விவசாயக் கடன்களைத் தற்போதைய அரசு முழுமையாகத் தள்ளுபடி செய்யாவிட்டால் சென்னையே தாங்காத அளவுக்குப் போராட்டம் வெடிக்கும் என்று முன்னாள் அமைச்சரும், சட்டமன்ற உறுப்பினருமான கே.சி.கருப்பணன் எச்சரித்துள்ளார்.
ஈரோடு மாவட்டம் அம்மாபேட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பாக, அனைத்து விவசாய சங்கங்களின் சார்பில் பயிர்க்கடனை முற்றிலுமாகத் தள்ளுபடி செய்யக் கோரி பிரம்மாண்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முன்னாள் அமைச்சர் கே.சி.கருப்பணன் எம்.எல்.ஏ பேசியதாவது:

தியாகத்தால் வந்த இலவச மின்சாரம்
“தொடர் போராட்டங்களால்தான் முதன்முதலில் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் கிடைத்தது. மூன்று உயிர்கள் தியாகம் செய்யப்பட்ட பிறகே இந்தச் சலுகை நமக்குக் கிடைத்தது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ஆட்சியைப் பற்றி உங்களுக்கு நன்றாகத் தெரியும். ஒரு விவசாயி இந்த நாட்டை ஆண்ட காரணத்தினால்தான், விவசாயத்திற்கு அளவில்லாத சலுகைகள் நமக்குக் கிடைத்தன. குடிமராமத்துத் திட்டம், 24 மணி நேர மின்சாரத் திட்டம் போன்றவற்றை வழங்கி விவசாயத்தைப் பாதுகாத்ததோடு, எந்தவொரு போராட்டமும் இல்லாமலேயே மூன்று முறை விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்த அரசு எடப்பாடியார் அரசு.
சென்னையே ஸ்தம்பிக்கும்
தற்போதைய அரசு கண்டிப்பாக இந்த விவசாயக் கடனைத் தள்ளுபடி செய்தே ஆக வேண்டும். இது ஒன்றும் தள்ளுபடி செய்ய முடியாத அளவுக்குப் பாரமான கடனோ கிடையாது. அரசு இதனைச் செய்யாவிட்டால் சென்னை தாங்காது. சென்னையே ஸ்தம்பிக்கும் அளவுக்கு இந்தப் போராட்டம் மிகப்பெரிய அளவில் வலுப்பெறும். அதற்குள் அரசு கடன்களைத் தள்ளுபடி செய்ய முன்வர வேண்டும். விவசாயப் பகுதியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, விவசாயிகளுக்கான மானியங்களைப் பெற்றுத் தர கண்டிப்பாகப் போராடுவோம். கடன்களைத் தள்ளுபடி செய்ய வைப்போம்.
மீண்டும் குடிமராமத்துத் திட்டம் வரும்
மீண்டும் ஒரு விவசாயி (எடப்பாடி பழனிசாமி) இந்த நாட்டை ஆள வருவார். அப்போது விவசாய விளைபொருட்களுக்கு ஆதார விலை முதல் கொண்டு அனைத்து நீர்ப்பாசனத் திட்டங்களும், குடிமராமத்துத் திட்டமும் மீண்டும் சிறப்பாகச் செயல்படும். எனவே, நாமெல்லாம் பொறுத்திருந்து மீண்டும் நம்முடைய விவசாயியை முதலமைச்சராக்க நீங்கள் அனைவரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.” இவ்வாறு கே.சி.கருப்பணன் பேசினார்.
