அதிமுக பெரும்பான்மைக்கு தேவையான 118 இடங்களை பெற்றாலும், பாஜக ஆட்சியில் பங்குபெறும் என்று அமித்ஷா தனது ஆங்கில நாளிதழ் பேட்டி மூலம் தெளிவுபடுத்தி விட்டார் என்று மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லெட்சுமணன் தெரித்துள்ளார்.

தமிழ்நாட்டில் அதிமுக தலைமையிலான ஆட்சியில் பாஜக பங்கேற்கும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆங்கில நாளேட்டிற்கு அளித்துள்ள பேட்டியின் முழுமையான பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லெட்சுமணன் பிரபல யுடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- அதிமுக தலைமையிலான அமைச்சரவையில் பாஜக இடம்பெறும் என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா மீண்டும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். அதற்கு பதில் அளித்துள்ள எடப்பாடி பழனிசாமி தனிப் பெரும்பான்மையுடன் அதிமுக ஆட்சி அமைக்கும் என்று சொல்கிறார். ஆட்சியில் பங்கு என்கிற விஷயத்தை நோக்கிய பயணத்தில் பாஜக, அமித்ஷா மிகவும் உறுதியாக இருக்கிறார்கள்.
காஷ்மீர் முதல் பாண்டிச்சேரி வரை என்று ஒரு முறை மோடி சொன்னதற்காகவே, அங்கு ஆட்சியை கவிழ்த்துவிட்டு பாஜக ஆட்சியை கொண்டுவந்தார்கள். அப்போது தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பது என்கிற நீண்ட கால கனவை நினைவாக்க அவர்கள் சரியாக பயணிக்கிறார்கள். ஆனால் அது தமிழ்நாட்டு அரசியலுக்கு எடுபடாது என்று அதிமுகவினர் கொஞ்சம் பதுங்கி பதுங்கி மெதுவாக சொல்ல தொடங்கினார்கள். கூட்டணி ஆட்சிபட்டு வராது என்று அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சொல்கிறார்களே தவிர, இன்றுவரை எடப்பாடி பழனிசாமியின் வாயில் இருந்து உறுதியான வார்த்தை வரவில்லை.
ஆசை பாஜகவிடம் இருந்து தொடங்கி இருக்கலாம். அதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய எடப்பாடி பழனிசாமி, அதை செய்ய தவறியதன் மூலமாக இந்த கூட்டணியை சிக்கலை நோக்கி நகர்த்தி கொண்டிருக்கிறார். இதை இந்த நிலையில் வைத்துக்கொண்டு என்ன சுற்றுப் பயணம் போனாலும், எத்தனை வீர வசனம் பேசினாலும் எடுபடாது. அதிமுக தொண்டர்கள் மத்தியில் ஒரு குழப்பமும் கோபமும் தான் வரும். கூட்டணி அறிவிப்பின்போது அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று நிலையில், அதற்கு 4 நாட்கள் கழித்து விளக்கம் அளித்த எடப்பாடி பழனிசாமி, அமித் ஷா என்ன வேண்டும் என்றாலும் சொல்லி இருக்கட்டும். அதிமுகவின் நிலைப்பாடு என்பது தனிப் பெரும்பான்மை கிடைத்தால் கூட அதிமுகதான் தனித்து ஆட்சி அமைக்கும் என்று எடப்பாடி பழனிசாமி சொல்லி இருந்தால் இன்றைக்கு இந்த விவாதம் இவ்வளவு தூரம் வந்திருக்காது. அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் எல்லாம் அதற்கு மறுப்பு தெரிவித்த நிலையில் இன்றைக்கு அமித்ஷாவின் பேட்டி ஆங்கில நாளிதழில் வந்துள்ளது.
அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று தற்போது மட்டும் சொல்லவில்லை. மதுரையில் நடைபெற்ற பொதுக்கூட்டத்திலும் சொன்னார். அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் என்று சொன்னாலும், அமித்ஷா கூட்டணி ஆட்சி என்று சொல்கிறார் என்றால், அதிமுக 118 இடங்களை பிடித்தாலும் கூட்டணி ஆட்சிதான் என்று சொல்கிறார். அமித்ஷாவின் வார்த்தைக்கு இதை தவிர வேறு அர்த்தம் கிடையாது. 118க்கு கீழே 110 இடங்களை அதிமுக பிடித்தாலும் கூட்டணி ஆட்சி கிடையாது என்று சொல்கிற உரிமை எடப்பாடிக்கு கிடையாது. யாருடைய தயவுடன் தான் அவர் ஆட்சி அமைக்க வேண்டும். 5 இடங்கள் கேட்டு பாஜக உள்ளிட்ட யாரிடம் போய் நின்றாலும், கூட்டணியில் பங்கு கொடுத்தால்தான் வருவோம் என்பார்கள். கிட்டத்தட்ட திமுக, அதிமுகவை தவிர இரு அணிகளிலும் இருக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் ஆட்சியில் பங்கேற்க வேண்டும் என்கிற ஆசை வந்துவிட்டது.
அமித்ஷா சொல்வதன் அர்த்தம் என்பது தேர்தல் முடிவுகள் எப்படி இருந்தாலும், கூட்டணிக்கு பெரும்பான்மை கிடைத்து விட்டால் நாங்கள் ஆட்சியில் பங்கேற்போம் என்று சொல்கிறார். நாங்கள் அமைச்சரவையில் இடம்பெறுவோம் என்று சொல்கிறார். அப்போது எடப்பாடி பழனிசாமி தனிப் பெரும்பான்மை கிடைத்தால் நாங்கள் தனித்தே ஆட்சி அமைப்போம் என்கிற வார்த்தையை சேர்த்து சொல்ல அவர் தயங்குவதால் தான், இன்றைக்கு இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் பேட்டி வந்துள்ளது. நாளை இந்துவில் பேட்டியளிப்பார். ஒரு வாரம் கழித்து டைம்ஸ் ஆஃப் இந்தியாவுக்கு பேட்டி அளிப்பார். அவர் சொல்லிக்கொண்டே இருப்பார். எடப்பாடி இதற்கு ஒரு தெளிவான முற்றுப்புள்ளி வைக்காத வரை.
பாஜக உடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி அவ்வளவு எளிதாக முறித்துக் கொள்ள மாட்டார். கூட்டணி அறிவிப்பின்போது அதிமுகவுக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை. பாஜக கூட்டணிக்கு அதிமுக உடனடியாக சம்மதிக்கவில்லை என்ற கோபம் கூட அவர்களுக்கு இருக்கலாம். அதையும் தாண்டி வேறு சில கோபங்களோ, அல்லது அதிருப்தியோ, அல்லது உள்நோக்கத்துடன் கூடிய திட்டங்களோ பாஜகவுக்கு இருக்கலாம். அதை ஏன் மீண்டும் சொல்கிறேன் என்றால்? இந்த நிமிடம் வரை தமிழ்நாட்டில் திமுக ஆட்சியை விரட்டி அடித்து, என்.டி.ஏ ஆட்சி அமையும். அதிமுகவில் இருந்து ஒருவர் முதலமைச்சராக வருவார் என்ற வரைக்கும் அமித்ஷா சொல்லிவிட்டார். ஆனால் எடப்பாடி பழனிசாமி தான் முதலமைச்சர் என்று இந்த நிமிடம் வரை அவர் சொல்லவில்லை.
உண்மை அப்படி இருக்கிறபோது, தமிழகத்தை மீட்போம் மக்களை காப்போம் என்ற இலச்சினை அறிமுக நிகழ்வின் போது எடப்பாடி பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது எப்போதும் முதலமைச்சரை டெல்லி தானே தீர்மானிக்கும் என்று இயல்பாக சொல்கிறார். எவ்வளவு பெரிய பொய் அது. எதற்கு அவரே மண்ணை எடுத்து, தன்னுடைய தலையில் போட்டுக்கொள்கிறார். எந்த காலத்தில் அதிமுகவின் முதலமைச்சரை டெல்லி தீர்மானித்தது. காங்கிரஸ், பாஜக உடன் கூட்டணி வைத்தபோதும் அதிமுகவின் முதலமைச்சரை எப்போது டெல்லி தீர்மானித்தது? எதற்காக இல்லாத ஒன்றை அவர் திணிக்கிறார். எடப்பாடி பழனிசாமி தன்னுடைய தலையில் மட்டும் மண்ணை போடவில்லை. அதிமுகவை சவக்குழிக்குள் தள்ளுவது போல அவமானப்படுத்துகிறார்.
தொடர்ந்து நான் தான் முதலமைச்சர் வேட்பாளர் என்று அமித்ஷாவே சொல்லி விட்டாரே என்றும் சொல்கிறார். அவர் எங்கே சொன்னார்? என்டிஏ கூட்டணிக்கு தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமிதான் தலைவர். ஏன் முதலமைச்சர் அதிமுகவில் இருந்து ஒருவர் என்று சொல்கிறார்கள்?. ஏன் எடப்பாடி பெயரை சொல்லவில்லை? இப்போதும் ஒன்றுமில்லை. எடப்பாடி பழனிசாமி உறுதியாக சொல்ல வேண்டும். எங்கள் கூட்டணியின் தலைவர் நான் தான். முதலமைச்சர் வேட்பாளரும் நான்தான். யாருடைய அனுமதியும் தேவை இல்லை. எடப்பாடி பழனிசாமி இப்படி சொல்வதற்கு முழு தகுதி உள்ளது. ஏனென்றால் தலைவரே அவர்தான். அமித்ஷா சொல்வது சொல்லி கொண்டிருக்கட்டும். தலைவர் ஒரு முறை அடித்தாலும் நச்சென்று அடித்தார் என்று சொல்ல வைக்க வேண்டும். அதைதான் அதிமுக தொண்டர்கள் எதிர்பார்ப்பார்கள். அந்த வார்த்தை இன்னும் தெளிவாக வராத வரைக்கும் எடப்பாடி என்ன குட்டிக்கரனம் போட்டாலும் அதனால் அரசியல் பலன் இருக்காது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.