பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தரப்பு ஆதரவாளரான சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் இன்று மயிலாப்பூரில் உள்ள டிஜிபி அலுவலகத்தில் இரண்டு மனுக்களை கொடுத்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், “டிசம்பர் மாதம் 12-ஆம் தேதி வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு கோரி அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் போராட்டம் நடத்த பாமக திட்டமிட்டு இருப்பதாகவும், சென்னையில் நடக்கும் போராட்டத்திற்கு மருத்துவர் ராமதாஸ் தலைமை ஏற்று நடத்த இருப்பதாகவும் இதற்கான அனுமதி கோரி ஒரு மனு டிஜிபி அலுவலகத்தில் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார். அதேபோல் வாழப்பாடியில் அருள் தரப்பு ஆதரவாளர்களுக்கும் அன்புமணி தரப்பு ஆதரவாளர்களுக்கும் நடந்த மோதல் தொடர்பாக புகைப்படங்களை நகலெடுத்து கையில் கொண்டு வந்த அருள், வாழப்பாடி தாக்குதல் சம்பவத்தில் தன் மீதும் தனது ஆதரவாளர்கள் மீதும் தாக்குதல் நடத்தியவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்று ஒரு மனு டிஜிபியிடம் அளித்திருப்பதாகவும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசியவர் 35 ஆண்டுகள் பாமகவில் இருந்த தன்னை கொல்ல திட்டமிடுகிறார்கள், தாக்குதலில் ஈடுபட்ட ஜெயப்பிரகாஷ், கவுதம், சடையப்பன் மற்றும் சங்கர் ஆகிய நான்கு பேரும் இதுவரை கைது செய்யப்படவில்லை எனவும், அவர்களின் முன் ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளதால், காவல்துறை அவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

ஆனால், தாக்குதலில் ஈடுபட்ட முக்கிய குற்றவாளிகளை கைது செய்ய விடாமல் ஒரு கூட்டம் தடுப்பதாகவும் அந்த கூட்டத்திற்கு பயந்து காவல்துறை என் மீது பொய் வழக்கு போட்டுவிட்டது எனவும் குற்றம் சாட்டிய எம்.எல்.ஏ அருள் தனது ஆதரவாளர்கள் மட்டும் அன்றைய தினம் தடுக்கவில்லை என்றால் என்னை கொன்று இருப்பார்கள் என புகைப்படங்களின் நகல்களை காண்பித்து விளக்கம் அளித்தார். பாமகவில் அன்புமணி ஆதரவு ஒன்றிய செயலாளரான சடையப்பன் கத்தியுடன் வந்து தனது ஆதரவாளர்களை தாக்கினார் எனவும், ஒரு ரவுடி கூட்டம் தங்களை பாமக என சொல்லிக் கொள்கிறார்கள். 35 ஆண்டுகளாக அன்புமணிக்காக தெருத்தெருவாக அலைந்தவன் நான், அன்புமணியை நம்பி யார் போனாலும் கொலை செய்வார்கள் என அருள் ஆவேசமாக பேசினார்.
அன்புமணி ஆதரவாளரான வழக்கறிஞர் பாலு பற்றி பேசிய அருள் சட்டம் தெரியாதவர் வழக்கறிஞர் பாலு எனவும், தான் குண்டர் சட்டத்தில் அடைக்கப்பட்ட போது அவரால் எதுவும் செய்ய முடியாது என்று கூறிவிட்டார், வழக்கறிஞர் சங்கரசுப்புதான் தன்னை குண்டர் சட்டத்தில் இருந்து உடைத்து வெளியில் கொண்டு வந்தார் என்றும், சாதாரண ஒரு சிறிய சிவில் கோர்ட்டுக்கு வக்கீல் சங்க தலைவராக முடியாத பாலுவை பார் கவுன்சில் உறுப்பினராக்க ஓடி, ஓடி உழைத்தேன். வழக்கறிஞர்களை தேடித் தேடி சந்தித்து வாக்கு சேகரித்தேன் என அருள் தெரிவித்தார். மறைந்த வன்னியர் சங்கத் தலைவர் குருவை ஏமாற்றி பாமகவில் நுழைந்தவர் பாலு எனவும் அவர் மீது விமர்சனம் வைத்தார்.
மீண்டும் வாழப்பாடி சம்பவம் குறித்து பேசியவர். இந்த வழக்கில் சேர்க்கப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் பிணை வழங்க மறுத்துவிட்டது. எனவே காவல்துறை அவர்களை கைது செய்ய வேண்டும் எனவும், தமிழக காவல்துறை மீது எனக்கு நம்பிக்கை உள்ளது அவர்கள் ஸ்காட்லாந்து யார்டு போலீசாருக்கு இணையானவர்கள் என காவல்துறையை புகழ்ந்து பேசினார்.
நான் தவறு செய்தால் என்னை கைது செய்யுங்கள் என ஆவேசமான அருள், அன்புமணி அவர்களே…! நான் ஆதாரம் கொடுக்கிறேன் நீங்களே உங்கள் ஆதரவாளர்களை காவல்துறையிடம் ஒப்படையுங்கள் என்று கூறினார்.
திருப்பதி மலைப் பாதையில் பயங்கர விபத்து : 4 பக்தர்கள் அதிர்ஷ்டவசமாகத் தப்பினர்!


