spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!

-

- Advertisement -

மருத்துவர் எழிலன் நாகநாதன்காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!

ஏற்றத்தாழ்வுகள் மிக்க சமூக அமைப்பில் மேற்கொள்ளப்படும் அரசுத் திட்டங்கள் உள்ளிட்ட எந்தத் தலையீடும் குறிப்பிட்ட மேல்தட்டு தரப்புக்கு மட்டுமே பலன் அளிக்கக்கூடியதாக மாறிவிடும். குறிப்பாக, சுகாதாரத் திட்டங்கள், ஏற்றத்தாழ்வு மிக்க சமூகத்தில் மேலடுக்கில் உள்ளவர்களுக்கு மட்டுமே பயன்படும். எனவே, படிநிலையில் சாமானிய மக்களுக்குக் கிட்டாத சேவைகள், ஒரு நாட்டை அல்லது மாநிலத்தை வலுவான கட்டமைப்பாக மாற்றுவதற்கு உதவாது. எனவே, ஏற்றத்தாழ்வுகளைக் களையக் கவனம் செலுத்துவதே முதன்மைப் பணியாகும்.

ஆரியம், குறிப்பிட்ட தரப்புக்கான, மேல்தட்டு வர்க்கத்திற்கான திட்டங்களையும் பார்வைகளையும் கொண்டது. திராவிடம் எல்லோரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை இலக்காகக் கொண்டது. எல்லோரையும் உள்ளடக்கிய திட்டமிடல்தான் வலுவான மருத்துவக் கட்டமைப்பை உருவாக்கும். சமூக நீதி அடிப்படையில், தமிழ்நாட்டில் பெரும்பாலும் எல்லோராலும் எல்லாவற்றையும் அணுக முடியும் என்கிற நிலை உருவான பிறகே, நம்முடைய சுகாதாரக் கட்டமைப்பு வலிமைபெற்றது. இந்திய அளவில், சுகாதாரக் குறியீடுகளில் தமிழ்நாடு தனித்துவமாக உயர்ந்து நிற்பதற்கு அடிப்படை காரணம், சமூக நீதியின் அடிப்படையில் உருவான திராவிடப் புரட்சியே.

we-r-hiring

இங்கிலாந்தின் முன்னாள் பிரதமர் டோனி பிளேயர் பெயரிலான Tony Blair Institute for Global Change என்கிற கல்வியியல் ஆய்வு நிறுவனம், உலகம் முழுவதும் சுகாதார கட்டுமானங்கள் குறித்து ஆய்வு மேற்கொண்டது.

அதில் ஆப்பிரிக்காவில், பின்தங்கிய நாடுகளில், இன ஒடுக்குதல் மிகப்பெரிய அளவில் உள்ள நிலையில், அந்தப் பகுதிகளுக்கு மருத்து கட்டமைப்புகளை உருவாக்க ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன ஆய்வுகளின் முடிவில், சாதி ஒடுக்குமுறைகள் மத்தியில் மருத்துவக் கட்டுமான பரவலாக்கத்தை உறுதிசெய்த தமிழ்நாட்டின் ‘திராவிட மாடல்’ மருத்துவக் கட்டமைப்பே அந்நாடுகளுக்கான தீர்வாக முன்வைக்கப்பட்டது.

மருத்துவக் காத்திருப்பு நேரம்

குழந்தை இறப்பு விகிதம், தாய் இறப்பு விகிதம், தடுப்பூசி செலுத்தும் விகிதம் உள்ளிட்ட சுகாதாரக் குறியீடுகளில், தமிழ்நாட்டின் பெருமிதமான தரவுகளை நாம் அறிவோம். அதைக் கடந்து மருத்துவமனைகள், மருத்துவக கல்லூரிகள், மருத்துவர்கள் மற்றும் மருத்துவ சேவைக்கான காத்திருப்பு நேரம் ஆகியவற்றிலும் மகத்தான சாதனைகளை நாம் நிகழ்த்தியுள்ளோம்.

தேசிய மருத்துவ ஆணையம் சமீபத்தில் வெளியிட்ட அறிவிப்பின்படி 10 லட்சம் மக்களுக்கு 100 மருத்துவ இளநிலை இடங்கள் (எம்பிபிஎஸ்)இருக்க வேண்டும். ஆனால் இந்த அளவை, தமிழ்நாடு எப்போதோ கடந்துவிட்டது.

தமிழ்நாட்டில், அரசுக்குச் சொந்தமான மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 5,225 இடங்களும், தனியார் மருத்துவக் கல்லூரிகளில் சுமார் 3,300 இடங்களும் இருக்கின்றன. தமிழ்நாட்டின் மக்கள்தொகையைப் பொறுத்தவரை, 2011ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின்போது, 7 கோடியே 21 லட்சமாக இருந்த நிலையில், தற்போது சுமார் எட்டுக் கோடி அளவில் இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

எனவே, தேசிய மருத்துவ ஆணையத்தின் புதிய விதிமுறைகளின்படி, தற்போது தமிழ்நாட்டில் சுமார் 8,000 மற்றும் சற்றே கூடுதலான எம்பிபிஎஸ் இடங்கள் வரை இருக்கலாம். ஆனால், தற்போதே அந்த எண்ணிக்கை 8,500-ஐ தாண்டிவிட்டது.

மருத்துவக் கல்லூரிகள் அல்லது எம்பிபிஎஸ் இடங்கள் அதிகம் உள்ள மாநிலங்களில், இயல்பாகவே ‘மருத்துவர்: மக்கள்’ தொகை விகிதம் அதிகமாகவே இருக்கும். 1,000 பேருக்கு ஒரு மருத்துவர் இருக்க வேண்டும் என்கிறது உலக சுகாதார அமைப்பு. தமிழ்நாட்டில் 1,000 பேருக்கு 1.6 மருத்துவர்கள் உள்ளனர். ஆனால், இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் 4,000 பேருக்கு ஒரு மருத்துவர்தான் உள்ளார்.

உலக அளவில் சுகாதாரத் தேவைகளுக்காக ஒவ்வொரு நாட்டிலும் பொதுமக்கள் காத்திருக்கும் கால அளவு குறித்துப் பல்வேறு ஆய்வுகள் வெளியாகியிருக்கின்றன. அதில் அவசர தேவை அல்லாத சாதாரண புறநோயாளியாகச் சிகிச்சை மேற்கொள்வதற்கான காத்திருப்புக் காலம், அமெரிக்காவில் 20 நாட்கள், இத்தாலியில் 10 நாட்கள், ஐக்கிய நாடுகளில் 10 நாட்கள், ஸ்பெயினில் 9 நாட்கள், ஸ்வீடனில் 7 நாட்கள், பிரான்ஸ் நாட்டில் 6 நாட்கள், ஜெர்மனி மற்றும் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் 4 நாட்கள் என சராசரி காத்திருப்புக் காலம் கணக்கிடப்படுகிறது.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!

ஆனால், தமிழ்நாட்டில் மிகப்பெரிய அவசர மருத்துவத் தேவை தொடங்கி, சாதாரண பரிசோதனை அல்லது மருத்துவ ஆலோசனை பெறும் புறநோயாளிகள் வரை, நாம் நினைத்த நேரத்தில் மருத்துவரைப் பார்த்துவிட முடியும். குறிப்பாக, அரசு மருத்துவரைச் சில மணி நேர காத்திருப்பிலேயே பார்த்துவிட முடியும் என்கிற மகத்தான நிலையைத் தமிழ்நாட்டில் உருவாக்கி வைத்திருக்கிறோம்.

மூன்றிலிருந்து 5 கிலோ மீட்டர் சுற்றளவிற்கு உள்ளாகவே தமிழ்நாடு அரசின் ஆரம்ப சுகாதார நிலையத்தை நம்மால் காண முடியும். சற்றே கூடுதலான மருத்துவத் தேவைக்கு 10ல் இருந்து 15 கிலோமீட்டர் சுற்றளவில், தாலுகா அளவிலான மருத்துவமனைகள் தமிழ்நாட்டில் உள்ளன. எல்லா மாவட்டங்களிலும் உயர் சிகிச்சைகள் வழங்கத்தக்க வகையில், அரசு மருத்துவக் கல்லூரிகளை நிறுவும் நோக்கோடு செயல்பட்டுவருகிறது, நம் அரசு.

2022-23ஆம் ஆண்டு, தமிழ்நாடு அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி, தமிழ்நாட்டில் ஏறக்குறைய 377 பெரிய மருத்துவமனைகளும், 272இடைநிலை மருத்துவமனைகளும், 2,277 ஆரம்ப சுகாதார நிலையங்களும் நிலையங்களும், 8,713 துணை சுகாதார நிலையங்களும், 416 நடமாடும் மருத்துவ நிலையங்களும், உள் நோயாளிகளுக்காக ஏறத்தாழ ஒரு லட்சம் மருத்துவப் படுக்கைகளும் அமையப்பெற்று, 20,000 மருத்துவர்களும், 40,000 செவிலியர்களும் தமிழ்நாடு சுகாதாரக் கட்டமைப்பில் நேரம் காலம் பார்க்காமல் இயங்கிக்கொண்டிருக்கிறார்கள்.

இவ்வாறு மருத்துவத் துறையில் நிகழ்த்தப்பட்ட சமூகப் புரட்சியை சமூக நீதியோடு இணைத்துப் பார்க்கவேண்டிய அவசியம் உள்ளது. காரணம், திராவிட இயக்கம் சமூக நீதியை உறுதிசெய்வதையும், சுகாதாரக் கட்டமைப்பை விரிவாக்குவதையும் ஒரு இணைச் செயல்பாடாகவே மேற்கொண்டுவருகிறது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தாய் அமைப்பான நீதிக்கட்சியின் அடித்தளமே மருத்துவர்கள்தான் என்பதை நாம் அறிவோம். மருத்துவக் கல்வி பயில சமஸ்கிருதம் அவசியம் என்கிற நிலையை மாற்றிக் காட்டியது நீதிக் கட்சி. மேலும், சமூக நீதி வரலாற்றில் மகத்தான புரட்சியாக நிலைத்துநிற்கும் வகுப்புவாரி உரிமை, மருத்துவக் கட்டமைப்பில் பார்ப்பனர் அல்லாதாருக்கான பாதையைத் திறந்துவைத்தது. நீதிக் கட்சியின் மாபெரும் தலைவர், மருத்துவர் டி.எம். நாயர், சுகாதார கட்டமைப்பில் ஆற்றிய பணிகள் அளவிட முடியாதவை. அவரே ‘Antiseptic’ என்ற மருத்துவ இதழை நடத்தினார். இந்திய மருத்துவக் கழகத்திற்கு (Medical Council of India) முன்னோடியாக முதன் முதலில் மெட்ராஸ் மாகாண மருத்துவ கவுன்சில் (Medical Council of Madras Presidency) உருவாக்கப்பட்டது. மருத்துவர்களுக்கான பதிவுமுறை உள்ளிட்டவற்றுக்கு அடிப்படைகளை வகுத்த இந்த நிறுவனத்தை உருவாக்கியதில் டாக்டர் டி.எம்.நாயர் பெரும் பங்கு வகித்தார்.

பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீட்டுக்காகத் தந்தை பெரியாரும் பேரறிஞர் அண்ணாவும் நடத்திய போராட்டத்தால் நிலைநாட்டப்பட்ட சமூக நீதியின் காரணமாகத் தமிழ்நாட்டில் ஏராளமான மருத்துவர்கள் உருவாகினர்.

1957-க்குப் பிறகு, தமிழ்நாடு சட்டமன்றத்தில் நம்முடைய சுகாதாரக் கட்டமைப்பின் பலவீனம் குறித்து கடுமையாக வாதிட்டது, தி.மு.கழகம். ஒவ்வொரு தேர்தல் அறிக்கையிலும் வட்டார அளவிலான மருத்துவக் கட்டமைப்பின் தேவை குறித்தும், அவசர ஊர்திகள் குறித்தும் பேரறிஞர் அண்ணா விரிவாகப் பேசினார்.

கட்டமைப்பை வலுப்படுத்திய கலைஞர்

தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் பணிகளைத் தன் வாழ்நாள் முழுவதும் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் செய்தவர், முத்தமிழறிஞர் கலைஞர். இடஒதுக்கீட்டின் அளவை அதிகரித்தல், உள் இடஒதுக்கீடு, பிற்படுத்தப்பட்டோர் என்ற பிரிவு உருவாக்கம் ஆகிய கலைஞரின் நடவடிக்கைகள் மருத்துவக் கல்வி மற்றும் மருத்துவப் பணிகளில் விளிம்புநிலை சமூகங்களில் இருந்து அதிக அளவிலான மக்களுக்கு இடம் கிடைக்க வழிவகை செய்தது.

1943ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட சர் ஜோசப் ஃபோர் (BHORE) கமிட்டி, தன்னுடைய அறிக்கையை 1946ஆம் ஆண்டு வெளியிட்டது. இந்தியாவினுடைய சுகாதாரக் கட்டமைப்புகள் குறித்து விரிவான ஆய்வுகளை மேற்கொள்ள அமைக்கப்பட்ட இந்த ஆணையம், ஒருங்கிணைந்த மருத்துவ சேவைகள், கிராமப்புற மருத்துவ சேவைகள், மருத்துவக் கல்வி, மருத்துவ சேவையை அணுகுவதற்கான சூழல், சுகாதார கட்டமைப்பில் பொதுமக்களின் பங்கேற்பு உள்ளிட்டவை குறித்து நீண்டகால செயல் திட்டங்களை வகுத்தளித்தது. இந்திய அரசின் இந்த ஆணையம், பிரச்சினைகளாகவும் தீர்வுகளாகவும் கண்டறிந்தவைகளைத் தன்னுடைய வெவ்வேறு ஆட்சிக்காலத்தில் பல்வேறு திட்டங்களின் வழியாக நடைமுறைப்படுத்தியவர், முத்தமிழறிஞர் கலைஞர்.

1971 – 1976 ஆட்சிக்காலத்தில், பிச்சைக்காரர்கள் – தொழுநோயாளிகள் மறுவாழ்வு திட்டம், கண்ணொளித் திட்டம் உள்ளிட்ட புரட்சிகரமான மருத்துவ சேவைகளை மக்களுக்கு வழங்கினார்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!

ஒன்றிய அரசு, தேசிய தொழுநோய் ஒழிப்புத் திட்டம் ஒன்றைக் கொண்டுவந்தது. (National Leprosy Eradication Programme), அந்தத் திட்டம் மருத்துவம் அளிப்பதை மட்டும் உள்ளடக்கியது. அதில் உள்ள நிதியைஎடுத்து, கூடுதலாக ஒரு கோடி ரூபாய் தனி நிதி திரட்டி, இரண்டையும் இணைத்து, பிச்சைக்காரர்கள் மறுவாழ்வு திட்டத்தையும் தொழுநோய் ஒழிப்புத் திட்டத்தையும் கொண்டுவந்தார், கலைஞர்.

ஒவ்வொரு தொழுநோயாளி மறுவாழ்வுக் குடியிருப்பிலும் இரண்டு குழந்தைகள் நல நிபுணர் கொண்ட ஒரு குழுவினர் பணியாற்றுவார்கள். இதன்மூலமாக முறையான மருத்துவம், குழந்தைகளுக்கான கல்வி, இரண்டு வேளை முழு உணவு, தேநீர், தீனிகள், வாரத்திற்கு இரண்டு முறை அசைவ உணவுகள் என்று முறையான உணவு, அவர்கள் சுயமரியாதையோடு சமூகத்தில் வாழ சிறு, குறு தொழில் பயிற்சிகள் ஆகியவை கிடைத்தன. இதன்மூலம், தொழிற்பயிற்சி பெற்றவர்கள் உற்பத்திசெய்த பொருட்களை அரசே கொள்முதல் செய்தது. கூடுதலாக, வார சம்பளமும் வழங்கப்பட்டது. ஒவ்வொரு மறுவாழ்வு குடியிருப்புக்கும் அரசு தரப்பில் 4.5 இலட்சம் ரூபாய் செலவுசெய்யப்பட்டது.

முறையான சிகிச்சைக்குப் பிறகு, அவர்களை இயல்பான சமூக வெளிக்கு அனுப்பி, அவர்கள் கற்றிருந்த தொழிற் கல்விக்கு ஏற்ப வங்கிகள்மூலம் மிக மிகக் குறைந்த வட்டிக்குக் கடன் வழங்கி, தொழில் தொடங்க வழிவகை செய்யப்பட்டது. இவ்வளவு விரிவான, ஒருங்கிணைக்கப்பட்ட திட்டம் 1970-களில் கலைஞரால் செயல்படுத்தப்பட்டது.

1972ஆம் ஆண்டில், கண்ணொளித் திட்டத்திற்கான வரைவினைக் கலைஞர் வெளியிட்டார். அந்தக் காலகட்டத்தில், தமிழ்நாட்டில் ஏராளமானோருக்கு மாலைக்கண் நோய் இருந்தது, 50 வயதைக் கடந்த அதிகமானோர், கண்புரையால் பாதிக்கப்பட்டிருந்தனர். இதற்கான தீர்வாகவே கலைஞர் வெளியிட்ட வரைவுத்திட்டம் அமைந்தது.

அரசு மற்றும் தனியார் கண் மருத்துவர்கள் அடங்கிய குழு, சென்னைக்கு இரண்டு, மதுரைக்கு ஒன்று, கோவைக்கு ஒன்று மற்றும் தஞ்சாவூருக்கு ஒன்று என்கிற அடிப்படையில், ஐந்து நகரும் மருத்துவ நிலையங்களும் பிரித்து அனுப்பப்பட்டன.

ஒவ்வொரு நகரும் மருத்துவ நிலையங்களிலும் கண்புரை நீக்க அறுவைசிகிச்சை நிபுணர்கள் 20 பேர் இருப்பார்கள். இந்த மருத்துவ நிலையம், ஒவ்வொரு கிராமமாகச் செல்லும். அதற்கு முன்பாகவே கிராம அமைப்பின் தலைவர், சுகாதாரப் பணியாளர்களோடு சேர்ந்து அந்த ஊரில் வைட்டமின் A குறைபாடு உடையோர். அறுவைசிகிச்சை தேவைப்படுவோர் பட்டியலைத் தயார்செய்து அனுப்பியிருப்பார். நகரும் மருத்துவ நிலையத்தின் குழு, ஒரு பகுதியில் உள்ள பள்ளியிலோ, சமுதாயக் கூடத்திலோ, திருமண மண்டபங்களிலோ முகாம் அமைத்து, சிகிச்சை அளிப்பார்கள். ஒவ்வொரு முகாமிலும் சராசரியாக 2000 கண்புரை நீக்க அறுவைசிகிச்சைகள் நடைபெற்றிருக்கின்றன. பல்லாயிரம் மக்களுக்கு வைட்டமின் ஏ மாத்திரைகள், கண் மருந்துகள், கண் கண்ணாடிகள் ஆகியவை வழங்கப்பட்டிருக்கின்றன. இவை அனைத்தும் இலவசமாகவே செய்யப்பட்டிருக்கிறது.

மேற்கு ஜெர்மனியில் இருந்து வந்த community eye expert, டாக்டர் ஏல்ஸ்பெர்க். “இப்படி ஒரு திட்டம் உலகத்தில் எங்குமே நடைமுறைப்படுத்தப் படவில்லை, டாக்டர் கலைஞர் தான் நடைமுறைப்படுத்தியுள்ளார்” என்று வியந்து பாராட்டினார்.

மீண்டும் 1989ஆம் ஆண்டு கலைஞர் ஆட்சி பொறுப்பேற்றபோது, தன் முந்தைய ஆட்சியின் தொடர்ச்சியாக, சமூக நீதிக்கும் மருத்துவ கட்டமைப்பை வலுப்படுத்துவதற்குமான தன்னுடைய பங்களிப்பை வழங்கினார்.

மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர் மரபினருக்கான தனி இடஒதுக்கீடு. அதுவரையில் பெருமளவு மருத்துவக் கல்வியில் இடம்பெறாத சமூகங்களுக்கான வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுத்தது. அதே காலகட்டத்தில் உருவான டாக்டர் முத்துலட்சுமி அம்மையார் மகப்பேறு நிதி உதவித் திட்டம், நாட்டிற்கே முன்னோடியாக இன்றளவும் விளங்குகிறது. தமிழ்நாட்டில் தாய்-சேய் இறப்பு விகிதத்தைக் கட்டுப்படுத்தியதிலும், மருத்துவமனை பிரசவங்களை உறுதிசெய்வதிலும் இத்திட்டம் ஆற்றிய பங்களிப்பு வரலாற்றுப் பெருமிதம் வாய்ந்தது.

1996ஆம் ஆண்டு, முதலமைச்சராகப் பொறுப்பேற்ற முத்தமிழறிஞர் கலைஞர், மீண்டும் சமூக நீதி மற்றும் மருத்துவக் கட்டமைப்பு இணைச்செயல்பாட்டை ஊக்கப்படுத்தினார். அக்காலத்தில், அனைத்து சமூகப் பின்புலத்திலிருந்தும் வருகிற கிராமப்புற மாணவர்களுக்குச் சிறப்பு உள் ஒதுக்கீட்டை அறிவித்தார். 15 விழுக்காடு வழங்கப்பட்ட அந்த உள் ஒதுக்கீட்டின்மூலம் முதல் தலைமுறை பட்டதாரிகள், அரசுப் பள்ளி மாணவர்கள், தமிழ்வழி படித்த மாணவர்கள், கிராமப்புறத்தில் இருந்து மேலெழுந்து வரக்கூடிய மாணவர்கள் என சமூகத்தின் அனைத்துநிலை, விளிம்புநிலை மக்களும் மிகப்பெரிய அளவில் மருத்துவக் கல்வியை நோக்கி வந்தனர்.

நீட் என்கிற கொடுங்கோன்மையின் விளைவாக, அதற்கு நிவாரணமாக வழங்கப்பட்ட 7.5 சதவிகித அரசுப் பள்ளி மாணவர்களுக்கான இடஒதுக்கீட்டுக்கு முன்னோடி என்று இந்த கிராமப்புற மாணவர்கள் இடஒதுக்கீட்டைச் சொல்லலாம். 7.5 சதவிகித இடஒதுக்கீட்டுக்காக நீதிமன்றத்தில் வலுவாக வாதிட்டு, அதை உறுதிசெய்ததும், முன்னதாக ஆளுநர் அதனை ஏற்க மறுத்தபோது, வீதியில் இறங்கிப் போராடிய பெருமையும் கழகத்தலைவர் மு.க.ஸ்டாலினையே சேரும்.

2006ல் கலைஞர் முதல்வரானபோது, மகப்பேறு காலத்தில் பெண்கள் அதிக இன்னல்களுக்கு உள்ளாவதை, வேலைக்குச் செல்ல முடியாமல் பொருளாதாரச் சிக்கல்களை எதிர்கொள்வதை எல்லாம் கருத்தில்கொண்டு, கர்ப்பிணிப்பெண்களுக்குத் தவணை முறையில் ஆறாயிரம் ரூபாய் வழங்கும் திட்டத்தைக் கலைஞர் அறிவித்தார். அதுதான், தற்போது ஒன்றிய அரசின் நிதியோடு சேர்த்து 18,000 ரூபாயாக வழங்கப்படுகிறது.

வாழ்வொளித் திட்டம்

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அறிமுகப்படுத்திய இன்னொரு மகத்தான திட்டம், ‘வாழ்வொளி’ திட்டம்.

108 ஆம்புலன்ஸ் சேவை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரைக் கவனத்தில் கொண்டு உருவாக்கப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!

சென்னை மருத்துவக் கல்லூரியின் முன்னாள் தலைமை பேராசிரியர், இருதய சிகிச்சை நிபுணர், மறைந்த டாக்டர் விக்டர் சாலமன் அவர்கள் ஓர் ஆய்வுக் கட்டுரையை முன்வைத்தார். ‘Rheumatic Heart disease ! என்று சொல்லப்படும் இருதய நோய் 28 சதவிகிதம் தமிழ்நாட்டில் இருப்பதை அந்த ஆய்வுக்கட்டுரை சுட்டிக்காட்டியது. சிறு வயதில் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு இருமல், சளி மூலம் வரும் ‘Acute Rheumatic fever’ என்று சொல்லப்படும் காய்ச்சல், மூட்டுகளை வீங்கவைப்பது, தோலில் தேமல் போன்ற பிரச்சினைகளை உருவாக்குவதெல்லாம், இந்த நோய்க்கான காரணங்களாகச் சொல்லப்பட்டது. குழந்தைகளுக்கு அடுத்தடுத்து பரவும் இந்த நோயைத் தடுப்பதற்கான திட்டத்தையும் தன்னுடைய ஆய்வுக் கட்டுரையில் முன்வைத்திருந்தார். டாக்டர் விக்டர் சாலமன்.

எந்தெந்தக் குழந்தைகளுக்கு இருமல், சளி ஏற்பட்டு காய்ச்சல், இருதய படபடப்பு, மூட்டு மற்றும் கைகால்கள் வீக்கம் என்று தொடர்ச்சியான அறிகுறிகள் வருகிறதோ, அந்தக் குழந்தைகளுக்கு பெனிசிலின் மாத்திரைகள் கொடுத்தால், அந்தக் குழந்தைகள் பெரியவர்களாக வளரும்போது, இருதயத்தில் குழாய் சுருக்கங்கள் வராமல் தடுத்துவிடலாம் என்பது அவர் வைத்த தீர்வு.

அந்த ஆய்வுக்கட்டுரையின் அடிப்படையில்தான், தமிழ்நாட்டின் நிதியமைச்சர், நிதிச் செயலாளர், சுகாதாரத் துறை அமைச்சர், சுகாதாரத் துறை செயலாளர், கல்வி அமைச்சர், கல்வித் துறை செயலாளர் உள்ளிட்டோரை அழைத்து ஆலோசனை நடத்திய கலைஞர், ஆலோசனை முடிவில்,’வாழ்வொளி திட்டத்தைக் கொண்டுவந்தார்.

மஞ்சள் அட்டை

இந்தத் திட்டத்தின் அடிப்படையில், சளி, இருமல், காய்ச்சல் என்று தொடங்கி…இருதய படபடப்பு, மூட்டு மற்றும் கைகால்கள் வீக்கம் ஏற்படும் குழந்தைகளைக் கண்டறிந்து, அவர்களுக்கு மஞ்சள் அட்டை வழங்கும் பொறுப்பு பள்ளிக்கூட ஆசிரியர்களுக்கு அளிக்கப்பட்டது. அந்த மஞ்சள் அட்டையை எடுத்துக்கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்குச் செல்லும் குழந்தைகளைப் பரிசோதித்து, அவர்களுக்கு பத்து ஆண்டுகளுக்கு பெனிசிலின் ஊசி அல்லது மாத்திரைகள் வழங்கும்பொறுப்பு, அரசு மருத்துவருக்கு வழங்கப்பட்டது. இதுதான் வாழ்வொளி திட்டத்தின் வடிவமைப்பு.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!

1996 – 2001 ஆட்சிக் காலத்தில் தொடங்கி நடைமுறைப்படுத்தப்பட்ட  இந்தத் திட்டம் அடுத்தடுத்த ஆட்சிகளில் தொடர்ந்து செயல்படுத்தப்பட்டதன் விளைவு, 1996 ஆம் ஆண்டில் 28 சதவிகிதம் என்று இருந்த நோயின் அளவு, 2016 ஆம் ஆண்டில் சென்னை மருத்துவக் கல்லூரி ஆய்வின் அடிப்படையில் 0.8 சதவிகிதம் என்று குறைந்துவிட்டது.

2006-ஆம் ஆண்டு, கலைஞர் மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, இஸ்லாமியர்களுக்கான உள்ஒதுக்கீடு மற்றும் அருந்ததியர்  உள் இடஒதுக்கீடு ஆகியவற்றைக் கொண்டுவந்தார். இவை ஏற்படுத்திய சமூகத் தாக்கம், வார்த்தைகளில் விவரிக்க முடியாத அளவிற்கு ஆழமானது. இஸ்லாமியப் பெண்களிடம் பேறுகாலம் உள்ளிட்ட தருணங்களில், மருத்துவர்களை அணுகுவதில் இருந்த மனத்தடைகளை உடைக்கும் விதமாக, ஒரு இஸ்லாமியப் பெண்ணுக்கு – இஸ்லாமிய பெண் மருத்துவரே மருத்துவம் செய்ய ஏதுவான சூழலை இது உருவாக்கியது.

மேலும், பல நூற்றாண்டுகளாகத் தூய்மைத் தொழில் மேற்கொண்டுவந்த சமூகத்திலிருந்து மருத்துவர்கள் மருத்துவப் பேராசிரியர்கள், மருத்துவக் கல்லூரி டீன் ஆகியோர் உருவாகினர். கலைஞரின் இதே ஆட்சிக் காலகட்டத்தில்தான் அவசர சிகிச்சைக்கான 108 ஆம்புலன்ஸ் சேவை, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோரைக் கவனத்தில் கொண்டு புரட்சிகரமாக உருவாக்கப்பட்ட கலைஞர் காப்பீட்டுத் திட்டம் ஆகியவை வெற்றிகரமாகச் செயல்படுத்தப்பட்டன. தன்னுடைய ஆட்சிக்காலம் முழுவதிலும் கிடைத்த வாய்ப்புகளில் எல்லாம் தமிழ்நாட்டில் சமூக நீதி அடித்தளத்தை வலுப்படுத்தவும், சுகாதார கட்டமைப்புகளை விரிவானதாகவும் எல்லோரையும் உள்ளடக்கியதாகவும், புரட்சிகரமானதாகவும் மாற்றுவதற்குத் தன்னாலான எல்லாப் பணிகளையும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் மேற்கொண்டார்.

அவருடைய பாதையில் 2021 ஆம் ஆண்டு திராவிட மாடல் அரசை அமைத்த நம்முடைய முதலமைச்சர் அவர்கள், இந்தியாவில் எல்லா மாநிலங்களும் வியந்துபார்க்கும் வகையில், தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை உயர்த்தியுள்ளார். சமூக நீதியோடு மருத்துவக் கட்டமைப்பை ஒருங்கிணைந்த செயல்பாடாகப் பார்க்கும் திராவிட இயக்க மரபை நம்முடைய முதல்வர் அவர்களும் தொடர்ந்தார். மருத்துவ உயர் படிப்பில் அகில இந்தியத் தொகுப்பில் சட்டப் போராட்டம் நடத்தி, ஒன்றிய பா.ஜ.க அரசுமீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு வரை தொடர்ந்து, இதர பிற்படுத்தப்பட்ட சமூகங்களுக்கான 27 சதவிகித இடஒதுக்கீட்டைப் பெற்றுக்கொடுத்த மகத்தான ஆளுமை நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

இன்று, குழந்தை இறப்பு விகிதம் 8/1000 எனவும், பிரசவ காலத்தில் தாய் இறப்பு விகிதம் 35/1,00,000 எனவும் குறைத்து, மகத்தான சாதனையை எட்டி உள்ளோம். இதயம் காப்போம், பாதம் காப்போம் என்று பல்வேறு திட்டங்களைச் சிறப்பாகச் செயல்படுத்திவருகிறார்.

இன்னுயிர் காப்போம், நம்மைக் காக்கும் 48′ திட்டத்தின்மூலம் சாலைகளில் விபத்து நடக்கும்போது, அவர்களை உடனடியாக மீட்டு மருத்துவமனையில் சேர்க்கும் மனிதாபிமானத்தையும், அப்படி சேர்ப்பவர்களின் உயிரைக் காக்க, அரசு மருத்துவமனையோ தனியார் மருத்துவமனையோ இன்றியமையா நேரமாகக் கருதப்படும். முதல் 48 மணி நேரத்திற்கு அரசே செலவுகளை ஏற்க வழிவகை செய்துள்ளார். ‘மக்களைத் தேடி மருத்துவம்’ திட்டத்தின் மூலமாக, நாட்டிற்கே முன்னோடியாகச் சுகாதாரச் சேவைகளை ஒவ்வொரு வீட்டுக்கும் கொண்டுபோய்ச் சேர்த்த மகத்தான பெருமை அவரையே சேரும். தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்தும் வகையில், உரிய சிகிச்சை இல்லாததால், அது ஏற்படுத்தும் தீவிர விளைவுகளை ஆரம்ப நிலையிலேயே கண்டறிந்து நீக்குவதன்மூலம் ஆரோக்கியமான சமுதாயத்தை அமைப்பதற்கு அடித்தளத்தை அமைத்துள்ளார், நம்முடைய முதலமைச்சர் அவர்கள்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - சமூக நீதி அடித்தளத்தில் சிறப்புமிக்க மருத்துவக் கட்டுமானம்!

கண்ணியமான சுகாதாரச் சேவைகள்

நாடே வியக்கும் தமிழ்நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பு சமூக நீதியோடு இணைந்தது. அது, திராவிட இயக்கத்தால் விளைந்தது. திராவிடமுன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வருகிறபோதெல்லாம் செயல்படுத்தப்படும் தொழில்நோக்கு திட்டங்களின் விளைவாக, கண்ணியமான சுகாதாரச் சேவைகள் தமிழ்நாட்டில் எல்லாக் குடிமக்களுக்கும் கிடைப்பதை உறுதிசெய்துள்ளோம்.

75 ஆண்டுகளில்… ஓர் இயக்கம் இத்தனை விரிவான, வலுவான மருத்துவக் கட்டமைப்புகளை, அதிலும் குறைவான ஆட்சிக் காலத்தில் செய்து முடிப்பது என்பது உலக வரலாற்றில் எங்கும் நிகழாத சாதனை. அதை நிகழ்த்திக் காட்டிய பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்திற்கே உண்டு.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இந்தி திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

MUST READ