spot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - உங்களைவிட பிரம்மாண்டமான ஒன்றின் அங்கமாக இருங்கள் - ரயன் ஹாலிடே

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – உங்களைவிட பிரம்மாண்டமான ஒன்றின் அங்கமாக இருங்கள் – ரயன் ஹாலிடே

-

- Advertisement -

”தன்னால் முடிந்தவரை இந்த உலகை மேம்படுத்துவதுதான் மனிதனின் வேலை. அதே நேரத்தில், தான் என்னதான் செய்தாலும், அதன் விளைவுகள் கடுகளவுதான் இருக்கும் என்பதை அவன் எப்போதும் நினைவில் வைத்திருக்க வேண்டும்” – லீராய் பெர்ஸிதடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - உங்களைவிட பிரம்மாண்டமான ஒன்றின் அங்கமாக இருங்கள் - ரயன் ஹாலிடேஅமெரிக்கக் கடற்படையைச் சேர்ந்த போர் விமானி ஜேம்ஸ் ஸ்டாக்டேலின் விமானம் 1965ல் வடக்கு வியட்நாமில் சுட்டு வீழ்த்தப்பட்டது. பற்றி எரிந்த தன்னுடைய விமானத்திலிருந்து பாராசூட் மூலம் குதித்த அவர், தரையைத் தொடுவதற்கு முன்பு தனக்குக் கிடைத்த ஒருசில நிமிடங்களில், தான் தரையைத் தொடுகின்றபோது தான் எதைச் சந்திக்கப் போகிறோம் என்பது குறித்து யோசித்துக் கொண்டிருந்தார். சிறைவாசம் உறுதி என்பதில் அவருக்கு ஐயமிருக்கவில்லை. அவர் சித்திரவதைச் செய்யப்படுவதற்கும் வாய்ப்பிருந்தது. ஒருவேளை மரணம்கூட நிகழலாம். தான் ஒருவேளை உயிருடன் மீண்டால், தன்னால் மீண்டும் தன் குடும்பத்தையும் தன் தாய்நாட்டையும் சந்திக்க முடியுமா என்று அவர் யோசித்தார்.

ஆனால் அவர் தரையைத் தொட்டவுடன் அவருடைய யோசனை சட்டென்று நின்றுவிட்டது. அவர் இனி தன்னைப் பற்றிச் சிந்தித்துக் கொண்டிருக்க மாட்டார். ஏனெனில், அவருக்கென்று ஒரு நோக்கம் இருந்தது.

we-r-hiring

அதற்குப் பத்தாண்டுகளுக்கு முன்பு நடைபெற்றக் கொரியப் போரில் சிறைபிடிக்கப்பட்ட வீரர்களின் நிலை மோசமானதாக இருந்தது. அக்கைதிகள் கடுங்குளிரால் வாடினர். அங்கிருந்த அமெரிக்கக் கைதிகள் தங்களைத் தற்காத்துக் கொள்ளவே முயன்றனர். அவர்கள் உயிர்பிழைத்திருப்பதற்காக ஒருவருக்கொருவர் தங்களுக்குள்ளாகவே அடித்துக் கொண்டனர்.

அப்போது கமான்டராகப் பதவி வகித்து வந்த ஸ்டாக்டேல், வடக்கு வியட்நாம் இராணுவத்தின் கைகளில் தான் சிக்கினால், அவர்கள் பிடித்துள்ளதிலேயே மிக உயர்ந்த பதவி வகித்துக் கொண்டிருந்த ஓர் அமெரிக்க இராணுவ வீரராகத் தான் இருப்போம் என்பதை அறிந்திருந்தார். வடக்கு வியட்நாம் இராணுவத்திடம் பிடிபட்ட அவர் ஏழு ஆண்டுகளுக்கு மேலாக அங்கு சிறை வைக்கப்பட்டிருந்தார். அதில் இரண்டு ஆண்டுகள், கால்களில் இரும்புச் சங்கிலி பிணைக்கப்பட்டு அவர் ஒரு தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

அவர் கைதியாக இருந்தபோதும் தான் ஒரு தலைவர் என்பதை மறக்கவில்லை. அந்தக் கைதி முகாமிலிருந்த அமெரிக்க வீரர்களை அவர் இரகசியமாக ஒன்றிணைத்தார். சித்திரவதைகளைத் தாக்குப்பிடிக்க முடியாமல் தவித்த வீரர்களுக்கு அவர் ஆறுதலளித்து உதவினார். தனிப்பட்ட முறையில் அவர் கடும் சித்திரவதைகளைப் பொறுத்துக் கொண்டார்.

ஸ்டாக்டேல் இருந்த அதே சிறையில் ஜான் மெக்கெயினும் கைதியாக அடைத்து வைக்கப்பட்டிருந்தார். ஜானின் தந்தை அமெரிக்க இராணுவத்தில் உயர் பதவி வகித்து வந்ததைத் தெரிந்து கொண்ட வடக்கு வியட்நாம் அதிகாரிகள் அவருக்கு விடுதலை அளிக்க முன்வந்தனர். வசதியான, நல்ல தொடர்புகளை உடைய கைதிகளுக்கு விடுதலை கிடைக்கும், மற்ற சாதாரணமான கைதிகளுக்கு விடுதலை கிடைக்காது என்ற செய்தியைச் சிறைக் கைதிகளிடம் பரப்புவதற்காக அதை அவர்கள் மேற்கொண்டனர். ஆனால் தனக்கு முன்னால் பிடிக்கப்பட்ட அனைவரையும் விடுவிக்காமல் தன்னை மட்டும் விடுவித்துக் கொள்ள ஜான் ஒப்புக் கொள்ளவில்லை. அதன் காரணமாக ஜானை அவர்கள் தினமும் சித்திரவதை செய்தனர்.

இந்த இருவரும் வியட்நாம் போர் குறித்துத் தங்களுடைய சொந்த அபிப்பிராயங்களைக் கொண்டிருந்தனர். ஆனால் அவர்கள் தங்களுக்குக் கீழே பணிபுரிந்த வீரர்களுக்காகக் கைதிகளாக இருந்து கொண்டே குரல் கொடுத்தனர். அவர்கள் தங்களுடைய சக கைதிகளின் நலனுக்காகத் தங்களுடைய உடல்களை வருத்திக் கொள்ளத் தயங்கவில்லை.

நீங்கள் இதுபோன்ற ஒரு சிறை முகாமில் மாட்டிக் கொள்ள மாட்டீர்கள் என்று நான் நம்புகிறேன். ஆனால் நாம் கடும் பொருளாதாரச் சிக்கல் நிறைந்த ஒரு சூழலில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அது நம்மைத் திணறடித்துக் கொண்டிருக்கிறது. அந்த நேரத்தில் சிலர் சுயநலமாக, தாங்கள் மட்டும் தப்பித்தால் போதும் என்ற மனநிலையுடன் நடந்து கொண்டிருக்கின்றனர்.

ஒருசில ஆண்டுகளுக்கு முன்னால் நிகழ்ந்த பொருளாதார நெருக்கடியின்போது, ஹென்ரி ரோலின்ஸ் என்ற இசைக் கலைஞர், நம்முடைய கடமையைப் பற்றி மிக அழகாக இவ்வாறு எடுத்துரைத்திருந்தார்.தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் - உங்களைவிட பிரம்மாண்டமான ஒன்றின் அங்கமாக இருங்கள் - ரயன் ஹாலிடேமக்கள் இப்போது சிறிது சிறிதாக நம்பிக்கையிழந்து கொண்டிருக்கின்றனர். அதனால் மக்கள் தங்களுடைய மிகச் சிறந்த பக்கத்தை உங்களுக்குக் காட்டாமல் இருக்கக்கூடும். நீங்கள் விரும்பாத ஒரு நபராக ஆகின்ற அளவுக்கு உங்களை ஒருபோதும் நீங்கள் தாழ்த்திக் கொள்ளாதீர்கள். மற்ற எல்லா நேரத்தையும்விட, இப்போதுதான் நமக்கு ஒழுக்கரீதியான முதுகெலும்பு தேவை, அறநெறிரீதியான திசைகாட்டி தேவை. ஒரு வீரனைப்போல நடந்து கொள்வதற்கு இப்போது உங்களுக்கு ஓர் அருமையான வாய்ப்புக் கிட்டியுள்ளது.

அதற்காக உங்களை எவரும் ஒரு தியாகியாக ஆகச் சொல்லவில்லை. நாம் அடுத்தவர்கள்மீது நம்முடைய கவனத்தைக் குவிக்கின்றபோது, அடுத்தவர்களுக்கு உதவுகின்றபோது, ஒரு நல்ல முன்னுதாரணமாக விளங்குகின்றபோது, நம்முடைய சொந்த பயங்களும் தனிப்பட்டப் பிரச்சனைகளும் பெரிதாகத் தோன்றாது. பயம் நம்முடைய பாதையிலிருந்து விலகிக் கொள்கின்றபோது, நாம் வலுப் பெறுகிறோம்.

நம்முடைய தீர்மானத்தால் பாதிக்கப்படக்கூடிய வாய்ப்புள்ளவர்களை நாம் கணக்கில் எடுத்துக் கொள்கின்றபோது, விலகிவிடுவதற்கான, அல்லது நம்முடைய கொள்கையில் சமரசம் செய்து கொள்வதற்கான விருப்பம் ஒரு சுயநலமான எண்ணமாகத் தோன்றத் தொடங்கும்.

சில நேரங்களில், தீர்க்கப்பட முடியாததுபோலத் தோன்றுகின்ற ஒரு பிரச்சனைக்குள் நாம் மாட்டிக் கொள்கின்றபோது, வாய்ப்புகளை உருவாக்கிக் கொள்வதற்கு இப்படிச் சிந்திப்பது பயனுள்ளதாக இருக்கும்: ‘இதை என்னால் எனக்காகச் சரி செய்து கொள்ள முடியாவிட்டால் பரவாயில்லை. குறைந்தபட்சம் மற்றவர்களுக்குப் பயன்படுகின்ற விதத்தில் இதை என்னால் எவ்வாறு மேம்படுத்த முடியும்?’ ஒரு கணம், இதில் நமக்கு எந்தப் பயனும் இல்லை என்று நினைத்துக் கொள்ளுங்கள். அப்படியிருந்தால், இச்சூழ்நிலையைப் பிறருக்குப் பயன்படுகின்ற விதத்தில் எப்படி உங்களால் பயன்படுத்த முடியும் என்று யோசியுங்கள். இதிலிருந்து ஒருசில நல்ல அம்சங்களையாவது எப்படி உங்களால் காப்பாற்ற முடியும் என்று சிந்தியுங்கள்.

நீங்கள் இந்த முடிவுக்கு வரும்போது, உங்களுடைய தோளை அழுத்திக் கொண்டிருந்த நம்பிக்கையின்மை விடைபெற்றுக் கொள்வதைக் கண்டு நீங்கள் அதிர்ச்சியடைவீர்கள். ஸ்டாக்டேலைப்போல இப்போது நமக்கும் ஒரு இலட்சியம் இருக்கிறது.

உங்களைப் பற்றியே எப்போதும் சிந்தித்துக் கொண்டிருப்பதை நிறுத்துங்கள். நான் இதைச் செய்தேன், நான் மிகவும் புத்திசாலி, என்னிடம் அது இருந்தது, நான் இதைவிட மேலானதைப் பெறத் தகுதியானவன் என்ற ரீதியில் சிந்திக்கும்போது, இழப்புகளையும் நீங்கள் தனிப்பட்ட முறையில் எடுத்துக் கொள்வதில் வியப்பேதுமில்லை. நீங்கள் தனியாக உணர்வதிலும் ஆச்சரியம் ஏதுமில்லை. நீங்கள் தேவையில்லாமல் உங்களுடைய பாத்திரத்தையும் முக்கியத்துவத்தையும் அதிகரித்துக் கொண்டுள்ளீர்கள்.

இதில் நாம் எல்லோரும் சேர்ந்து இருக்கிறோம்; எனவே, எல்லோருமாகச் சேர்ந்து இதிலிருந்து மீள்வோம் என்று சிந்தியுங்கள்.

உங்களால் மொத்தச் சுமையையும் இறுதிவரை சுமக்க முடியாவிட்டால் பரவாயில்லை. நம்மால் முடிந்த அளவு நாம் பிறருக்கு உதவிகரமாக இருக்கிறோம். அது போதும்.

பிறரைப் பற்றிச் சிந்திக்கின்றபோது உங்களுடைய முட்டுக்கட்டைகளை உங்களுக்கு வலுவூட்டுகின்ற ஆற்றலாக உங்களால் மாற்றிக் கொள்ள முடியும். உங்களுடைய சொந்த வேதனையைப் பற்றிச் சிந்திக்க உங்களுக்கு நேரமே இருக்காது.

பெருமித உணர்வை உடைத்துவிட முடியும். வலிமைக்கு ஓர் எல்லை இருக்கிறது. பிறருக்கு உதவ வேண்டும் என்ற விருப்பத்திற்கு எல்லையே கிடையாது. பிறர்பால் நாம் கொள்கின்ற இரக்கத்திற்கு குறுக்கே எதுவும் வரக்கூடாது.

தற்போது நீங்கள் எதிர்கொண்டிருக்கின்ற சூழல் நியாயமற்றது என்று போலியாக நம்பிக் கொண்டிருப்பதை முதலில் நிறுத்துங்கள். தற்போது நீங்கள் அனுபவித்துக் கொண்டிருக்கின்ற இன்னல் எவ்வளவு கடினமானதாக இருந்தாலும், யாரோ வேண்டுமென்றே உங்களுக்காக உருவாக்கியுள்ள ஒரு துரதிர்ஷ்டம் அல்ல அது.

இது போன்ற கிட்டப்பார்வைதான், இந்தப் பிரபஞ்சத்தின் மையப் புள்ளி நாம் என்ற எண்ணத்தை நமக்குள் தோற்றுவிக்கிறது. உண்மையில் நம்மைவிடப் பல மடங்கு இன்னல்களை அனுபவித்தவர்கள் ஏராளமானோர் இருக்கின்றனர்.

நமக்கு நாமே இதை நினைவுபடுத்திக் கொள்வது. நம்மை சுயநலமின்மையை நோக்கி மேலும் நகர்த்தும்.

ஒரு பத்தாண்டுகளுக்கு முன்பாக, ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்பாக அல்லது ஓர் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, உங்களைப் போன்ற ஒருவர். இன்று நீங்கள் நின்று கொண்டிருக்கின்ற அதே இடத்தில் நின்று கொண்டும், இன்று நீங்கள் எப்படி உணர்கிறீர்களோ அதேபோன்று உணர்ந்து கொண்டும், இன்று நீங்கள் எந்த எண்ணங்களோடு போராடிக் கொண்டிருக்கிறீர்களோ அதே எண்ணங்களோடு போராடிக் கொண்டும் இருந்தார் என்பதை எப்போதும் நினைவில் வைத்திருங்கள். பின்னாளில் நீங்கள் உதிப்பீர்கள் என்பது அவர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர்களைக் குறித்து நீங்கள் அறிந்துள்ளீர்கள். இன்னும் ஒரு நூற்றாண்டுக்குப் பிறகு, இன்று நீங்கள் நின்று கொண்டிருக்கும் அதே இடத்தில் வேறொருவர் நின்று கொண்டிருப்பார்.

உங்களைவிட பிரம்மாண்டமான ஒன்றின் அங்கமாக நீங்கள் இருக்கிறீர்கள் என்ற உணர்வை அரவணைத்துக் கொள்ளுங்கள். அது ஓர் உற்சாகமூட்டுகின்ற எண்ணம். அது உங்களைச் சூழ்ந்து கொள்ளட்டும். நாம் அனைவருமே நம்மால் முடிந்த அளவு சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கின்ற மனிதர்கள்தாம்.

உங்களுடைய சக மனிதர்கள் கொழிக்க உதவுங்கள். அது உங்களை வலுப்படுத்தும். இப்பிரபஞ்சம் உங்களை விழுங்குவதற்குள் அதற்கு உங்களுடைய பங்களிப்பை வழங்குங்கள், அது குறித்து மகிழ்ச்சி கொள்ளுங்கள்.

தடைக்கற்களே வெற்றிக்கான படிக்கட்டுகள் – விடாமுயற்சியைக் கைவிடாதீர்கள் – ரயன் ஹாலிடே

MUST READ