்சாதியினரின் கட்சியாகும். மற்றவர்கள் எல்லாம் காங்கிரஸ், ஆர்ஜேடி பக்கம் இருந்தனர். அதனால்தான் எஸ்.ஐ.ஆர் கொண்டுவந்து 40 லட்சம் பேரை காலி செய்தார்கள்.

பீகார் தேர்தலின் அம்மாநில துணை முதலமைச்சர் மீது சாணி வீசி தாக்கியுள்ளனர். பாஜகவின் மோசடிகளின் தோல்விதான், கடந்த மக்களவை தேர்தலில் உத்தர பிரதேசத்தில் பெற்ற தோல்வியாகும். பாஜக எப்படிபட்ட கட்சி என்பதை உத்தரபிரதேச மக்கள் புரிந்து கொண்டுள்ளனர். அடுத்தபடியாக அவர்கள் மிகவும் நம்பியிருந்த பிகார் மக்கள் புரிந்துகொண்டுள்ளனர். அதனால்தான் பிகார் துணை முதலமைச்சர் மீது சாணி அபிஷேகம் செய்துள்ளனர். 2026 மாநிலத் தேர்தல்களுக்கு பிறகு பாஜக அழிவை மட்டுமே சந்திக்கும். புல்டோசர் கலாச்சாரத்தை கொண்டு வந்த பாஜக உத்தரபிரதேசத்தில் 80 இடங்களில் 43ல் தோல்வியை சந்தித்தது. அவர்கள் யாரை ஏமாற்றி தங்களுடைய வாக்கு வங்கியாக வைத்திருந்தார்களோ, அந்த இதர பிற்படுத்தப்பட்ட சமூகம் அப்படியே தடம் மாறியது. அப்போது, அவர்களுக்கு 10 சதவீத வாக்கு இயந்திர மோசடியும் பலன் அளிக்கவில்லை. பீகார் அக்னி வீர் திட்டத்தில் சேர்ந்த இளைஞர்களை எல்லாம் காவல்துறையினர் அடித்தனர். இன்றைக்கு அவர்கள் உங்களுக்கு வாக்களிப்பார்களா?

பீகார் தேர்தலில் மொத்தம் 65 சதவீதம் வாக்குகள் பதிவாகி உள்ளது. கிட்டத்தட்ட 5 கோடி வாக்காளர்கள் வாக்களித்து உள்ளனர். தேர்தல் ஆணையம் எஸ்.ஐ.ஆர். நடவடிக்கையின் மூலமாக 42 லட்சம் பேரை நீக்கினார்கள். கிட்டத்தட்ட 10 சதவீதம் பேரை தேர்தல் ஆணையம் நீக்கியது. மக்களின் எழுச்சி 70 சதவீதம் இருக்கிறபோது, பாஜக அடிபடும் என்று நான் சொல்லி இருந்தேன். தற்போது 65 சதவீதம் வாக்குகள் வந்து விட்டது. இதேபோல்தான் உத்தரபிரதேச தேர்தலிலும் 70 சதவீதம் வாக்குகள் வரும். பாஜக அதிகபட்சம் 10 சதவீதம் வாக்குகள் மாற்றுவார்கள். ஆனால் அதையும் தாண்டி மக்களின் எழுச்சி அதிகமாக இருந்தால், பாஜகவினர் அடிபடுவார்கள் என்று சொன்னேன். அதேபோல், 43 இடங்களில் அடிபட்டார்கள். பீகாரில் பெண்களுக்கு ரூ.10,000 கொடுத்தால் எல்லோரும் பாஜகவுக்கு வாக்களித்து விடுவார்கள் என்று நினைக்கிறார்கள். ஆனால் தேஜஸ்வி வீட்டிற்கு ஒரு அரசு வேலை என்று சொன்னார். அது தான் மக்களிடம் எடுபடும்.

ராகுல்காந்தி என்கிற தலைவர் இல்லை என்றால், இன்றைக்கு நாடு முழுவதும் நடைபெறுகிற பெரும் மோசடி வெளிச்சத்திற்கே வந்திருக்காது. அவருடைய மன உறுதி காரணமாகவே கர்நாடகாவில் நடந்த மோசடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. ஹரியானாவில் வெறும் 22 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் காங்கிரஸ் ஆட்சியை இழந்தோம் என்றார். ராகுல்காந்தி மக்களவை எதிர்க்கட்சி தலைவர் என்கிற பொறுப்பில் இருந்து சொன்னது தான், மக்களிடம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட்டதற்கு காரணமாகும். ஹரியானாவில் ராகுல் காந்தி வைத்திருக்கும் குற்றச்சாட்டுகள் சாதரணமானவை அல்ல. மிகவும் தீவிரமானவையாகும். அம்மாநிலத்தில் மொத்தம் 5,21,619 போலி வாக்காளர்கள் உள்ளனர். 93,174 பேருக்கு தவறான முகவரி உள்ளது. 19 லட்சம் 26 ஆயிரம் ஒரே முகவரியில் பல வாக்காளர்களாக உள்ளனர். ஹரியானாவின் 2 கோடி வாக்காளர்களில், 25 லட்சம் பேர் போலி வாக்காளர்கள். இதுபோன்ற ஒரு மோசடியை ரால்காந்தி வெளிப்படுத்தி இருக்கும் நிலையில், தேர்தல் ஆணையத்திடம் இருந்து அதற்கு பதிலே கிடையாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.


