ஆளுநர் விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்திற்கு ஜெகதீப் தன்கர் மிரட்டல் விடுப்பதாகவும், அனைத்து தரப்பினரும் அவருக்கு எதிர்ப்பை பதிவு செய்ய வேண்டும் என்றும் வழக்கறிஞர் வாஞ்சிநாதன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஆளுநர் விவகாரத்தில் உச்சநீதிமன்றத்திற்கு எதிராக குடியரசுத் துணை தலைவர் ஜெகதீப் தன்கர் முன்வைத்திருக்கும் குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளித்து வழக்கறிஞர் வாஞ்சிநாதன் யூடியூப் சேனல் ஒன்றுக்கு நேர்காணல் அளித்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:- மோடிக்கு எதிராக யாராவது சின்ன கருத்து தெரிவித்திருந்தால் கூட, ஒரு ட்வீட் போட்டிருந்தாலும் அவர்களை நீதிபதியாக நியமிக்க மறுக்கிறார்கள். தமிழ்நாட்டில் ஜான் சத்யன் என்கிற வழக்கறிஞர் மோடிக்கு எதிரான பேஸ்புக் பதிவை ஷேர் செய்தார் என்பதற்காக இன்று வரை அவரை நீதிபதியாக நியமிக்க மறுக்கிறார்கள். நீதிபதிகள் நியமன விவகாரத்தில் நீதித்துறை சுதந்திரம் என்பது மிகவும் முக்கியமாகும். சரியான நீதிபதிகள் வர வேண்டும். மாறுபட்ட கண்ணோட்டம் கொண்ட அவர்களை விமர்சிக்கக்கூடிய யாரையும் நீதிபதிகளாக கொண்டுவர மறுக்கிறார்கள். அதேவேளையில் இஸ்லாமியர்களுக்கு விரோதமாக பேசக்கூடிய பாஜக மகளிர் அணியை சேர்ந்தவர்களை கொண்டுவருகிறார்கள். அப்போது, நீதித்துறையின் தனித்தன்மையை சிதைக்கும் வேலைகளை தொடர்ச்சியாக பாஜக செய்கிறது. ஒரு சின்ன தீர்ப்புக்கூட அவர்களுக்கு எதிராக வரக்கூடாது என்று நினைக்கிறார்கள். அரசியல் சாசன அடிப்படையில் கூட நீங்கள் தீர்ப்பு சொல்லக்கூடாது என்று உச்சநீதிமன்றத்தை இவர்கள் மிரட்டுவது எந்த விதத்தில் சரியாகும்.
இந்த இடத்தில் ஆர்எஸ்எஸ் வழிநடத்தும் பாஜகவுக்கும், மற்ற கட்சிகளுக்கும் வேறுபாடு உள்ளது. காங்கிரஸ் ஆட்சியில் இருந்தபோது 2ஜி ஊழலை பெரிய அளவு கொண்டு வந்தது உச்சநீதிமன்றம் தான். வழக்கு விசாரணையை தினமும் கவனித்து பாஜக ஆட்சிக்கு வர உதவியது உச்சநீதிமன்றம். இன்றைக்கு அந்த வழக்கில் ஒன்றுமே இல்லை என்று விடுதலையாகிவிட்டார்கள். உச்சநீதிமன்றம் என்ன பதில் சொன்னது? அன்றைக்கு காங்கிரஸ் உச்சநீதிமன்றத்தை தீவிரமாக எதிர்த்தார்களா? தவறாக செய்தபோதே காங்கிரஸ் எதிர்க்கவில்லை. ஆனால் இங்கே சரியாக அரசியல் சட்டத்திற்கு ஒரு பொருள் வழங்கினால், அதற்காக நீதிபதிகளை மிரட்டுகிறீர்கள் என்றால் இதற்கு பெயர்தான் பாசிசம். இதனால் தான் சொல்கிறோம் பாஜகவும், ஆர்எஸ்எஸ் அமைப்பும் மற்ற கட்சிகளை போட கிடையாது. அது ஹிட்லரை போல, முசோலினியை போல ஒரு பாசிச கட்சியாகும். அதுதான் நீதிபதிகள் அப்படி சொன்னதும், குடியரசுத் துணை தலைவரை வைத்து அடிக்கிறார்கள். சமூக வலைதளங்கள் மூலம் அடிக்கிறார்கள்.
நீதிபதிகள் ஊழல்வாதிகள் என்பது போன்ற ஒரு விஷயத்தை குடியரசு துணை தலைவர் தன்கர் சொல்கிறார். நீதிபதிகள் வீட்டில் பணம் எடுக்கப்பட்டது என்று குற்றம்சாட்டுகிறார். அரசியல்வாதிகள் வீட்டில் ஆயிரம் வழக்குகள் உள்ளன. அது குறித்து பேசுவோமா? ஒரு அரசியல்வாதி ஊழல் குற்றச்சாட்டில் சிக்கினால், ஒட்டுமொத்த அரசியல்வாதிகளையும் ஊழல் பெருச்சாளிகள் என்று உச்சநீதிமன்றம் சொல்லிவிட முடியுமா? நம்மால அதை ஏற்றுக்கொள்ள முடியுமா? ஒருவர் மீது குற்றச்சாட்டு இருந்தால் விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும். அவ்வளவுதான். அதற்கு உச்சநீதிமன்றத்தில் இருந்து விசாரணை நடைபெறுகிறது. அறிக்கை கிடைத்த உடன் நடவடிக்கை எடுத்துவிடுவார்கள். அதை மத்திய அரசும் தான் சேர்ந்து மறைந்தது. பணம் பிடிபட்ட அன்றைக்கே டெல்லி கமிஷனருக்கு தெரியும். ஆனால் எப்.ஐ.ஆர் பதிவு செய்யவில்லை. மொத்தத்தில் நீதித்துறை தங்களுக்கு சாதகமான தீர்ப்புகளை மட்டும்தான் கொடுக்க வேண்டும்.
நாம் எவ்வளவு காலமாக நொந்துபோய் நீதித்துறையை விமர்சித்துள்ளோம். மின்னணு வாக்குப்பதிவு இயந்திர விவகாரத்தில் உச்சநீதிமன்றம் என்ன செய்தது? தேர்தல் பத்திர விவகார முறைகேடு விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் விசாரணை கோரிய போது அதை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அன்றைக்கு உச்சநீதிமன்றம் மோடிக்கு ஆதரவாக உச்சநீதிமன்றம் உள்ளது என்று காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் சொல்லியிருந்தால் ஏற்பீர்களா? பாபர் மசூதி வழக்கு தீர்ப்பு முழுக்க முழுக்க அரசியல் சட்ட விரோதமான தீர்ப்பாகும். அதைவிட மோசமான ஒரு தீர்ப்பு உலக வரலாற்றில் இருக்க முடியாது. அந்த தீர்ப்பை வழங்கிய நீதிபதிகள் எல்லோருக்கும் பதவி கொடுத்துவிட்டார்கள். ஒரு அநீதியான தீர்ப்பைக்கூட இந்த நாட்டு மக்கள் ஏற்றுக்கொண்டார்கள். ஆனால் நேர்மையான ஒரு தீர்ப்பை இவர்கள் ஏற்க மறுக்கிறார்கள். வக்பு வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களை போடுவீர்கள் என்றால் இந்து சமய அறநிலையத்துறையில் இஸ்லாமியர்களை போடுவீர்களா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. பத்திரப்பதிவு இல்லாத காலத்தில் வழங்கப்பட்ட நிலங்களுக்கு பத்திரங்களை கேட்டால் எப்படி தருவார்கள் என்றும் உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. இவற்றுக்கு நேரடியாக பதில் சொல்லாமல், உச்சநீதிமன்றம் எப்படி இப்படி சொல்லலாம் என்று விமர்சிக்கிறார்.
உச்சநீதிமன்றம் 142வது சட்டப்பிரிவை தவறாக பயன்படுத்துகிறது என்று தன்கர் குற்றம்சாட்டுகிறார். அதே 142வது சட்டப்பிரிவை வைத்துதான் பாபர் மசூதி வழக்கில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்துக்கள் தரப்புக்கு வழங்குவதாக அறிவித்தார்கள். அன்றைக்கு இவர்கள் எங்கே சென்றார்கள். 10 சதவீத இடஒதுக்கீடு விவகாரத்திற்கு வரவேற்பு தெரிவித்தார்கள். அப்போது இந்த நாட்டில் உள்ள பிசி சமூகத்தினர், அனைத்து கட்சிகளும், வழக்கு போட்டவர்கள் எல்லாம் உச்சநீதிமன்றம் அராஜகமாக செயல்படுகிறது, இதை நாங்கள் ஒப்புக்கொள்ள மாட்டோம் என்று சொன்னால் அதை நீங்கள் விட்டுவிடுவீர்களா? சட்டப்பிரிவு 142 என்பது உச்சநீதிமன்றம் நீதி வழங்குவதற்கான சிறப்பு அதிகாரம் ஆகும். அப்போது அந்த சட்டப்பிரிவை நீக்கிவிடுங்கள். நாடாளுமன்றத்தில் உங்களுக்கு அதிகாரம் உள்ளதே அதை செய்ய முடியுமா? அதை செய்ய முடியாது என்பது தான் கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பு. அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை நீங்கள் மாற்ற முடியாது. நீதிமன்றத்திற்கு உள்ள அதிகாரத்தை நீங்கள் எடுத்துக்கொள்வீர்களா? இந்திரா காந்தி காலத்தில் அவ்வாறு செய்தார்கள். கடைசியில் என்ன ஆனது. அதைவிட மோசமாக இவர்கள் உச்சநீதிமன்றத்தை நெருக்கடி அளிக்கிறார்கள். இந்த நேரத்தில் அனைவரும் நீதித்துறை பக்கம் நின்று பாஜகவை எதிர்க்க வேண்டும்.
நீதித்துறையை மிரட்டும் ஜெகதீப் தன்கருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். அடுத்த நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டு வர முயற்சிப்பதாக சொல்கிறார்கள். அப்படி செய்வதை விட பெரிய அயோக்கியதனம் எதுவும் கிடையாது. எதிர்க்கட்சிகள் அதை கட்டாயம் விடமாட்டார்கள். பாஜக மெஜாரிட்டியுடன் இருந்தபோது செய்தவை போன்று ஒவ்வொரு விஷயத்திலும் செய்ய முடியாது என்பதால்தான் வக்பு சட்டத் திருத்தம், ஆளுநர் பிரச்சினை எல்லாம். உச்சநீதிமன்றம் இப்போது தான் ஓரளவு ஜனநாயக தன்மையோடு வந்துள்ளார்கள். தற்போது அவர்களை மத்திய அரசு மிரட்டுகிறபோது யாரும் ஆதரவுக்கு வராவிட்டால் மறுபடியும் மத்திய அரசுக்கு, பயந்துபோகும் நிலைதான் வரும். பாஜகவின் போக்கு என்பது முழு சர்வாதிகாரப் போக்கு. அதை ஏற்றுக்கொள்ள முடியாது.
உச்சநீதிமன்ற தீர்ப்பின் காரணமாக ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்பட்டுள்ளது. அவர் இனி எந்த பல்கலைக்கழகத்திற்கும் செல்ல முடியாது. தான் நினைத்தவர்களை எல்லாம் துணை வேந்தராக நியமித்து பல்கலைக்கழகங்களை நாசம் செய்தார். அந்த சட்டமானது அமலுக்கு வந்துவிட்டது. இனி ஒன்றும் செய்துவிட முடியாது. தமிழ்நாடு மட்டும் அல்ல. இந்தியா முழுவதும் ஆளுநர்களை வைத்து ஆடிய ஆட்டம் முடிவுக்கு வந்துவிட்டது. இது அவர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவாகும். மசோதாவுக்கு 3 மாதத்தில் ஒப்புதல் அளிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கால நிர்ணயம் செய்தது அவர்களுக்கு பெரிய பிரச்சினை ஆகிவிட்டது. இனி ஆளுநரை வைத்து ஆட்டம் காட்ட முடியாது என்பதால், அவர்களை வைத்து தீர்ப்பை மறுஆய்வுக்கு போவதோ அல்லது நாடாளுமன்றத்தில் சட்டம் கொண்டுவரலாமா என்று முயற்சி செய்கிறார்கள். இது அரசியல் சட்ட ஜனநாயகத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறும். இந்த விவகாரத்தில் ஜெகதீப் தன்கர், தனது வார்த்தைகளை திரும்பப் பெறும் வரை மக்கள் போராட வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.