தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பில் பெண்கள் வாக்குகளை திமுக முழுமையாக வாங்கும் என்றும், சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறாமல் திமுகவுக்கு வரும் என்றும் சொல்லப்பட்டிருப்பதாக மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.

2026 தேர்தல் தொடர்பாக தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பின் நிறைகள் மற்றும் குறைகள் குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் பிரபல யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- பிரபல தனியார் தொலைக்காட்சி நடத்திய கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. அதில் அதிமுக – தவெக கூட்டணி அமைந்தால், அது திமுக கூட்டணிக்கு மிகப்பெரிய நெருக்கடியை ஏற்படுத்தும் வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அரசியலில் எதுவும் நிரந்தரம் கிடையாது. எதையும் நம்மால் கணிக்க முடியாது. ஒரு காலத்தில் வைகோ, திமுக கூட்டணியில் 21 சீட்டுகள் கொடுக்கப்பட்டு இணைந்தார். ஆனால் அவர் கூட்டணியில் இருந்து திடீரென வெளியேறி அதிமுக உடன் சென்றார்.
அதேபோல தான் விஜயகாந்த். அவரிடம் மாறனை வைத்து கலைஞர் பேச்சுவார்த்தை நடத்தினார். அதேவேளையில் நடராஜன், பிரேமலதா மூலம் பேச்சுவார்த்தை நடத்தி, அதிமுக – தேமுதிக கூட்டணி அமைந்தது. இந்த கூட்டணி இல்லாவிட்டால் தேர்தலில் அதிமுக வெற்றி பெற்றிருக்காது. இன்றைக்கு அதே இடத்தில் இருப்பவர் விஜய். அதிமுக கூட்டணிக்கு விஜய் செல்வாரா? இல்லையா? என்பது சூழ்நிலையை பொறுத்ததாகும். அமலாக்கத்துறை இரண்டு சோதனைகள் நடத்தி, கோடிக்கணக்கில் பணம் வைத்துள்ள அவரது உறவினர் பிரிட்டோவை தூக்கி உள்ளே வைத்தால் என்ன செய்வார்? அப்போது அவருக்கு வேறு வழியில்லை.
நடிகர் விஜய், தன்னை ஒரு அதிமுக ஆதரவாளராக தான் கட்டமைத்துக்கொண்டு வருகிறார். இதுவரை கூட்டணி எதுவும் இல்லை. ஆனால் இதற்கு பிறகு அவர் என்ன செய்யப் போகிறார் என்று யாராலும் கணிக்க முடியாது. விஜயிடம் வியூக அமைப்பாளராக உள்ள ஜான் ஆரோக்கியசாமி, சீமானின் ஆதரவாளர் ஆவார். அவர் சொல்லிக் கொடுப்பதைதான் விஜய் கேட்டுக்கொண்டிருக்கிறார். விஜயின் பயணத்தை நம்மால் கணிக்கவே முடியாது. ரஜினிகாந்த் அரசியல் திட்டம் தோல்வி அடைகிறபோது, விஜயை தேடுகிறார்கள். இவரது நண்பர்கள் ரங்கசாமி, நமச்சிவாயம், புஸ்ஸி ஆனந்த் என அனைவரும் பாஜகவினர்தான். அவரது உறவினர்கள் எல்லாம் மல்டி மில்லியனர்கள். அந்த பட்டியல் எல்லாம் அமித்ஷாவின் கைகளுக்கு சென்றால், விஜய் பரலோகம் செல்ல வேணடி வரும். இப்படி அதிமுக கூட்டணிக்கு விஜய் சென்றால், அவரது வாக்குகள் மாறுமா? என்று கருத்துக் கணிப்பில் சொல்லவில்லை.
தனியார் தொலைக்காட்சி சார்பில் 234 தொகுதிகளில் 74,354 பேரிடம் கருத்துக் கணிப்பு நடத்தப்பட்டுள்ளது. இந்த பணியில் 69 பேர், மொத்தம் 20 நாட்கள் ஈடுபட்டிருக்கிறார்கள். கருத்துக்கணிப்பு முடிவுகள் திமுகவுக்கு எதிராக உள்ளதாக சொல்லப்படுகிறது. ஆனால், முதலிலேயே அவர்கள் தவறு செய்கிறார்கள். உங்கள் தொகுதியில் தற்போது இருக்கும் எம்எல்ஏ-வுக்கு மீண்டும் வாய்ப்பு தருவீர்களா? என கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு 11% பேர் சரி, 32% பேர் சுமார், 41% பேர் மோசம். 18% பேர் கருத்து இல்லை என்கிறார்கள். இதில் சரி மற்றும் சுமார் என்று சொன்னவர்கள் 43% பேர். அப்போது 43% ஆதரவு, 41% எதிர்ப்பு என்றால் தற்போதைய எம்எல்ஏ தொடர ஆதரவு என்றுதான் அர்த்தம்.
அடுத்து தற்போதைய ஆட்சியின் நலத் திட்டங்களில் உங்களுக்கு பிடித்தது எது? என்கிற கேள்விக்கு மகளிர் உரிமைத் தொகை -28% பேர், விடியல் பயணம்-29% பேர், புதுமைப் பெண் – 18% பேர், காலை உணவு – 18% பேர், மற்றவை – 9% பேர் என்று தெரிவித்துள்ளனர். இதில் மகளிர் உரிமைத் தொகை, விடியல் பயண திட்டங்கள் மட்டுமே சுமார் 60 சதவீத ஆதரவு வருகிறது.
தனியார் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பில் திடீரென ஒன்றை நுழைக்கின்றனர். தனியாக நின்றால் யார் முதலமைச்சர் ஆக வருவார்கள் என்கிற கேள்விக்கு ஸ்டாலின் – 27% பேர், எடப்பாடி பழனிசாமி – 19% பேர். அண்ணாமலை – 5% பேர், சீமான் -9% பேர், விஜய் – 13% பேர் ஆதரிக்கின்றனர். இந்த கருத்துக் கணிப்பில் கட்டப்பஞ்சாயத்து பூதம் பெரிய விஷயமாக உள்ளது. ஆனால் அதிமுக – பாஜக கூட்டணி பொருந்தாத கூட்டணி என்று சொல்கிறார்கள். கடந்த நாடாளுமன்றத் தேர்தல் பாஜக எதிர்ப்பு தளத்தில்தான் நடைபெற்றது. தற்போது திமுக ஒருங்கிணைவோம் வா உள்ளிட்ட அனைத்து பிரச்சாரங்களையும் பாஜக எதிர்ப்பு என்ற அடிப்படையில் தான் திமுக வீடு வீடாக கொண்டு சென்றுகொண்டிருக்கிறது.
அப்போது பாஜக எதிர்ப்பு மனநிலை, பாஜகவின் இந்துத்துவா கொள்கை குறித்து தமிழக மக்கள் என்ன நினைக்கின்றனர். அது தேர்தலில் விளைவுகளை ஏற்படுத்துமா? என்கிற கேள்வி எழுப்பப்படவில்லை. அண்ணாமலைக்கு 5% ஆதரவு பெறுகிறது என்றால், அவரது வாக்குகள் இந்துத்துவத்திற்கா? அல்லது அண்ணாமலைக்கா? என்கிற கேள்வி எழுகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலே பாஜக எதிர்ப்பில் தான் கட்டமைக்கப்பட்டது. 40க்கு, பூஜியம் என்கிற கணக்கில் பாஜக தோல்வி அடைந்தது. பாஜக எதிர்ப்பை தான் தற்போது திமுக வீடு வீடாக கொண்டு செல்கிறது.
தனியார் தொலைக்காட்சியின் கருத்துக்கணிப்பில் சிறுபான்மையினரின் வாக்குகள் திமுகவுக்கு தான் செல்கிறது. விஜய்க்கு செல்லவில்லை என்று சொல்கிறார்கள். அப்படி ஏன் செல்கிறது என்றால் பாஜகவுக்கு எதிரான மனநிலையாகும். பாஜக கூட்டணியில் இருந்து வெளியேறி அதிமுக – விஜய் கூட்டணி அமைந்தால், அப்போது சிறுபான்மையினரின் வாக்குகள் சிதறும். தனியார் டிவியின் கருத்துக்கணிப்புகளில் கடந்த முறையை விட அதிமுக அதிக இடங்களில் வெற்றி பெறும் என சொல்லப் பட்டிருக்கிறது. அதற்கு திமுகவின் வாக்குகளை விஜய் பிரிப்பதே காரணமாக உள்ளது.
விஜய்க்கு பூஜியம் இடங்கள் தான் கிடைக்கும் என்று கருத்துக்கணிப்பில் சொல்லப்பட்டிருக்கிறது. ஆனால் சிறுபான்மையினர், மீனவ மக்கள் நிறைந்த நாகை தொகுதியில் விஜய் போட்டியிட்டால், அங்கு வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. திமுக 105 தொகுதிகளில் வெற்றிபெறும் என்று சொல்லியுள்ளனர். பெண்களின் ஆதரவு 100 சதவீதம் திமுகவுக்கு இருக்கிறது என்று கருத்துக்கணிப்பில் கூறியுள்ளனர். பெண்கள் தரப்பில் திமுகவை அசைத்துக்கொள்ளவே முடியாது என்கிறார்கள். அரசு ஊழியர்கள், விவசாயிகள் அரசுக்கு எதிரான மனநிலையில் உள்ளதாக கருத்துக்கணிப்பில் சொல்கின்றனர்.
2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக 105 இடங்களிலும், அதிமுக 90 இடங்களிலும் வெல்லும். 39 இடங்கள் இழுபறியாக இருக்கும் என்று கருத்துக்கணிப்பில் கூறப்பட்டுள்ளது. இதில் 25 இடங்களில் திமுகவும், 14 இடங்களில் அதிமுகவும் முன்னிலை வகிப்பதாக சொல்கிறார்கள். அப்போது திமுக 105+25= 130 இடங்கள் வரும் என்றும், சிறிய அளவிலான பெரும்பான்மையில் தான் திமுக வெற்றி பெறும் என்றும் தெரிவித்துள்ளனர். கருத்துக்கணிப்பில் நெருடலாக இருப்பது தென் மாவட்டங்களில் திமுக தோல்வி அடையும் என்பதுதான். தென் மாவட்டங்களில் அதிகளவில் முக்குலத்தோர் பிரதிநிதிகளை வைத்திருக்கும் கட்சி திமுக. அமைச்சர்களாக 8 பேர் உள்ளனர். நாடார்கள் சார்பில் அனிதா ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட பலர் உள்ளனர்.
தேவேந்திர குல வேளாளர்கள் மைனஸ். ஆனால், இயல்பாகவே அவர்கள் திமுக வாக்காளர்கள். ஆனால் அதிமுகவுக்கு முக்குலத்தோர் வாக்குகள் மைனஸ். ஓபிஎஸ், சசிகலா ஆகியோர் மைனஸ். அப்படி இருக்கும்போது எப்படி அவர்கள் இந்த பேக்டருக்குள் வருகிறார்கள். தென் மாவட்டங்களில் திமுக 22, அதிமுக 25 இடங்கள் வரும் என்கிறார்கள். அதிமுகவில் உள்ள பிளவுகள் சரிசெய்யப்பட்டு ஓபிஎஸ், தினகரன், சசிகலா போன்றவர்கள், இணைந்தால் அது சாத்தியமாகும். ஆனால் தற்போது அது ஏற்க தக்கது அல்ல.
அதிமுக கூட்டணி தற்போதுதான் எழுந்து நடக்கிறது. எடப்பாடி பழனிசாமி தற்போது சுற்றுப்பயணம் மேற்கொண்டு கட்சியை புனரமைப்பு செய்துள்ளார். அதிமுக இன்னும் ஒருங்கிணைந்த சக்தியாக வரவில்லை. வடமாவட்டங்கள் மற்றும் கொங்கு மண்டலப் பகுதிகளில் வாக்குச்சாவடி முகவர்கள், பாக முகவர்கள் கூட்டம் எல்லாம் நடைபெறுகிறது. சென்னையில் ஒன்றும் நடைபெறவில்லை. திமுக அரசு உங்களுடன் நான் திட்டத்தின் கீழ் வீடுகளுக்கே சென்று மக்களின் தேவைகளை கேட்டறிந்து தரவுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபடுகின்றனர். திமுகவும் ஐபேக், பென் போன்ற பல்வேறு அமைப்புகளை வைத்து வேலை செய்துகொண்டிருக்கின்றனர்.
உள்ளுர் கட்டப்பஞ்சாயத்து பிரச்சினைகள் மணல் எடுக்கும் இடங்களில் ஏற்பட வாய்ப்பு உள்ளது. அதைவிட்டால் மதுரை மாநகராட்சி விவகாரத்தை சுடிக்காட்டுகிறார்கள். திமுக அரசுக்கு எதிரான மனநிலை மக்கள் மத்தியில் உள்ளது. திமுக அரசுக்கு எதிரான பிரச்சாரங்களை, திமுக பாஜகவுக்கு எதிரான பிரச்சாரமாக எதிர்கொள்கிறது. அதனால் தான் பாஜக தேடி எடுத்து அதிமுக உடன் கூட்டணி வைக்கிறார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.