தமிழ் இலக்கிய உலகின் பன்முகப் பெருமகனான கவிஞர் ஈரோடு தமிழன்பன் அவர்கள் காலமான செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை கூறியுள்ளாா்.
இதுகுறித்து, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் செல்வப்பெருந்தகை வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், “சிறந்த ஆசிரியர், மரபுக் கவிஞர், புதுக்கவிதைக் கவிஞர், சிறுகதை ஆசிரியர், புதின ஆசிரியர், நாடக ஆசிரியர், சிறார் இலக்கியப் படைப்பாளர், வாழ்க்கை வரலாற்றாசிரியர், திறனாய்வாளர், ஓவியர், சொற்பொழிவாளர், திரைப்படப் பாடலாசிரியர், திரைப்பட இயக்குநர் என எண்ணற்ற துறைகளில் தடம் பதித்த பன்முக ஆளுமை.
சென்னை தூர்தர்ஷன் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக பணியாற்றியதுடன், தமிழ்நாடு அரசின் இயல் இசை நாடக மன்ற நிர்வாகக் குழு உறுப்பினர், அறிவியல் தமிழ் மன்ற உறுப்பினர் ஆகிய பொறுப்புகளிலும் விளங்கினார். தமிழ் மரபுக்கவிதை மற்றும் புதுக்கவிதை இரண்டிலும் தனித்துவமான பாணி. சங்கத்தமிழின் பாரம்பரியத்தையும் நவீன உணர்வுகளையும் இணைக்கும் சிந்தனைகள் அனைவராலும் போற்றப்படும். அவரது சிறப்பான படைப்புகளில் ஒன்றான ‘வணக்கம் வள்ளுவா’ நூலுக்காக 2004 ஆம் ஆண்டு சாகித்ய அகாடமி விருது பெற்றது குறிப்பிடத்தக்கது.

வானம்பாடி கவிதை இயக்கத்தின் முக்கியப் பங்களிப்பாளர். ‘அரிமா நோக்கு’ ஆய்விதழின் ஆசிரியராகவும் சேவையாற்றியவர். அவரது படைப்புகள் அனைத்தும் தமிழ் வாசகர்கள் மனதில் அழியாத இடத்தைப் பெற்றன. தமிழ் இலக்கியத்திற்கும் சமூக சிந்தனைகளுக்கும் அளித்த பங்களிப்புகள் சொல்ல முடியாதவை. அவரது மறைவு தமிழ் உலகிற்கு ஒரு பெரிய இழப்பு. ஈரோடு தமிழன்பன் அவர்களின் குடும்பத்தினருக்கும், அவரை நேசித்த அனைத்து எழுத்தாளர்கள், வாசகர்கள், கலைஞர்கள் அனைவருக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறோம்” என செல்வப் பெருந்தகை கூறியுள்ளாா்.
பூந்தமல்லி-போரூர் மெட்ரோ ரயில் டிசம்பரில் ஓடுமா? பாதுகாப்பு சான்றிதழ் எப்போது?


