தமிழ்நாட்டில் உயர்கல்வி சேர்க்கை விகிதம் (GER) மற்ற மாநிலங்களை விட மிகச் சிறப்பாக இருந்தாலும், கல்வியின் தரத்தைப் பொறுத்தவரை நாம் இன்னும் சிறந்த நிலையை எட்டவில்லை என்று உயர்கல்வித் துறை அமைச்சர் பெ.விஸ்வநாதன் கவலை தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மாநில உயர்கல்வி மன்றம் சார்பில் “எதிர்கால பொறியியல் பாடத்திட்டம் – பட்டதாரிகளின் வேலைவாய்ப்புத் திறனை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் சென்னை மயிலாப்பூரில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதனைத் தொடங்கி வைத்து அமைச்சர் பெ.விஸ்வநாதன் பேசியதாவது:


50% பட்டதாரிகளுக்கு திறனில்லை
“இந்திய அரசின் தரவுகளின்படி, தமிழ்நாட்டில் உயர்கல்வியில் மொத்த சேர்க்கை விகிதம் (GER) சுமார் 50 சதவீதமாக உள்ளது. மாணவர்களைப் பொறியியல் கல்லூரிகளில் சேர்ப்பதில் மற்ற மாநிலங்களை விட நாம் ஒப்பீட்டளவில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளோம். ஆனால், நாம் வழங்கும் கல்வியின் தரத்தைப் பொறுத்தவரை, மற்ற மாநிலங்களை விட நாம் சிறந்த நிலையில் இல்லை. கல்வித் தரம் என்ற விஷயத்தில் அனைவரும் ஒரே படகில்தான் பயணித்து வருகிறோம்.
நமது பொறியியல் பட்டதாரிகளில் சுமார் 50 சதவீதம் பேர் வேலைவாய்ப்பிற்குத் தேவையான தகுதியான திறன்களைக் கொண்டிருக்கவில்லை. சில தேசிய அளவிலான ஆய்வுகள் இதைவிடவும் கவலைக்கிடமான நிலையையே சுட்டிக்காட்டுகின்றன. கிராமப்புற மாணவர்கள் நிறைய கனவுகளோடு கல்லூரியை நோக்கி வருகிறார்கள். ஆனால் வேலைவாய்ப்பு இல்லாமல் போவது வருத்தமான செய்தி. மதுரை மண்டலத்தில் பல பட்டதாரி இளைஞர்கள் வேலை கிடைக்காமல் கிராமங்களிலேயே நேரத்தைக் கழிக்கும் சூழல் உள்ளது. தரமான கல்வியை எப்படி கொடுக்கிறோமோ அதே போல் வேலைவாய்ப்பும் முக்கியம்.”
இவ்வாறு அவர் பேசினார்.
முன்னதாக, நிகழ்ச்சியில் தமிழ்நாடு உயர்கல்வி மன்ற தலைவர் விஜயகுமார் பேசுகையில், “ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் 50 சதவீத மாணவர்கள் தான் பணிக்குச் செல்கின்றனர் எனக் கூறுகிறது. லட்சக்கணக்கில் மாணவர்கள் பொறியியல் இடங்களில் சேர்ந்தாலும், அனைவரும் வேலைவாய்ப்புக்குச் செல்வதற்கு பெரும் இடைவெளி உள்ளது. தொழில் நிறுவனங்கள் மற்றும் உலகச் சந்தையின் தேவையை கருத்தில் கொள்ளாமல் பாடத்திட்டங்கள் மட்டும் இருந்தால், மாணவர்கள் பேப்பர் அளவிலேயே பட்டம் பெறுவார்கள். நீட் போன்ற விவகாரங்களுக்கு ஊடகங்கள் கொடுத்த முக்கியத்துவத்தை, கல்வி மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த விவகாரங்களுக்குக் கொடுக்கவில்லை” என்றார்.
9 மணிக்கு அலுவலகம் வருகிறேன்: அமைச்சர்
முதலமைச்சரின் பணி முறை குறித்து அமைச்சர் பெ.விஸ்வநாதன் பேசுகையில், “முதலமைச்சர் தினசரி காலை 9.50 மணிக்கு தலைமைச் செயலகம் வந்துவிடுகிறார். அதனால் அமைச்சர்களாகிய நாங்களும் பழைய ‘டிரெண்டிங்கை’ உடைத்து, காலை 9 மணிக்கே அலுவலகம் வந்துவிடுகிறோம். இரவு 8 மணிக்குத்தான் புறப்படுகிறேன்” என்று குறிப்பிட்டார்.
நிறைய பொறியியல் கல்லூரிகள், ஆய்வகங்கள் மற்றும் உள்கட்டமைப்புகள் நம்மிடம் இருந்தாலும், ‘சிறப்பான கல்வி; சிறப்பான வேலைவாய்ப்பு’ (Excellence education; excellence employment) என்ற இலக்கை நோக்கிப் பாடத்திட்டங்களை மேம்படுத்த வேண்டியதன் அவசியத்தை இக்கருத்தரங்கம் வலியுறுத்தியுள்ளது.
