பாட்டாளி மக்கள் கட்சிக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்த விவகாரம் தொடர்பாக சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
தேர்தல் நடைமுறை தொடங்கி அமலில் இருப்பதால் பாமகவின் மாம்பழ சின்னத்தை முடக்குவது தொடர்பாக நீதிமன்றம் உத்தரவு பிறப்பிக்க அதிகாரம் இல்லை என இந்திய தேர்தல் ஆணையம் தரப்பில் சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.

பாமகவின் தலைவராக தன்னை அறிவிக்கும் வரை, மாம்பழ சின்னத்தை முடக்க கோரி பாமக நிறுவனர் ராமதாஸ் தொடர்ந்த வழக்கு தவறானது என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
தேர்தல் ஆணையத்தின் விளக்கம்
இதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் அளித்த விளக்கம் பின்வருமாறு, ”அங்கீகாரம் பெற்ற கட்சியாக இருந்து தற்போது அங்கீகாரம் இல்லாத கட்சியாக இருக்கும் பாமகவுக்கு சின்னம் ஒதுக்கீடு விதிகளின் படி மட்டுமே அன்புமணி தரப்புக்கு மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அங்கீகாரம் இல்லாத பாமக கட்சி, மாம்பழ சின்னத்தை உரிமையாக கோர முடியாது என்றும், அன்புமணி, ராமதாஸ் என்ற தனிநபர்களுக்காக மாம்பழ சின்னம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் தெளிவுபடுத்தியுள்ளது.
மேலும், பாமக அங்கீகாரம் இல்லாத கட்சியாக ஆனதால் மாம்பழம் பொது சின்னமாக மட்டுமே அறிவிக்கப்பட்டு முதலில் உரிமை கோரியவருக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது” இவ்வாறு தேர்தல் ஆணையம் உயர்நீதிமன்றத்தில் விளக்கமளித்துள்ளது.
அன்புமணி தரப்பு வாதம்,
இதனைத் தொடர்ந்து, பொதுக்குழு நடத்தாமலே ராமதாஸ் தன்னை தானே தலைவராக தேர்ந்தெடுத்தது செல்லாது என அன்புமணி தரப்பில் வாதிடப்பட்டது.
நிறுவனர் ராமதாஸை சிலர் தவறாக வழி நடத்துகின்றனர் என்றும், இது தந்தை மகனுக்கு இடையேயான பிரச்சனை மட்டுமே, ஆனால் அதை வைத்து சிலர் அரசியல் செய்கின்றனர் என அன்புமணி சார்பில் குற்றம்சாட்டப்பட்து.
2025 ஆகஸ்ட் மாதம் சிறப்பு பொதுக்குழு நடத்தப்பட்டு ராமதாஸ் செயல் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக கூறுவது போலியானது. பொதுக்குழு நடத்தப்படும் என 21 நாட்களுக்கு முன் நிர்வாகிகளுக்கு அழைப்பு விடுத்து அதன் பின் பொதுக்குழு கூட்டப்பட வேண்டும். அப்படி கூட்டப்பட்டதற்கான ஆதாரங்கள், ஆவணங்கள் இல்லை என்று அன்புமணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ராமதாஸ் தரப்பு வாதம்,
ராமதாஸ் தரப்பில் முன்வைக்கப்பட்ட வாதங்கள், ”அன்புமணி தலைவராக தேர்வு செய்யப்பட்ட பின்பு தான் பாமக கட்சிக்கான அங்கீகாரமே ரத்தானது. அன்புமணி கட்சி விரோத செயல்களில் ஈடுபட்டதால் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாகவும், ஆனால் மீண்டும் அன்புமணியை தலைவராக தேர்வு செய்யப்பட்டதாக ஆவணங்களை மோசடியாக தயாரித்து தேர்தல் ஆணையத்தை ஏமாற்றி உள்ளார் என்றும் தெரிவித்துள்ளனர்.
மேலும், அன்புமணிக்கு மாம்பழம் சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையத்திற்கு ஏன் இவ்வளவு ஆர்வம் என தெரியவில்லை என்றும், திநகரில் உள்ளது அன்புமணியின் வீடு, ஆனால் அதை பாமக அலுவலகமாக தேர்தல் ஆணையம் எப்படி கருதியது ? என ராமதாஸ் தரப்பில் கேள்வி எழுப்பட்டது.
அதோடு, அன்புமணியின் பதவிகாலம் முடிந்தும், தேர்தல் ஆணையம் எப்படி அன்புமணியை தலைவராக ஏற்றது என தெரியவில்லை. மாம்பழ சின்னத்தை பயன்படுத்த அன்புமணிக்கு அனுமதி வழங்க கூடாது என நீதிமன்றத்தில் ரமதாஸ் தரப்பு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
