விஷவாயு தாக்கி உயிரிழப்பு எண்ணிக்கை அதிகம் தமிழகத்தில் தான் – தலைவர் வெங்கடேசன்
ஆவடி மாநகராட்சி அலுவலகத்தில் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர், வெங்கடேசன் ஆய்வு செய்தார். இதில் மாவட்ட ஆட்சியர் ஆல்பின் ஜான் வர்கீஸ், ஆவடி மாநகராட்சி ஆணையர் தர்பகராஜ், ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் செல்வராணி, ஆவடி துணை காவல் ஆணையர் பாஸ்கரன், ஆவடி வட்டாட்சியர் விஜயகுமார் ஆகியோர் கொண்ட குழு கடந்த 7ந் தேதி ஆவடி மத்திய அரசு குடியிருப்பு பகுதியில் விஷவாயு தாக்கி உயிரிழந்த ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் தேவன் மற்றும் மோசஸ் ஆகியோர் குறித்து கலந்தாய்வு செய்தனர்.
அதனை தொடர்ந்து, உயிரிழந்த சம்பவ பகுதிக்கு சென்று பார்வையிட்டு கள ஆய்வு செய்து சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகளிடம் ஆணையத்தின் தலைவர், வெங்கடேசன் விசாரணை மேற்கொண்டார். அதன்பின், ஆவடி ஓசிஎப் அலுவலகத்திற்கு சென்று பொது மேலாளர் சீனிவாச ரெட்டியை சந்தித்து மேலும் விவரங்களை கேட்டறிந்தார்.
பின்பு, செய்தியாளர்களை சந்தித்த தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் தலைவர், வெங்கடேசன், இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் தான் கழிவுநீர்த் தொட்டிகளுக்குள் இறங்கும்போது விஷவாயு தாக்கி மூச்சுத்திணறி இறப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள் என குறிப்பிட்டார். இது போன்ற சம்வங்கள் வரும் காலங்களில் நடக்காமல் இருக்க இப்பணியில் ஈடுபடும் தூய்மை பணியாளர்களுக்கு போதிய விழிப்புணர்வு அளிக்குமாறு அறிவுறுத்தினார்.
மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு நிவாரணமாக ஓசிஎப் நிறுவனம் சார்பாக நிவாரணத் தொகை தலா ரூபாய் பத்து லட்சம் தருவதாக ஒப்புக்கொண்ட நிலையில் மேலும் நிவாரணத் தொகையை ரூபாய் ஐந்து லட்சம் உயர்த்தி ரூபாய் பதினைந்து லட்சமாக வழங்குமாறு கேட்டுக் கொண்டார். அதற்கு ஓசிஎப் நிர்வாகம் ஒப்புதல் அளித்து, வருகின்ற 22ந் தேதி பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண தொகையை வழங்க முடிவு செய்துள்ளதாக தெரிவித்தார்.
இதில் உயிரிழந்த மோசஸ் குடும்பத்தினருக்கு, ஓசிஎப் நிறுவனம் மற்றும் மாநில அரசுதுறை சார்ந்த நிறுவனங்களிலிருந்தும் மொத்தமாக ரூபாய் முப்பத்தி நான்கு லட்சமும், அதே போன்று தேவன் குடும்பத்தினருக்கும் ரூபாய் இருபத்தி நான்கு லட்சமும் நிவாரணத் தொகையாக வழங்கப்பட உள்ளதாக தெரிவித்தார்.
இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட குடும்ப உறுப்பினர் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் மத்திய அரசில் அல்லது மாநில அரசில் வேலைவாய்ப்பு அளிக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.