அதிமுக ஒருங்கிணைப்பு என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் மோசடியான வார்த்தை என்றும், அதிமுகவை முழுமையாக கபளீகரம் செய்வதற்காக அது தற்போது செங்கோட்டையனை கையில் எடுத்திருப்பதாகவும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

செங்கோட்டையனின் டெல்லி பயணம் குறித்தும், பாஜகவின் அடுத்தக்கட்ட அரசியல் நகர்வுகள் குறித்ததும் மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- நாட்டின் உள்துறை அமைச்சராக இருக்கக்கூடிய அமித்ஷாவை சந்திக்க வேண்டும் ஒன்றால் ஒன்று ஜெலன்ஸ்கியாக இருக்க வேண்டும். அல்லது டிரம்ப் ஆக இருக்க வேண்டும். அப்போது செங்காட்டையான் யார்? செங்கோட்டையன் உடன் அமித்ஷா ஒரு மணி நேரம் சந்தித்து பேசியுள்ளார் என்கிறபோது தமிழ்நாட்டு அரசியலுக்கு பாஜக எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். அதிமுகவின் தலைமையான எடப்பாடியை பகைத்துக் கொண்டதால் செங்கோட்டையன் மீது நடவடிக்கை எடுக்கிறார்கள். அதையும் பாஜகவிடம் தகவல் சொல்லிவிட்டுதான் நடவடிக்கையை எடுத்தனர். அப்படி இருக்கும்போது அதிமுகவில் இருந்து வெளியே வந்த செங்கோட்டையனை, பாஜக தலைவர்கள் நேரில் அழைத்து பேசுகிறார்கள். இதனால் எடப்பாடி பழனிசாமி பாஜக உடனான கூட்டணியை முறித்துக் கொள்வார் என்கிற அச்சம் காரணமாகவே, இது திமுக ஊடகங்கள் பரப்பிய சதி என நயினார், வானதி சீனிவாசன் போன்றவர்கள் சொல்கிறார்கள்.
அதிமுக ஒருங்கிணைப்பு என்கிற வாதத்திலேயே முரண்பாடு இருக்கிறது. சசிகலாவும், தினகரனும் ஒரே மேடையில் ஒன்றாக சேர்ந்து பங்கேற்பது கிடையாது. சசிகலாவுக்கு, அவருடைய சகோதரர் திவாகரன் உடன்தான் அனைத்து வரவு செலவுகளும் உள்ளன. அவர் தினகரனை சேர்த்துக்கொள்ள மாட்டார். சசிகலாவை எந்த காரணத்திற்காகவும் அதிமுகவில் சேர்க்க மாட்டார்கள். அவரை சேர்த்தாலே, கோஷ்டிகள் உருவாகி விடும். சசிகலாவின் கோஷ்டி என்பது மிகவும் வலிமையானது. அதனை எடப்பாடி பழனிசாமி விரும்பவில்லை. சசிகலா, அதிமுகவுக்குள் வந்தால் அவருடைய குடும்பம் முழுவதும் உள்ளே வந்துவிடும். அவர்களுடன் எடப்பாடி பழனிசாமியால் போட்டி போட முடியாது. ஏன் பாஜக நினைத்தாலே போட்டி போட முடியாது. ஒருங்கிணைவது என்கிற கோஷம் என்பது பெயர் அளவிலான கோஷம்தான். அதிமுகவை பொறுத்தவரை அது ஒரு மோசமான கோஷமாகும். சசிகலா, தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் எடப்பாடி பழனிசாமி தலைமையை எதிர்த்து வெளியே போனவர்கள். அந்த எடப்பாடியின் தலைமை தான் நின்று 20 சதவீத வாக்குகளை வாங்கியுள்ளது. 75 சீட்டுகளை வென்றதும் எடப்பாடியின் தலைமைதான். இவர்கள் எல்லாம் என்ன வெற்றி பெற்றார்கள்? அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பதே பாஜக உருவாக்கிய ஒரு வெற்று போலி கோஷமாகும்.
அதிமுக ஒருங்கிணைய வேண்டும். தலைமை வர வேண்டும் என்று சொல்கிறார்கள். யாருடைய தலைமை வர வேண்டும் என்கிறார்கள்? எடப்பாடி பழனிசாமியை தூக்கிவிட்டு கட்சியின் சீனியரான செங்கோட்டையன தலைமை பொறுப்புக்கு வர வேண்டும் என்று சொல்கிறார்கள். அப்படி அவர் தலைமை பொறுப்புக்கு வந்தால்? எடப்பாடி பழனிசாமி தலைமையில் தனியாக ஒரு அணி பிரிந்து செல்லும். அப்போது அதிமுகவில் எப்படி ஒற்றுமை வரும்? சசிகலா, ஓபிஎஸ், தினகரன் போன்றவர்களை அதிமுகவில் இருந்து நீக்கியதால் தென் மாவட்டங்களில் அதிமுக பலவீனமடைந்து விட்டது. எனவே அவர்களையும் அதிமுகவில் சேர்க்க வேண்டும் என்பது ஆர்எஸ்எஸ் அமைப்பின் திட்டமாகும். சசிகலா, ஓபிஎஸ் போன்றவர்கள் தான் தேவர் சமுதாயத்தின் பிரதிநிதிகள் என்பது கிடையாது. 10.5 சதவீத உள்ஒதுக்கீடு என்பது எடப்பாடி செய்த மிகப்பெரிய தவறாகும். இதன் பாதிப்பு சட்டமன்றத் தேர்தலில் எதிரொலித்தது. ஓபிஎஸ் – இபிஎஸ் இணைந்து 75 இடங்களில் வெற்றி பெற்றார்கள். ஆனால் தினகரனால் 50 தொகுதிகளில் அதிமுகவின் வெற்றி பறிபோனது.
தற்போது தினகரனுக்கு பழைய பலம் கிடையாது. எடப்பாடி தன்னுடைய பிரச்சாரத்தை முழுமையாக தெற்கில் தான் செய்துள்ளார். அங்குள்ள அமமுக முழுமையும் தன்வசமாக்கியுள்ளார். ஓபிஎஸ், வைத்திலிங்கம் போன்றவர்களிடம், எடப்பாடி தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் அதிமுகவில் சேர தயாராகி விட்டனர். ஆனால் இவர்கள் சொல்வது எல்லாம் பாஜகவை கைப்பற்ற ஆர்எஸ்எஸ் நடத்துகிற நாடகத்தில் வரக்கூடிய, அரங்க காட்சிகளில் உச்சரிக்கப்படக் கூடிய, வசனம்தான் ஒருங்கிணைவோம். செங்கோட்டையனை பார்க்க 10 ஆயிரம் பேர் வரை வந்ததாக சொல்கிறார்கள். அவர்களை எல்லாம் அனுப்பி வைத்தது, வேலுமணியும், அண்ணாமலை, டி.எல்.சந்தோஷ் ஆகியோர் தான். இவர்களின் நாடகம்தான், செங்கோட்டையன் நடத்திய நாடகம்.
உண்மையான பிரச்சினை என்ன என்றால்? ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு முழுமையாக ஒரு கட்சி தேவை. அந்த கட்சி அதிமுக. அதை முழுங்குவதற்கு அவர்கள் தயாராகி விட்டனர். இப்படிதான் பீகாரில் முழுங்கினார்கள். சிராக் பாஸ்வானை வைத்து, நிதிஷ்குமாரை காலி செய்தனர். மகாராஷ்டிராவில் ஷிண்டேவையும், அஜித் பவாரையும் வைத்து செய்தனர். அதேபோல், தமிழ்நாட்டிலும் செய்வதற்கு தயாராகி விட்டனர். ஆர்எஸ்எஸ்-ஐ பொருத்தவரை ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அதிமுகவை நிற்க வைக்கக்கூடாது. அப்படி அதிமுகவை நிற்க வைப்பவர் சசிகலா. எடப்பாடியை முதலமைச்சர் ஆக்கியது சசிகலா. நின்று காட்டியவர் சசிகலா. அந்த அதிமுகவை நிர்மூலமாக்கியது பாஜக. டிடிவி தினகரனுக்கும், எடப்பாடிக்கும் சண்டையை உருவாக்கி, அதில் ஓபிஎஸ்-ஐ கொண்டுவந்து சேர்த்து, அவர்கள் அணிக்கு எடப்பாடியை மாற்றியது பாஜக. பாஜக எதிர்ப்பாளராக இருந்த சசிகலா, இன்றைக்கு பாஜகவின் ஆதரவாளர். இரட்டை இலை சின்னத்துக்காக லஞ்சம் கொடுத்து சிறைக்கு சென்ற தினகரன், இன்றைக்கு பாஜக ஆதரவாளர். ஓபிஎஸ் பாஜக ஆதரவாளர். எடப்பாடியும் எதிர்நிலைப்பாடு எடுத்து மீண்டும் ஆதரவாளராகிவிட்டார்.
இருக்கும் கட்சிகளிலேயே கொள்கை இல்லாத, மென்மையான இந்துத்துவா கட்சியான அதிமுகவை கபளீகரம் செய்ய புதுவராக செங்கோட்டையன் கதை வந்தது. அவர் ஈரோடு மாவட்ட தலைவராக வருவார் என்று பார்த்தால், அமித்ஷா, நிர்மலாவை சந்தித்தார். அவர் மீது எடப்பாடி நடவடிக்கை எடுத்த உடன் முடிந்துவிட்டது என்று பார்த்தால் மறுபடியும் அமித்ஷா, நிர்மலாவை சென்று சந்திக்கிறார். எடப்பாடி முழு பலத்துடன் இருந்தால் பாஜக உடனான கூட்டணியை உடைத்துவிட்டு, சென்றுவிடுவார். தற்போது அவர் கூட்டணி உடைக்க சந்தர்ப்பத்தை எதிர்பார்த்து காத்திருக்கிறார்.
மத்திய அமைச்சர்கள் உடனான செங்கோட்டையனின் சந்திப்பின் போது, எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதற்கான வியூகங்களை சொல்லி இருப்பார். கட்சிக்குள் இருக்கும் மோதல் போக்கு குறித்துதான் விவாதித்து இருப்பார்கள். பாஜகவுக்கு செங்கோட்டையன் தேவைப்படுகிறார். இதன் மூலம் எடப்பாடிக்கு தென் மாவட்டங்கள் மட்டும் இன்றி, கொங்கு மண்டலத்திலேயே எதிர்ப்பு எழுந்துவிட்டது என்கிறார்கள். பாஜகவை நம்பி சென்றதால், செங்கோட்டையனின் அரசியல் வாழ்க்கையே முடிந்துவிட்டதாக சொல்கிறார்கள். பாஜகவை நம்பி சென்ற ஓபிஎஸ்க்கு என்ன செய்தார்கள்? அப்படிதான் செங்கோட்டையனுக்கும் எதுவும் செய்யமாட்டார்கள். அவர் பாஜகவில் இணைந்து விடுவார். எடப்பாடி உறுதியாக நின்று கட்சியை வழிநடத்தினார் என்றால்தான் இது சாத்தியமாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.