குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்டத்தின் மூலம் 19 லட்சம் விவசாயிகள் பயன்பெற்றுள்ளதாக உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளாா்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண்மை தொடர்பான இடைக்கால பட்ஜெட்டை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார். விவசாயிகளின் வருமானத்தை உயர்த்துவது மற்றும் உணவு உற்பத்தியை அதிகரிப்பது அரசின் முக்கிய நோக்கமாக உள்ளது என அமைச்சர் தெரிவித்தார்.

அனைத்து கிராமங்களிலும் வேளாண் வளர்ச்சி அடைய “கலைஞர் வேளாண் வளர்ச்சித் திட்டம்” செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும், “மன்னுயிர் காப்போம்” திட்டம் ரூ.178 கோடியில் செயல்படுத்தப்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், கோயம்பத்தூரில் நம்மாழ்வார் வேளாண் ஆராய்ச்சி மையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும், விரைவில் வேளாண் காடுகள் கொள்கை வெளியிடப்பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
நீர்ப்பாசனம் மற்றும் உற்பத்தி வளர்ச்சி
மேட்டூர் அணை கடந்த 5 ஆண்டுகளில் உரிய நேரத்தில் திறக்கப்பட்டதாக அமைச்சர் குறிப்பிட்டார். காவிரி, வெண்ணாறு, வெள்ளாறு கால்வாய் பகுதிகளில் சி மற்றும் டி கால்வாய்கள் ரூ.33 கோடியில் தூர்வாரப்பட்டுள்ளன. மேலும், 10,000 சிறுபாசனக் குளங்கள் மேம்படுத்தப்பட்டுள்ளன.
தமிழ்நாடு சிறுதானிய இயக்கம் மூலம் 12 லட்சம் விவசாயிகளுக்கு ரூ.178 கோடி வழங்கப்பட்டுள்ளது. மக்காச்சோளம் ஊக்குவிப்பு திட்டம் ரூ.78 கோடியில் செயல்படுத்தப்பட்டு, சாகுபடி பரப்பு 10 லட்சம் ஏக்கரில் இருந்து 12 லட்சம் ஏக்கராக உயர்ந்துள்ளது.
எண்ணெய் வித்து இயக்கத்தின் கீழ் ரூ.229 கோடியில் 14 லட்சம் ஏக்கரில் சாகுபடி மேற்கொள்ளப்பட்டு, 7 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர். மா, பலா, வாழை சாகுபடி விரிவாக்கத் திட்டத்தின் மூலம் 39,000 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனர்.
மானியங்கள் மற்றும் ஆதரவு
2 லட்சம் புதிய இலவச மின்சார இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன. நுண்ணீர்ப்பாசனத் திட்டத்தில் சிறு, குறு விவசாயிகளுக்கு 100% மானியமும், பிற விவசாயிகளுக்கு 75% மானியமும் வழங்கப்படுகிறது.
வேளாண் கடன்களுக்கு வட்டி மானியம் மற்றும் வட்டி ஊக்கத் தொகையாக ரூ.3,002 கோடி வழங்கப்பட்டுள்ளது. 50% மானியத்தில் புல் நறுக்கு கருவிகள் வழங்கப்படுகின்றன. 496 பட்டதாரி இளைஞர்கள் வேளாண் சார்ந்த தொழில்கள் தொடங்க மானியம் பெற்றுள்ளனர்.
சந்தை மற்றும் சேமிப்பு வசதிகள்
194 உழவர் சந்தைகள் செயல்பட்டு வருகின்றன; மேலும் 15 புதிய உழவர் சந்தைகள் உருவாக்கப்படுகின்றன. நாளொன்றுக்கு 4 லட்சம் பேர் உழவர் சந்தைகளில் வர்த்தகம் செய்கின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் 137 லட்சம் மெட்ரிக் டன் வேளாண் பொருட்கள் ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் வணிகம் செய்யப்பட்டுள்ளன.
ரூ.495 கோடியில் 3.30 லட்சம் டன் கொள்ளளவு கொண்ட 120 நவீன சேமிப்பு கிடங்குகள் கட்டப்பட்டு வருகின்றன. 800 தரம் பிரிப்பு கூடங்களுடன் கூடிய உர கலங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நிவாரணம் மற்றும் டிஜிட்டல் சேவைகள்
பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ரூ.2,045 கோடி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 5 ஆண்டுகளில் 186 லட்சம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது.
இ-வாடகை செயலி மூலம் 3,816 வேளாண் இயந்திரங்கள் குறைந்த கட்டணத்தில் வாடகைக்கு வழங்கப்பட்டுள்ளன. 33 லட்சம் விவசாயிகளுக்கு அடையாள அட்டை எண்கள் வழங்கப்பட்டுள்ளன; 20 லட்சம் விவசாயிகள் உழவர் கைபேசி செயலியை பயன்படுத்தி வருகின்றனர்.
கால்நடை மற்றும் ஒருங்கிணைந்த பண்ணைகள்
31 இடங்களில் ஒருங்கிணைந்த கால்நடைப் பண்ணைகள் அமைக்கப்பட உள்ளன. 30,000 விவசாயிகளுக்கு மதிப்பு கூட்டுதல், தேனீ வளர்ப்பு உள்ளிட்ட பயிற்சிகள் வழங்கப்பட்டுள்ளன.
சாதனைகள்
மரவள்ளிக்கிழங்கு மற்றும் மல்லி உற்பத்தியில் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளது. கொய்யா உற்பத்தியில் 2வது இடம் பெற்றுள்ளது. 9 விளைபொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதுடன், மேலும் 41 விளைபொருட்களுக்கு விண்ணப்பம் அளிக்கப்பட்டுள்ளது.
மொத்தத்தில், விவசாயிகளின் வருமான உயர்வு, நீர்ப்பாசன மேம்பாடு, சந்தை வசதி விரிவாக்கம் மற்றும் நவீன தொழில்நுட்ப பயன்பாடு ஆகியவற்றை மையப்படுத்திய இடைக்கால வேளாண் பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது.
“இந்தியாவுக்கே வழிகாட்டும் வரலாற்று கடமையை நாம் செய்து வருகிறோம்” -நிதியமைச்சர் தங்கம் தென்னரசு


