திருவண்ணாமலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) போளூர் சட்டமன்ற உறுப்பினர் அபிஷேக் வழக்கமாகப் பயன்படுத்தும் கார் மோதி, தொழுகைக்குச் சென்ற முதியவர் ஒருவர் படுகாயமடைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விபத்து நடந்து 4 மணி நேரத்திற்கு மேலாகியும், ஆளும்கட்சிப் பின்னணி காரணமாகக் காவல்துறை இதுவரை வழக்குப் பதிவு செய்யாமல் காலம் தாழ்த்தி வருவதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதி தவெக எம்.எல்.ஏ அபிஷேக்கின் பிறந்தநாளை முன்னிட்டு, இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சிறப்பு பூஜைகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இதில் கலந்து கொள்வதற்காக நேற்று இரவே திருவண்ணாமலைக்கு வந்த எம்.எல்.ஏ அபிஷேக், அங்குள்ள ஒரு தனியார் விடுதியில் தங்கியிருந்தார். இந்நிலையில், இன்று காலை வேலூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி தவெக கொடி கட்டிய சொகுசு கார் ஒன்று அதிவேகமாக வந்துகொண்டிருந்தது. TN 19 BV 7777 எண் கொண்ட இந்தக் கார், எம்.எல்.ஏ அபிஷேக்கிற்கு மிகவும் நெருக்கமானவரான சாந்தி நிர்மலா என்பவரது பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த காரைத் தான் எம்.எல்.ஏ அபிஷேக் தனது பயணங்களுக்கு அதிகமாகப் பயன்படுத்தி வருகிறார் எனக் கூறப்படுகிறது. கார் திருவண்ணாமலை மாநகராட்சிக்குட்பட்ட வேலூர் சாலையில் அதிவேகமாக வந்தபோது, அதிகாலை நேரத்தில் திருவண்ணாமலையைச் சேர்ந்த ஆதாம் என்ற முதியவர் தனது இருசக்கர வாகனத்தில் தொழுகைக்காகச் சாலையைக் கடக்க முயன்றுள்ளார். அப்போது கட்டுப்பாட்டை இழந்த தவெக கார், முதியவரின் பைக் மீது பலமாக மோதியது.
20 அடி தூரம் தூக்கி வீசப்பட்ட முதியவர் – தப்பியோடிய கும்பல்
கார் மோதிய வேகத்தில் நிலைகுலைந்த ஆதாம், சுமார் 20 அடி தூரத்திற்குத் தூக்கி வீசப்பட்டுச் சாலையில் விழுந்தார். இதில் அவருக்கு இடது காலில் பலத்த எலும்பு முறிவு (Fracture) ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் துடித்தார். விபத்து நடந்த உடனே காரை ஓட்டி வந்த டிரைவர் மணி மற்றும் காரில் இருந்த மற்ற இரண்டு பேர் என மொத்தம் 3 பேரும் காரை அங்கேயே போட்டுவிட்டு சம்பவ இடத்திலிருந்து தப்பியோடிவிட்டனர். படுகாயமடைந்த முதியவர் ஆதாம் மீட்கப்பட்டு, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

வழக்குப் பதியாமல் காலம் தாழ்த்தும் காவல்துறை
விபத்து குறித்துத் தகவலறிந்து வந்த திருவண்ணாமலை கிழக்கு காவல் நிலையப் போலீசார், விபத்துக்குள்ளான தவெக காரை மீட்டு காவல் நிலையத்திற்குக் கொண்டு சென்றனர். ஆனால், விபத்து நடந்து 4 மணி நேரத்திற்கு மேலாகியும் ஓட்டுநர் மணி உள்ளிட்ட எவர் மீதும் காவல்துறை இதுவரை எந்தவொரு சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கவில்லை எனப் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். ஆளும்கட்சி எம்.எல்.ஏ-வுக்கு நெருக்கமானவர்களின் கார் என்பதால், காவல்துறையினர் வேண்டுமென்றே காலம் தாழ்த்தி வருவதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்து கிழக்கு காவல் நிலையத் தரப்பில் கேட்டபோது, “இதுவரை விபத்து தொடர்பாக எந்தவொரு புகாரும் வரவில்லை” என மழுப்பலாகப் பதிலளித்துள்ளனர். ஆளும்கட்சிப் பிரமுகர்கள் சம்பந்தப்பட்ட விபத்து என்பதால் அதிகாரிகள் வழக்கை மறைக்க முயல்கிறார்களா என்ற விவாதம் திருவண்ணாமலையில் கிளம்பியுள்ளது.
