தமிழகத்தில் பக்ரீத் உள்ளிட்ட எந்த நாட்களிலும் பசு மற்றும் கன்றுகளை வெட்டக்கூடாது என சென்னை உயர் நீதிமன்றம் விதித்த தடை உத்தரவிற்கு உச்ச நீதிமன்றம் இன்று இடைக்காலத் தடை விதித்துள்ளது. மேலும், இது தொடர்பாகத் தமிழக டிஜிபி உள்ளிட்ட எதிர் மனுதாரர்கள் பதிலளிக்கக் கோரி நோட்டீஸ் அனுப்பவும் உத்தரவிட்டுள்ளது.


பின்னணி என்ன?
கடந்த மே 27-ஆம் தேதி, கோவை மாவட்டத்தைச் சேர்ந்த இந்து மக்கள் கட்சி நிர்வாகி கே. சூர்யா பிரசாந்த் தாக்கல் செய்த பொதுநல மனுவை சென்னை உயர் நீதிமன்றத்தின் விடுமுறைக்கால அமர்வு நீதிபதிகள் ஜி.ஆர். சுவாமிநாதன் மற்றும் வி. லட்சுமிநாராயணன் ஆகியோர் விசாரித்தனர்.
மனுதாரர் தரப்பில், “பக்ரீத் பண்டிகையின் போது பொது இடங்களில் தற்காலிகக் கொட்டகைகள் அமைத்துப் பசுக்கள் சட்டவிரோதமாக வதைக்கப்படுகின்றன” எனக் குற்றம் சாட்டப்பட்டது. இதனை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், காவல்துறையினர் தற்காலிகப் பகுதிகளை வதைக்கூடங்களாக அறிவிக்க எவ்வித அதிகாரமும் இல்லை என்று சுட்டிக்காட்டினர்.
மேலும், பக்ரீத் உள்ளிட்ட வேறு எந்த நாட்களிலும் தமிழகத்தில் பசு அல்லது கன்றுகளை வெட்டக்கூடாது என்றும், தமிழகத்தில் கால்நடைப் பாதுகாப்புச் சட்டங்களை அரசு கடுமையான முறையில் நடைமுறைப்படுத்த வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
சென்னை உயர் நீதிமன்றம் அன்று பிறப்பித்த உத்தரவு:
சட்டத்தின்படி விலங்குகளை வதைப்பதாக இருந்தால், அவை உள்ளாட்சி அமைப்புகளால் அங்கீகரிக்கப்பட்டு, முறையான உரிமம் பெற்ற இறைச்சிக் கூடங்களில் மட்டுமே நடத்தப்பட வேண்டும். பக்ரீத் பண்டிகையின் போது பசுக்களை மட்டுமே பலியிட வேண்டும் என்பது இஸ்லாமிய மதக்கோட்பாடுகளில் கட்டாயமாக்கப்பட்ட ஒன்று அல்ல; பிற விலங்குகளையும் பலியிட முடியும். இந்தத் தடையை முழுமையாக உறுதி செய்யத் தமிழகத் தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு:
சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த அதிரடி உத்தரவிற்கு எதிராகத் தமிழக அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது.
இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதி விக்ரம் நாத் தலைமையிலான அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது மனுவைப் பரிசீலித்த நீதிபதிகள், சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆணைக்கு இடைக்காலத் தடை விதித்து அதிரடி உத்தரவு பிறப்பித்தனர்.
மேலும், இந்த விவகாரம் தொடர்பாக மூல மனுதாரரான சூரிய பிரசாந்த், தமிழக டிஜிபி, கோவை மாவட்ட ஆட்சியர் உள்ளிட்டோர் பதிலளிக்க உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இந்த இடைக்காலத் தடை உத்தரவு தற்போதைய சூழலில் மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
