கரூர் கூட்ட நெரிசல் விவகாரம் தொடர்பாக, தமிழ்நாட்டின் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியில் பேசி வரும் கருத்துக்கள் விசாரணையைப் பாதிக்கும் என்பதால், அவர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்ய உத்தரவிடக் கோரி திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி இந்த முக்கிய இடையீட்டு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
கடந்த ஆண்டு கரூர் மாவட்டம் வேலுச்சாமிபுரத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசல் மற்றும் உயிரிழப்பு சம்பவம் தொடர்பாக, உச்ச நீதிமன்ற உத்தரவின்படி சிபிஐ அதிகாரிகள் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்தச் சூழலில், இச்சம்பவம் குறித்து அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பொதுவெளியிலும் ஊடகங்களிலும் தொடர்ந்து பல்வேறு மாறுபட்ட கருத்துக்களை வெளியிட்டு வருகிறார். இது குறித்து திமுக தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில், “கரூர் துயர சம்பவம் தொடர்பான வழக்கு சிபிஐ விசாரணையில் உள்ள நிலையில், அது குறித்து பொதுவெளியில் தொடர்ந்து பேசுவது விசாரணையின் போக்கை திசைதிருப்பும். மேலும், இது விசாரணையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடும்” என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும் அந்த மனுவில், “இது போன்ற பொதுவெளிப் பேச்சுகள் மற்றும் கருத்துக்கள் இந்த வழக்கின் முக்கிய சாட்சிகளை கலைப்பதற்கும், உண்மைகளை மறைப்பதற்கும் வழிவகை செய்யக்கூடும். எனவே, இந்த விவகாரத்தில் சட்ட விதிகளை மீறி தொடர்ந்து பேசி வரும் அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மீது சிபிஐ தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும்” என்றும் கோரப்பட்டுள்ளது.
