மக்களை சாதி – மத ரீதியாக பிளவு படுத்த முயலும் ஒன்றிய அரசை ஆட்சியை விட்டு அகற்றிட உறுதி ஏற்போம் என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்(சிபிஐ) தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து , இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு சார்பில் விடப்பட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, “காண்பதெல்லாம் தொழிலாளி செய்தான்”. உலகின் செல்வங்கள் அனைத்தையும் தொழிலாளி உழைத்து உருவாக்கினாலும், அந்த உழைப்பின் பயன் முதலாளிகளால் கவர்ந்து செல்லப்படுகிறது. உழைப்புக்கு உரிய பங்கு வழங்கப்படுவதே இல்லை.

அரசுகளும், முதலாளிகளும், தொழிலாளர்களின் ஏழ்மை நிலையைப் பார்த்து கருணை வைத்து, அவர்களுக்குரிய பங்கை ஒருபோதும் கொடுக்கப் போவதில்லை. உழைப்பவர்கள் அனைவரும் ஒன்றுபட்டு நின்று போராடித்தான், தமது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்திக் கொள்ள முடியும் என்று உலகறிய உரக்க அறிவித்த நாளே மேதினமாகும்.
அமெரிக்காவில் சிகாகோ நகரில் 1886 ஆம் ஆண்டு உயிர் நீத்த தியாகிகளை, 140 ஆண்டுகள் கழித்தும் நினைவுகூர்ந்து, உலகத் தொழிலாளர்கள் கொண்டாடிக் கொண்டிருக்கிறார்கள். இந்தியாவில் 150 ஆண்டுகளுக்கு மேலாக, வேலைப் பாதுகாப்பு ஊதிய பாதுகாப்பு சமூக பாதுகாப்பு ஆகியவற்றைக் கோரி தொழிலாளர்கள் போராடி 44 சட்டங்களை வென்றெடுத்தனர்.
சென்ற மாதம் தான் அந்தச் சட்டங்கள் அனைத்தும் பறிக்கப்பட்டு, சாறு பிழிந்து அகற்றப்பட்ட சக்கைகளாய் நான்கு தொழிலாளர் சட்ட தொகுப்புகளை ஒன்றிய அரசு செயல்படுத்தி இருக்கிறது. சங்கம் அமைக்கும் உரிமை, வேலை நிறுத்த உரிமை, ஊதியத்தை நிர்ணயம் செய்வதற்காக வேலையளிப்பவரிடம் பேசி உடன்பாடு காணும் உரிமை ஆகியவை பெரும் அளவுக்கு கட்டுப்படுத்தப்பட்டுள்ளன.
நிரந்தர தொழிலாளர்களே இல்லாமல் அகற்றிவிட்டு, அவர்களின் பணியிடத்தில் ஒப்பந்தத் தொழிலாளர்களை நியமித்தல் அல்லது அவுட்சோர்சிங் எனப்படும் வெளிமுகமை முறையை செயல்படுத்துதல் போன்ற நடவடிக்கைகள் வெகு வேகமாக அதிகரிக்கின்றன. இது, தொழிலாளர் சட்டங்களை பெயருக்கு வைத்து விட்டு, அவற்றுக்கு வெளியே தொழிலாளர்களை நிறுத்தும் கேடுகெட்ட உத்தியாகும்.
“கார்ப்பரேட் முதலாளிகளே இந்தியாவின் செல்வத்தை உற்பத்தி செய்கிறார்கள்” என்று இந்தியப் பிரதமர் மோடி கூறியிருப்பது, உழைப்பின் பங்கை ஒன்றிய அரசு அலட்சியம் செய்கிறது என்பதை நிரூபிக்கிறது. உத்திரப் பிரதேசத்தில், அரசு நிர்ணயித்த ஊதியத்தை கூட கொடுக்க மறுக்கும் நிர்வாகங்களை எதிர்த்து தொழிலாளர்கள் நடத்தும் போராட்டத்தின் மீது கொடுமையான அடக்குமுறை கட்டவிழ்க்கப்பட்டுள்ளது. போராட்டத்துக்கு தலைமை ஏற்பவர்களும், போராடும் தொழிலாளர்களும் சிறை வைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு முடிந்திருக்கிறது. தேர்தலின் முடிவு மே நான்காம் தேதி தான் வெளிவர இருக்கிறது. தமிழ்நாட்டில் எட்டு மணி நேர வேலை நேரத்தை அதிகரிப்பதற்காக சட்டம் கொண்டுவரப்பட்டு, தொழிலாளர்களின் போராட்டத்தாலும் தமிழ்நாட்டு மக்களின் அழுத்தத்தாலும் திரும்பப் பெறப்பட்டது.
ஒன்றிய அரசின் நான்கு சட்டத் தொகுப்புகளுக்கும், தமிழ்நாடு அரசு விதிகளை அறிவிக்கை செய்யாமல் இருந்தது வரவேற்கத்தக்கது. கேரள மாநில இடது ஜனநாயக முன்னணி அரசு, இந்தச் சட்டத் தொகுப்புகளைத் தமது மாநிலத்தில் அமல் படுத்தப் போவதில்லை என்று ஏற்கனவே அறிவித்திருக்கிறது. அதைப்போலவே, தேர்தலுக்குப் பின் தேர்ந்தெடுக்கப்படும் அரசு, தமிழ்நாட்டிலும் அந்தச் சட்டத் தொகுப்புகளை செயல்படுத்த மாட்டோம் என்று அறிவிக்க வேண்டியது அவசியம்.
எவ்வாறாயினும் தொழிலாளர்களின் ஒற்றுமையாலும் ஒன்றுபட்ட போராட்டங்களினாலும் மட்டுமே, அவர்களுக்கான உரிமைகளை உறுதிப்படுத்த இயலும். வென்றெடுக்க முடியும். அத்தகைய ஒற்றுமையையும், ஒருமைப்பாட்டையும் முன்னிலும் உறுதியாகக் கட்டியமைக்க, இந்த மே நன்னாளில் தமிழ்நாட்டின் உழைக்கும் மக்கள் உறுதி ஏற்போம்.
அதே போன்று உழைக்கும் மக்களுக்கு எதிராக ,நாட்டின் ஒற்றுமை ஒருமைப்பாட்டிற்கு,மதச்சார்பின்மைக்கு எதிராக செயல்படும் , உழைக்கும் மக்களை சாதி – மத ரீதியாக பிளவு படுத்த முயலும் , இந்தியாவை பாசிசத்தை நோக்கித் தள்ளும் ஒன்றிய பாஜக மோடி அரசை ஆட்சியை விட்டு அகற்றிட உறுதி ஏற்போம்.
உலக சமாதானத்திற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தும் வகையில் ,தனது அரசியல் பொருளாதார ,ராணுவ மேலாதகத்திற்காக ஈரான்,வெனிசுவேலா, பாலஸ்தீனம் போன்ற பல்வேறு இறையாண்மையுடைய சுதந்திர நாடுகளின் மீது தாக்குதலை நடத்தும், கியூபா போன்ற நாடுகளை மிரட்டும் ,ரஷ்ய – உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரவிடாமல் தடுக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தை முறியடிக்க உறுதி ஏற்போம்.
கருத்தாலும், கரத்தாலும் உழைக்கிற மக்களின் வாழ்க்கை மேம்பாட்டுக்கான உரிமைக் குரல்களோடும், உலக சமாதானத்திற்கான போராட்டத்தில் உழைக்கும் மக்களோடு தன்னையும் இணைத்துக் கொண்டிருக்கிற இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில குழுவின் சார்பில், தமிழ்நாட்டின் உழைக்கும் மக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த புரட்சிகர மே தின நல்வாழ்த்துகளை தெரிவிக்கிறோம்” என மாநில செயலாளர் மு.வீரப்பாண்டியன் தெரிவித்துள்ளாா். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளாா்.
விருப்பமில்லா கருவை சுமப்பது, சிறுமிக்கு சித்ரவதை – நீதிமன்றம் கருத்து
