spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைகாலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.க.வும்!

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.க.வும்!

-

- Advertisement -

ஷோபாசக்தி

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.க.வும்!

இந்தியப் பெருநிலப் பரப்பிலிருந்து பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து நிகழ்ந்த தெற்கு நோக்கிய புலப்பெயர்வே இலங்கைத் தீவின் தமிழ் -சிங்களம் பேசும் மக்களின் நிலைத்த குடிசன வரலாறு, இனம், மதம் பண்பாடு, மொழி ஆகியவற்றின் அடிப்படையில் இரு நிலங்களுக்கும் நிலங்க இடையே பெரும் ஒற்றுமையுண்டு. நிலையான தேசங்கள் தோன்றாத பண்டைய காலத்திலும் பின்னர் காலனியக் காலத்திலும் இலங்கைத் தீவின் வரலாறு எப்போதும் இந்தியப் பெருநிலத்துடன் இணைத்தே எழுதப்பட்டிருக்கிறது.

we-r-hiring

கண்டி அரசின் கடைசி நான்கு மன்னர்களும் மதுரை நாயக்கர்கள் என்பதும், யாழ்ப்பாண அரசின் கடைசி மன்னர்கள் ஆரியச் சக்கரவர்த்திகள் கெள் என்பதும் இந் இங்கு குறிப்பிடத்தக்கவை. சுதந்திரத்திற்குப் பின்னான இலங்கையின் உள்நாட்டு அரசியலிலும் பொருளியலிலும் போரிலும் இந்திய ஒன்றிய அரசின் தலையீடும் கட்டுப்பாடும் இன்றுவரை வலுவாகவே இருக்கின்றது.

எனவே, இந்தியப் பெருநிலப்பரப்பில் நிகழ்ந்த எந்த அரசியல் பண்பாட்டு மாற்றங்களும் இலங்கையிலும் வலுவான பாதிப்பைச் செலுத்தியுள்ளன.

இந்த வகையில், தமிழகத்தில் தோன்றிய திராவிட இயக்கக் கருத்தியல் இலங்கைத் தமிழர்களிடையேயும் உடனடியாகவே பரவத் தொடங்கியது. 1925-இல் ஈ.வெ.ரா. பெரியாரால் தொடங்கப்பட்ட சுயமரியாதை இயக்கத்தின் கருத்தியலை உள்வாங்கி, 1927ல் யாழ்ப்பாணத்தில் ‘திராவிடன்’ பத்திரிகை வெளியாகத் தொடங்கியது. ‘திராவிட வித்தியா அபிவிருத்தி சங்கம்’, ‘திராவிட வித்தியாசாலை’ ஆகியவை யாழ்ப்பாணத்தில் நிறுவப்பட்டன. வடமராட்சியில், தமிழறிஞரும் பகுத்தறிவாளருமான கந்தமுருகேசனாரின் தலைமையில் இளைஞர் திரள், திராவிட இயக்கச் சிந்தனைகளுடன் செயற்பட்டது.

இவர்களால் ‘திராவிடர் கலை மன்றம்’ என்ற வாசகசாலை ஆரம்பிக்கப்பட்டு, ‘திராவிட நாடு ‘குடியரசு’ போன்ற இதழ்கள் தமிழகத்திலிருந்து வரவழைக்கப்பட்டன. 4 பெப்ரவரி 1938ல் ‘புலோலி’ கிராமச் சங்கத் தேர்தலில் ‘துறையா’ வார்டில் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் முருகப்பர் வேலுப்பிள்ளை போட்டியிட்டு வெற்றியீட்டியுள்ளார். இவர், புரோகித மறுப்புச் சங்கத்தின் தலைவருமாவார். அதேபோன்று, ‘ஆலடி’ வார்டில் சுயமரியாதை இயக்கத்தின் சார்பில் ப.கதிர்காமர் போட்டியிட்டு வெற்றிபெற்றுள்ளார். இந்தச் செய்தியை 10 ஏப்ரல் 1938 தேதியிடப்பட்ட ‘குடியரசு’ பத்திரிகை வெளியிட்டுள்ளது. தொகுத்துப் பார்க்கும்போது, ஈழத் தமிழர்களிடையே தமிழ்த் தேசியச் சிந்தனைகளும் இடதுசாரிச் சிந்தனைகளும் அறிமுகமாவதற்கு முன்பே திராவிட இயக்கச் சிந்தனைகள் அறிமுகமாகியிருந்தன எனக் கருதக்கூடியதாகவே உள்ளது.

1932இல் கொழும்பில் ‘இலங்கை சுயமரியாதை இயக்கம்’ ஆரம்பிக்கப்பட்டது. இதே வருடத்தில்தான் பெரியார் வெளிநாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இந்தியா திரும்பும் வழியில் ரயிலில் இலங்கையில் கொழும்பு, கண்டி, நாவலப்பிட்டி, ஹட்டன், யாழ்ப்பாணம், பருத்தித்துறை ஆகிய இடங்களில் உரைகளை நிகழ்த்தினார். அந்த உரைகளில் தேசம், தேசியம், சாதி, மதம் போன்றவற்றைக் கடுமையாகத் தாக்கி விமர்சித்துப் பேசி, பகுத்தறிவையும் சுயமரியாதையையும் ஒடுக்கப்பட்டவர்களின் ஒற்றுமையையும் பெரியார் வலியுறுத்தினார். ‘தேசியம் ஒரு கற்பிதம்’ என்ற எண்ணத்தை முன்வைத்தார். இதற்கு 50 வருடங்கள் கழித்துத்தான் பெனடிக்ட் ஆண்டர்ஸனின் ‘Imagined Communities’ என்ற புகழ்பெற்ற நூல் வெளியாகி, தேசியம் என்பது கட்டமைக்கப்பட்ட கருத்தாக்கம் என்றவாறான சிந்தனை 1990-களில் தமிழில் விவாதிக்கப்பட்டது.

“தோழர்களே! கடவுள், மதம், ஜாதியம், தேசியம், தேசாபிமானம் என்பவைகள் எல்லாம் மக்களுக்கு இயற்கையாகத் தானாக ஏற்பட்ட உணர்ச்சிகள் அல்ல. சகல துறைகளிலும் மேல்படியிலுள்ளவர்கள் தங்கள் நிலை நிரந்தரமாயிருக்க ஏற்படுத்திக்கொண்டிருக்கும் கட்டுப்பாடான ஸ்தாபனங்களின் மூலம் பாமர மக்களுக்குள் புகுத்தப்பட்ட உணர்ச்சிகளேயாகும். இந்தப்படி புகுத்தப்படவேண்டிய அவசியமும் காரணமும் என்னவென்று பார்த்தால், அவை முற்றும் பொருளாதார உள் எண்ணத்தையும் அந்நியர் உழைப்பாலேயே வாழ வேண்டும் என்கின்ற உள் எண்ணத்தையும் கொண்ட பேராசையும், சோம்பேறி வாழ்க்கைப் பிரியமுமேயாகும்” என்று தனது கொழும்பு உரையில் பெரியார் குறிப்பிட்டார்.

1944ல் இந்தியாவில் சுயமரியாதை இயக்கமும் நீதிக்கட்சியும் இணைக்கப்பட்டு ‘திராவிடர் கழகம்’ தோற்றுவிக்கப்பட்டபோது, இலங்கை சுயமரியாதை இயக்கமும் ‘திராவிடர் கழகம்’ எனப் பெயர் மாற்றிக்கொண்டது.

1949ல் பேரறிஞர் அண்ணாவின் தலைமையில் திராவிடர் கழகத்திலிருந்து வெளியேறியவர்கள் தி.மு.க.வை நிறுவியபோது, இலங்கையிலும் அவ்வாறே திராவிடர் கழகத்திலிருந்து ஏ.இளஞ்செழியனின் தலைமையில் இலங்கை திராவிடர் முன்னேற்றக் கழகம் (இ.தி.மு.க) தோற்றம்பெற்றது.

இ.தி.மு.க இலங்கைக்கான அரசியலையே முதன்மையாக முன்னெடுத்தது. ‘திராவிட முன்னேற்றக் கழகம்’ என்று திராவிட நாட்டையே முன்வைத்து தமிழக தி.மு.க. பெயரிட்டிருப்பதால், இலங்கையைத் தாயகமாகக் கொண்டவர்களுக்கு அது பொருந்தாது எனக் கருதிய இ.தி.மு.கவினர் ‘திராவிடர் முன்னேற்றக் கழகம்’ என்றே தமது இயக்கத்தின் பெயரை வைத்துக்கொண்டனர். இயக்கக் கொள்கைகளான சாதியொழிப்பு, பெண் விடுதலை, மொழிப்பற்று மற்றும் பண்பாட்டு முன்னெடுப்புகளை தி.மு.க.வைப் பின்பற்றியே இ.தி.மு.க.வினர் அமைத்துக்கொண்டனர்.

தமிழகத்தில் வெளியாகிய தி.மு.க. பத்திரிகைகளின் தொடர்ச்சியாகவே இலங்கையிலும் 1950 -1971 காலப்பகுதியில் திராவிடமணி (கொழும்பு) நாம் (பதுளை) ஈழமுரசு (மட்டக்களப்பு) இனமுழக்கம் (யாழ்ப்பாணம்) எரிமலை (அக்கரைப்பற்று) போன்ற 35-க்கும் மேற்பட்ட திராவிடச் சிந்தனைப் பத்திரிகைகள் வெளியாகின.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.க.வும்!

மலையகத் தோட்டத் தொழிலாளர்களிடையே இ.தி.மு.க கிளைகளை அமைப்பதற்கு திராவிட இயக்கச் சினிமாக்கள் உதவின எனச் சொல்லும் ஆய்வாளர் பெ.முத்துலிங்கம், ‘பராசக்தி’ திரைப்படம் மலையக சினிமா கொட்டகைகளில் திரையிடப்பட்டது. தென்னிந்தியாவிலிருந்து இலங்கை, பிஜி, மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளுக்குச் சென்ற தமிழர்களின் அவலநிலை பற்றி இப்படத்தில் குரலெழுப்பப்படுவதுடன் சீர்திருத்தக் கருத்துகளையும் கடவுளின் பெயரால் மேற்கொள்ளப்படும் அட்டூழியங்களுக்கு எதிரான காட்சிகளையும் இப்படம் கொண்டிருந்தது. எனச் சுட்டிக்காட்டுகிறார்.

1951 டிசம்பரில், முதல் மாநில தி.மு.க. மாநாடு சென்னையில் நடத்தப்பட்டபோது, இ.தி.மு.க பிரதிநிதிகள் கலந்துகொண்டதுடன், இதி.மு.க.வால் திரட்டப்பட்ட நிதியையும் மாநாட்டுக்கு அளித்தனர். காலத்திற்குக் காலம் தமிழகத் திராவிட இயக்கத்தினர் இதி.மு.க.வின் அழைப்பின்பேரில் இலங்கைக்கு வந்து, நாடு முழுவதும் பரப்புரைக் கூட்டங்களில் சொற்பொழிவாற்றினார்கள். இவ்வாறு இலங்கை வந்தவர்களில் பேராசிரியர் க.அன்பழகன், கன், ஆசிரியர் கி.வீரமணி, சி.பி.சிற்றரசு, கலைவாணர் என்.எஸ்.கிருஷ்ணன், ஏ.வி.பி.ஆசைத்தம்பி, நாவலர் இரா.நெடுஞ்செழியன், நாஞ்சில் மனோகரன் போன்ற பலர் இருந்தார்கள்.

இலங்கையில் தமிழ் மொழிக்குச் சமவுரிமை கோரியும் இலங்கையில் வாழும் இந்திய வம்சாவழியினருக்குக் குடியுரிமை கோரியும், தமிழகத்தில் நிகழ்ந்த இந்தி திணிப்புக்கு எதிராகவும் இ.தி.மு.க பல முனைப் போராட்டங்களை முன்னெடுத்தபோதெல்லாம், தமிழக தி.மு.க.வின் ஆதரவு அவர்களுக்குக் கிடைத்தது. இந்தப் போராட்டங்களுக்கு ஆதரவளித்து, தமிழக தி.மு.க. தலைவர்கள் அறிக்கைகளையும் செய்திகளையும் வெளியிட்டார்கள். யாழ் குடாநாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கிளைகளை அமைத்திருந்த இ.தி.மு.க 1957 டிசம்பரில் சாதியொழிப்பை முன்வைத்து, சமூக சீர்திருத்த மாநாட்டை யாழ்ப்பாணத்தில் நடத்தத் திட்டமிட்டபோது, அந்த மாநாட்டுக்குத் தமிழகத்திலிருந்து நாவலர் நெடுஞ்செழியன், ஈ.வி.கே. சம்பத், பேராசிரியர் க.அன்பழகன் ஆகியோர் அழைக்கப்பட்டிருந்தனர். எனினும், அவர்கள் மூவரையும் இலங்கை வர இந்திய அரசு அனுமதிக்கவில்லை.

இக்காலகட்டத்தில், இலங்கையில் நிலவும் ஒற்றையாட்சி முறைக்கு மாற்றாகத் தமிழ் சிங்கள கூட்டாட்சி முறையை முன்வைத்துப் போராடிக்கொண்டிருந்த ‘இலங்கை தமிழரசுக் கட்சி’க்கும் இ.தி.மு. கவுக்கும் இடையே தோழமை நிலவியது. இரு அமைப்புகளும் பல தருணங்களில் சேர்ந்து செயற்பட்டன. இ.தி.மு.க 1960ல் பண்டாரவளையில் நடத்திய கலாசார மாநாட்டில் தமிழாசுக் கட்சித் தலைவர்களான சாம் தம்பிமுத்து, எம்.திருச்செல்வம், செனட்டர் மு.மாணிக்கம் ஆகியோர் கலந்துகொண்டார்கள். 1961ல் தமிழரசுக் கட்சியினர் யாழ்ப்பாணத்தில் நடத்திய சத்தியாக்கிரகப் போராட்டத்தில் பொதுச்செயலாளர் ஏ.இளஞ்செழியனின் தலைமையில் இ.தி.மு.க பங்கெடுத்தது.

நுவரெலியாவில் இதிமுக நடத்திய கூட்டத்தில் அ.அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம், மங்கையர்க்கரசி போன்ற தமிழரசுக் கட்சியினர் கலந்துகொண்டார்கள். இந்தக் கூட்டத்தின் முடிவில் தமிழரசுக் கட்சியுடன் கூட்டாகச் செயற்படுவது என இதிமுக தீர்மானம் நிறைவேற்றியது. 1962 ஏப்ரலில், ஹட்டன் நகரத்தில் மொழியுரிமை, மலையக மக்களின் குடியுரிமை ஆகியவற்றை முன்வைத்து இ.தி.மு.க நடத்திய இரண்டாவது மாநில மாநாட்டில் தமிழரசுக் கட்சித் தலைவர் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் கலந்துகொண்டு உரை நிகழ்த்தினார்.

கூட்டாட்சி கோரிப் போராடிக்கொண்டிருந்த தமிழரசுக் கட்சியுடனான இதி.மு.க.வின் அரசியல் கூட்டு, சிங்கள இனவாத அரசியல்வாதிகளுக்குக் கலக்கத்தைக் கொடுத்தது. திராவிட நாடொன்றை உருவாக்க முயலும் தமிழக தி.மு.க. செயற்பாட்டின் ஓர் அங்கமே இ.தி.மு.கவின் இந்த நடவடிக்கை எனக்கூறி, இ.தி.மு.க.வைத் தடை செய்யுமாறு சிங்கள இனவாத அரசியல்வாதிகள் கூக்குரலிட்டார்கள். பெயர்பெற்ற சிங்கள இனவாதிகளான கே.எம்.பி. ராஜரத்ன, ஆர்.ஜி.சேனநாயக்க, கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் பேர்ஸி விக்ரமரத்ன ஆகியோர் நாடாளுமன்றத்தில் இ.தி.மு.க.வைத் தடைசெய்யுமாறு கோரினார்கள். இவர்கள். இ.தி.மு.க.வை தமிழக தி.மு.க.வின் நேரடிக் கிளை என்றும் அது, இலங்கையைத் தமிழகத்துடன் இணைக்க முயல்கிறது என்றும் சொன்னார்கள். 1962 ஜூலை 22ஆம் தேதி, சிறிமாவோ பண்டாரநாயக்க அரசால் அவசரகாலச் சட்டத்தின்கீழ் இ.தி.மு.க தடைசெய்யப்பட்டது.

இந்தத் தடையைக் கண்டித்து நாடாளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் அ.அமிர்தலிங்கம் நீண்ட உரையாற்றினார். அந்த உரையில், ‘இவர்கள் குறிப்பிடும் பூதம் என்ன என்பதை நான் குறிப்பிடவேண்டியிருக்கிறது. இந்தத் திராவிட முன்னேற்றக் கழகம் என்பது இன்று நேற்று தோன்றிய ஒரு இயக்கமல்ல. நான் இலங்கை சர்வகலாசாலையில் 1946- 1947 ஆண்டளவில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலத்திலேயே இலங்கை திராவிடர் கழகம் இருந்தது. இவர்களது நோக்கம், இலங்கையில் வாழ்கின்ற மலைநாட்டுத் தமிழர்கள் மத்தியில் சாதியின் பெயரால் காணப்படும் பேதங்களை ஒழித்துக்கட்ட வேண்டும் என்பதாகும். மலைநாட்டுத் தமிழ் மக்கள் தன்மானம் பெற்றவர்களாகப் பகுத்தறிவுப் பாதையில் செல்ல வேண்டும் என்ற நோக்கத்துடனேயே இலங்கையில் தி.மு.க. இயங்கிவருகிறது’ என்றார்.

இலங்கை சமசமாஜக் கட்சியும் இந்தத் தடையைக் கண்டித்து ‘மலையக மக்களின் அடிப்படை உரிமையான குடியுரிமை இலங்கை அரசால் மறுக்கப்படுவதே இதி.மு.க.வின் வளர்ச்சிக்கு முதன்மையான காரணம்’ என்றது.

இதிமுகவின் மீதான தடை 1963ல் நீக்கப்பட்டது. 1965ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது, இடதுசாரி கட்சிகள் சிறிமாவோ – சாஸ்திரி ஒப்பந்தத்திற்கு ஆதரவளித்தார்கள். தமிழரசுக் கட்சியினர் அந்த ஒப்பந்தத்தை எதிர்த்தார்கள். எனவே, இதி.மு.க பொதுத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு ஆதரவு நிலையெடுத்து வடக்கு – கிழக்கில் பரப்புரையை மேற்கொண்டது. எனினும், தேர்தலின் பின்பு தமிழரசுக் கட்சி டட்லி சேனநாயக்கவின் அரசு அமைய ஆதரவு கொடுத்ததால், தமிழரசுக் கட்சியுடனான உறவை இதி.மு.க முறித்துக்கொண்டது.

1968ல் இ.தி.மு.க தன்னை அரசியல் கட்சியாக நிறுவிக்கொண்டது. அதே வருடத்தில் அக்டோபர் 14ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் விழாவை கொழும்பில் நடத்தியது. இவ்விழாவில் தமிழகத்திலிருந்து வருகை தந்திருந்த தி.மு.க.வினரும் கலந்துகொண்டார்கள். இந்நிகழ்வைத் திரிபுப்படுத்தி இலங்கை கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் ‘எத்த’ நாளிதழ் ‘சிறிமாவோ -சாஸ்திரி ஒப்பந்தத்தின்படி திருப்பி அனுப்பவேண்டியுள்ள இந்தியர்களைத் தடுத்து, இலங்கை திராவிட முன்னேற்றக் கழகத்தை வளர்த்து, தென்னிந்தியாவையும் வட இலங்கையையும் ஒன்றிணைத்து, திராவிட இராச்சியத்தை உருவாக்குவதற்கான சதி அம்பலமாகியுள்ளது. இந்திய தி.மு.க.வின் தலைவர் அண்ணாதுரையின் பிறந்தநாளைக் கொண்டாடும் தோரணையில் இலங்கை வந்துள்ள அண்ணாதுரை குழுவினர், இதற்கான அமைப்பு வேலைகளை நடத்திச் செல்கின்றனர்’ என்று எழுதியது.

இ.தி.மு.க யாழ் மாவட்டத்தின் நான்காவது மாநில மாநாட்டை 18.09.1969ல் நடத்தியது. அன்றைய தினம் முற்றவெளியில் இடம்பெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய இ.தி.மு.க பொதுச்செயலாளர் ஏ.இளஞ்செழியன் ‘தமிழ் மக்களின் நியாயமான போராட்டங்களை சாத்வீகப் போராட்டத்தின் மூலம் பெற முடியாவிடின், புரட்சி ஒன்றின் மூலம் பெறவிரும்பினால், தமிழ் மக்கள் கெரில்லா யுத்தத்திற்குத் தம்மைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும். காவல் நிலையங்களைத் தகர்த்தல், ஆயுதப் பயிற்சி முகாம் அமைத்தல் வேண்டும்’ என்று கூறினார். எனினும் ‘அதற்கான தேவை தற்போது இல்லை’ என்றும் குறிப்பிட்டார். ஈழ நிலத்தில் முதன்முதலாகக் ‘கெரில்லா போராட்டம்’ என்ற சொல்லாடல் இ.தி.மு. கவாலேயே உச்சரிக்கப்பட்டிருக்கிறது.

இந்த உரையைச் சிங்கள அரசில்வாதிகள், பத்திரிகைகள் மட்டுமல்லாமல் தமிழ் காங்கிரஸ் தலைவர் ஜீ.ஜீ. பொன்னம்பலம் உள்ளிட்ட தமிழ் அரசியல்வாதிகளும் ஒட்டுமொத்தமாகக் கண்டித்தார்கள். மறுபடியும் இ.தி.மு.க மீது தடை கோரப்பட்டது. 1971ல் ஜே.வி.பி. நடத்திய ஆயுதக் கிளர்ச்சியைத் தொடர்ந்து ஏ.இளஞ்செழியனும் இதி.மு.க.வின் பல உறுப்பினர்களும் கைதுசெய்யப்பட்டார்கள்.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.க.வும்!

இ.தி.மு.கவை ஒரு பிரிவினைவாத சக்தியாகவும், தமிழக தி.மு.க.வின் திராவிட நாடு கொள்கையை முன்னெடுக்கும் இலங்கைக் கிளையாகவுமே இலங்கை அரசு, இலங்கை கம்யூனிஸ்ட்டுக் கட்சி, ஜே.வி.பி. சிங்கள ஊடகங்கள் போன்றவை தொடர்ச்சியாகச் சித்திரித்துக்கொண்டிருந்தன.

இது, இதி.மு.க.வுக்குப் பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியது. உண்மையில் இதி.மு.க, தமிழக தி.மு.க.வின் நேரடிக் கிளை என இதி.மு.க.வோ அல்லது தி.மு.க.வோ ஒருபோதும் சொல்லியதில்லை. இரண்டு இயக்கங்களுக்குமிடையே அரசியல், கலாசார கூட்டிணைவு உள்ளது என்றே இரு இயக்கங்களுமே பிரகடனப்படுத்தியிருந்தன.

1972ல் இலங்கையில் புதிய அரசியல் சாசனம் ஏற்படுத்தப்பட்டதைத் தொடர்ந்து தமிழ் இளைஞர்களிடையே தோன்றிய தமிழ்த் தேசியவாதப் பேரலை, 1976ல் தமிழர் விடுதலைக் கூட்டணியின் தமிழீழப் பிரகடனம், இளைஞர்களின் ஆயுதப் போராட்ட முன்னெடுப்பு ஆகியவற்றால் இலங்கையின் அரசியல் சூழல்கள் மாறின. உள்நாட்டுப் போர் இலங்கையின்மீது இறங்கிக்கொண்டிருந்தது. அவசரகாலச் சட்டமும் பயங்கரவாதத் தடைச் சட்டமும் அமலுக்கு வந்தன. இவையெல்லாம் இதிமுக தொடர்ந்தும் வீறுடன் இயங்குவதற்கான சூழலை நாட்டில் இல்லாமல் செய்தன. எழுபதுகளின் இறுதியில் இதிமுக கலைந்துபோயிற்று. இதி.மு.கவின் துணை அமைப்புகளாகச் செயற்பட்ட ‘இலங்கை இளம் திராவிடர் முன்னேற்றக் கழகம்’, ‘கலைஞர் கருணாநிதி நற்பணி மன்றம்’ போன்றவையும் செயலிழந்தன.

“இதி.மு.க மூன்று தசாப்த வரலாற்றுடன் அஸ்தமித்த போதிலும், அது ஒரு வரலாற்றுத் தேவையைப் பூர்த்திசெய்துள்ளது. மலையக மக்களின் அடிப்படை மனித உரிமையான பிரஜாவுரிமைப் பிரச்சினை தொடர்பாக மக்கள் போராட்டத்தை இதுவே முன்னெடுத்தது. மலையக மக்கள் மத்தியில் நிலவிய அறியாமை நீங்கி விழிப்புணர்வு ஏற்படுவதற்கும் இதி.மு.க.வே காரணமாக இருந்துள்ளது” என்று இதி.மு.க.வை மதிப்பிடுகிறார். ஆய்வாளர் பெ.முத்துலிங்கம்.

2012ல், பெரவள்ளூர் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கலைஞர் மு.கருணாநிதி ‘தமிழீழம் என்பது அறுபது ஆண்டுகளுக்கு முன்பு தந்தை செல்வா அவர்கள் தலைமையில் உருவான கீதம். அந்தக் காலத்திலிருந்து அவரோடு இணைந்து திராவிட முன்னேற்றக் கழகமும் தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், நானும், நம்முடைய நண்பர்களும் நின்றிருக்கிறோம்’ என்றார். உண்மையிலேயே ‘தமிழீழம்’ என்ற கருத்தாக்கத்தின் துணையாக மட்டுமல்லாமல், அந்தக் கருத்தாக்கத்தின் தோற்றத்திற்கான ஒரு காரணமாகவும் தி.மு.க. இருந்திருக்கிறது.

1940 ஆகஸ்ட் 24ல், பெரியார் ‘நீதிக்கட்சி’ மாநாட்டில் தொடங்கிவைத்த ‘திராவிட நாடு’ முழக்கத்தை தி.மு.க. 1962வரை முன்னெடுத்தது. தி.மு.க. உருவாகிச் சரியாக மூன்று மாதங்கள் கழித்து, இலங்கையில் எஸ்.ஜே. வி. செல்வநாயகத்தின் தலைமையில் ‘தமிழரசுக் கட்சி’ தொடங்கப்பட்டது. தமிழரசுக் கட்சியின் உருவாக்கத்தில் தி.மு.க.வின் கருத்தியல் தாக்கம் கணிசமாகவே இருந்தது.

தமிழரசுக் கட்சி முன்நிறுத்திய இனவுணர்வு, மொழிப்பற்று. சங்ககாலப் பெருமிதங்கள், பண்டைய தமிழ் அரசர்களின் காலத்தைப் பொற்காலமாகச் சித்திரிப்பது, மேடைகளில் முழங்கும் அடுக்குத் தமிழ், தீப்பொறியான பத்திரிகை எழுத்துகள் எல்லாமே தி.மு.க.விடமிருந்தே பெற்றுக்கொள்ளப்பட்டன.

தமிழரசுக் கட்சி ஆதரவு ‘சுதந்திரன்’ பத்திரிகையில் தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்களைக் குறித்த செய்திகள் தொடர்ச்சியாக வெளியாகின. அண்ணாவும் கலைஞரும் உலகத் தமிழினத்தின் தலைவர்களாகவும் சமூக மறுமலர்ச்சியாளர்களாகவும் கருதப்பட்டார்கள். ஈழத் தமிழ் அரசியலாளர்களின் முதன்மை நட்புச் சக்தியாக தி.மு.கவே இருந்தது. ஈழத் தமிழர்களின் இல்லங்களிலே பேரறிஞர் அண்ணாவின் படமும் கலைஞரின் படமும் தொங்கத் தொடங்கின. அண்ணாவின் பெயரால் படிப்பகங்களும் மன்றங்களும் உருவாகின. அண்ணாவின் உருவச்சிலைகள் நிறுவப்பட்டன. 1969ல் யாழ்ப்பாண முற்றவெளியில் நிகழ்ந்த இ.தி.மு.க மாநாட்டில் முற்றவெளிக்கு ‘அண்ணா நகர்’ எனப் பெயரிட வேண்டும் என்ற தீர்மானத்தை வேலணை வீரசிங்கம் முன்மொழிந்து அந்தத் தீர்மானம் பொதுக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது. தி.மு.க. பத்திரிகைகள் இலங்கையில் பரவலாகப் படிக்கப்பட்டன.

தி.மு.க. இயக்கத் திரைப்படங்கள் – குறிப்பாக, கலைஞர் எழுதியவை – இலங்கையில் கொண்டாடப்பட்டன. ஈழ அரசியலிலும் முன்னொருபோதும் இல்லாத அடைமொழிகள் ‘தந்தை’, ‘தளபதி’, ‘சொல்லின் செல்வர்’, ‘உணர்ச்சிக் கவிஞர்’, ‘தீப்பொறி’ என்றெல்லாம் தோன்றின. தி.மு.க.வின் மேடைப்பேச்சு பாணியைப் பின்பற்றி செ.இராசதுரை. ம.க.அ.அந்தனிசில், காசி ஆனந்தன், வண்ணை ஆனந்தன் என ஒரு பேச்சாளர் பட்டாளமே உருவானது. 1972ல் தொடங்கப்பட்ட ‘தமிழர் விடுதலைக் கூட்டணியின் தேர்தல் சின்னமாக ‘உதயசூரியன்’ இருந்தது.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.க.வும்!

1970-களின் மத்தியில் ஈழ இளைஞர்கள் தனிநாட்டுக்கான ஆயுதப் போராட்டத்தை முன்னெடுக்கத் தொடங்கினார்கள். இவர்களிடமும் தி.மு.க.வின் கருத்தியல் தாக்கம் இருந்ததைப் புலிகள் இயக்கத்தின் நிறுவனர்களில் ஒருவரும் புலிகளின் முதலாவது மத்தியக்குழு உறுப்பினருமான கணேசன் ‘அப்போது தூய தேசியவாதச் சிந்தனையுடனேயே செயற்பட ஆரம்பித்தோம். தமிழ் பிரச்னைகள் பற்றிப் பேசுபவர்கள் அண்ணாதுரை, கருணாநிதி, தமிழரசுக் கட்சி என்பதே எமக்குத் தெரிந்திருந்தவை’ என்று தனது சுயசரிதை நூலில் குறிப்பிடுகிறார்.

எந்தவொரு தமிழகத் தலைவருக்கும் முன்னாலேயே கலைஞர் ஈழப் போராளிகளுடன் தொடர்புகளை ஏற்படுத்திக்கொண்டார். 1977ல் பிரபாகரன் தனது 23ஆவது வயதில் கலைஞரைச் சந்தித்தார். காசி ஆனந்தனும் மாவை சேனாதிராஜாவும் அழைத்துச் சென்றிருந்தார்கள். பிரபாகரன் ஒருமுறை கலைஞருக்கு உதவி கோரி எழுதிய கடிதத்தில், ‘எங்களின் நம்பிக்கை நட்சத்திரம் நீங்கள்’ என எழுதியிருந்தார். கலைஞர் மறைந்தபோது, வட கிழக்கு முன்னாள் முதலமைச்சரான வரதராஜப்பெருமாள், ‘அவர் தமிழர்களின் மொழியை, கலைகளை. இலக்கியத்தை, ஊடகங்களை, அரசியலை, சமூகத்தை எனத் தமிழுலகின் பல பாகங்களையும் அய்ம்பது வருடங்களுக்கு மேல் ஆண்ட பேரரசன். அவரை தேர்தல் அரசியலுக்கு அப்பால் கௌரவமாக வழியனுப்பி வைப்பதே தமிழர்களுக்கு அழகு’ என்று எழுதினார்.

கலைஞர் மு.கருணாநிதி அனைத்து ஈழப் போராளி இயக்கத் தலைவர்களுடனும் தொடர்ச்சியான உறவையும் உரையாடலையும் வைத்திருந்தார். ஈழப் பிரச்சினையின் அடிப்படை குறித்துத் தெளிவாகப் புரிந்துவைத்திருந்தார். தமிழகத்தின் பல்வேறு ஈழ ஆதரவாளர்களைப் போன்று வெறுமனே கண்மூடித்தனமாகப் புலிகளின் புகழைப் பாடுபவராகக் கலைஞர் ஒருபோதும் இருந்ததில்லை. ஈழத்தில் நிகழ்ந்த சகோதரப் படுகொலைகளுக்காகப் புலிகளைக் கண்டித்தார். புலிகளை எதிர்க்கவேண்டிய நேரத்தில் எதிர்த்தார். ஆனால், அந்த எதிர்ப்பு ஒருபோதும் வெறுப்பாக மாறியதில்லை. புலிகளின் அரசியல் துறை தலைவர் சு.ப.தமிழ்ச்செல்வன் கொல்லப்பட்டபோது, கலைஞர் இரங்கல் கவிதையும் எழுதினார்.

இலங்கையில் தமிழர்கள் மீதான இன வன்முறை 1956ல் ஆரம்பித்தது. இதன் பின் எத்தனையோ இன வன்முறைகள். அத்தனை வன்முறைகளையும் எதிர்த்து, இந்தியாவிலிருந்து ஒலிக்கும் முதல் குரல் தி.மு.க.வுடையதாகவே இருந்தது. 1956ல் சிதம்பரத்தில் நடைபெற்ற தி.மு.க.பொதுக்குழுவில், ‘இலங்கைத் தமிழர்களின் உரிமைகள் காக்கப்பட வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. 1958, 1977, 1981, 1983 என்றெல்லாம் இலங்கையில் தமிழர்களின்மீது இனரீதியான தாக்குதல்கள் நிகழ்த்தப்பட்டபோது, தி.மு.க. இந்தத் தாக்குதல்களுக்கு எதிராகக் குரலை ஓங்கி ஒலித்துக்கொண்டேயிருந்தது. இந்திய ஒன்றிய அரசுக்கு இது குறித்துக் கடிதங்களை எழுதியது. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகத் தமிழக மக்களை அணிதிரட்டியது. 1983இல், வெலிகடைச் சிறைப் படுகொலைகளைத் தி.மு.க. கண்டித்து, இலட்சக்கணக்கான மக்களைத் திரட்டி சென்னையில் பேரணியை நடத்தியது. 1983 ஆகஸ்ட் 10ல், மத்திய மாநில அரசுகள் ஈழத் தமிழர் பிரச்சினையில் போதிய கவனம் செலுத்த வேண்டும் என வலியுறுத்தி, கலைஞரும் பேராசிரியர் அன்பழகனும் தங்களது சட்டமன்ற உறுப்பினர் பதவிகளைத் துறந்தனர்.

கலைஞர் 1985ல் தமிழீழ ஆதரவாளர் அமைப்பை (டெசோ) உருவாக்கினார். 1986ல் மதுரையில் டெசோ அமைப்பின் சார்பில் மாபெரும் இலங்கைத் தமிழர் ஆதரவு மாநாடு நடத்தப்பட்டது. வாஜ்பாய், என்.டி.ராமராவ் போன்ற அனைத்திந்தியத் தலைவர்கள் கலந்துகொண்டனர். இலங்கைத் தமிழர்களுக்கு நிலையான உரிமை கிடைக்கும்வரை போராடுவது, ஈழப்போராளிகளுக்கு அடைக்கலம் கொடுப்பது, ஈழத் தமிழினத்தின் பாதுகாப்புக்காக எந்த விதத் தியாகத்திற்கும் தயாராக இருப்பது, இந்தக் கடமைகளைச் செய்யும்போது, மத்திய-மாநில அரசுகளின் அடக்குமுறைகளுக்கு ஆளாக நேர்ந்தாலும் அவற்றை இன்முகத்துட ஏற்பது என நான்கு தீர்மானங்கள் அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.க.வும்!

தி.மு.க.வினர் வெறும் அறிக்கைகளிலும் மேடைகளிலும் மட்டும் ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாகச் செயற்பட்டவர்கள் அல்ல. ஈழத் தமிழர்களுக்கு ஆதரவாக, தி.மு.க. தனது தோற்றம் முதலே இயங்கியிருக்கிறது. எண்ணற்ற ஆர்ப்பாட்டங்களையும் மாநாடுகளையும் பேரணிகளையும் மனிதச் சங்கிலிப் போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது. தி.மு.க.வினர் ஈழப் போராளிகளுக்குத் தமது வீடுகளிலும் சட்டமன்ற விடுதியிலும் அடைக்கலம் கொடுத்தார்கள். பல்வேறு இக்கட்டுகளிலிருந்து போராளிகளைக் காப்பாற்றினார்கள். இதற்காக, தி.மு.க.வினர் நீண்டகாலம் சிறைவாசத்தையும் அனுபவித்திருக்கிறார்கள்.

இந்திய அமைதிப்படை இலங்கையிலிருந்து திரும்பியபோது, அமைதிப்படையை வரவேற்க கலைஞர் மறுத்தார். ‘இந்திய இராணுவம் இலங்கையில் என் தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்த அய்ந்தாயிரம் பேர் கொல்லப்படக் காரணமாக இருந்தது என்பதை எண்ணித்தான், அந்தப் படையை வரவேற்சு நான் செல்லவில்லை’ என முதலமைச்சராகக் கலைஞர் கூறியது சட்டமன்றத்தில் பதிவாகியது.

ஈழத்தில் இறுதியுத்தம் நடந்த காலப்பகுதியில் தி.மு.க. ஆட்சியிலிருந்தது. யுத்தத்தை நிறுத்த கலைஞர் தன்னால் முடிந்தளவு முயன்றார். தி.மு.க. முக்கியஸ்தர்கள் சிலரோடு புலிகள் கடைசிவரை தொடர்பை வைத்திருந்தார்கள். யுத்தத்தை நிறுத்துமாறு தி.மு.க. தொடர்ந்து குரல் கொடுத்தது. மனிதச்சங்கிலிகளையும் ஆர்ப்பாட்டங்களையும் பெருமளவில் நடத்தியது. இலங்கையில் தலையீடு செய்து போரை நிறுத்துமாறு ஒன்றிய அரசைக் கோரியது.

2009 ஏப்ரல் 27ஆம் தேதி, மெரினாவில் உள்ள அண்ணா நினைவிடத்தில் கலைஞர் யுத்த நிறுத்தம் கோரி உண்ணாவிரதத்தை மேற்கொண்டார்.

ஒரு மாநில அரசாகத் தி.மு.க. ஈழப் பிரச்சினையில் தனது உச்சபட்ச அழுத்தத்தை ஒன்றிய அரசுக்குக் கொடுத்திருக்கிறது, இந்தியாவில் வேறெந்தக் கட்சியோ, இயக்கமோ ஒன்றிய அரசுக்கு இந்தளவுக்கு அழுத்தத்தைக் கொடுத்ததில்லை. இந்திய அரசியல் சாசனத்தில் ஒரு மாநில அரசினதும் முதல்வரினதும் அதிகார எல்லைகள் இவ்வளவே.

போருக்குப் பின்னும் ஈழத் தமிழர் பிரச்சினையில் தி.மு.க. தீவிரமாகவே இயங்கியது. 2011 ஏப்ரல் 27ல் நடைபெற்ற தி.மு.க. உயர்நிலை செயற்திட்டக்குழு கூட்டத்தில் முதல் தீர்மானமாக ‘இலங்கையில் நடைபெற்ற போர்க் குற்றங்களுக்காக ஐக்கிய நாடுகள் அமைப்பின் வாயிலாக அமைக்கப்பட்ட விசாரணைக் குழு, இலங்கைப் படையினர் ஈழத் தமிழர்கள்மீது நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை உறுதி செய்திருக்கிறது. இலங்கை அரசின் போர்க் குற்றங்களுக்குக் காரணமானவர்கள்மீது உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். அதற்குத் தேவையான அனைத்து முயற்சிகளிலும் இந்திய அரசு உடனடியாக ஈடுபட வேண்டும்’ என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

2012 மார்ச் 1ல் தி.மு.க. தலைவர் கலைஞர் வெளியிட்ட அறிக்கையில், ‘ஐநா மனிதவுரிமை ஆணையத்தில் கொண்டுவரவுள்ள தீர்மானத்தின்மீது வாக்கெடுப்பு நடைபெறும்போது, இந்திய அரசு எக்காரணம் கொண்டும் இலங்கை அரசை ஆதரிக்கக் கூடாது’ என்று வலியுறுத்தினார்.

தமிழகத்தில் வாழும் ஈழ அகதிகளுக்காக தி.மு.க. பல்வேறு நலத்திட்டங்களை முன்னெடுத்திருக்கிறது. அப்போதைய தமிழக முதல்வர் கலைஞரின் வேண்டுகோளை ஏற்று எழுத்தாளரும் சட்டமன்ற உறுப்பினருமான து.இரவிக்குமார், ஈழ அகதிகள் முகாம்களைப் பார்வைட்டு, 04.07.2006 அன்று முதல்வரிடம் ஓர் அறிக்கையைச் சமர்ப்பித்தார். அது குறித்து. இரவிக்குமார் விகடன் இதழில் (11.10.2009) இவ்வாறு எழுதியிருந்தார்:காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு - ஈழத்தில் திராவிடச் சிந்தனையும் தி.மு.க.வும்!

‘முதல்வர், உடனடியாக சில உத்தரவுகளைப் பிறப்பித்தார். தமிழ் அகதிகளுக்கு அதுவரை மத்திய அரசால் வழங்கப்பட்டுவந்த பணக்கொடை மிகமிகக் குறைவாக உள்ளது என்பதை அறிக்கையில் நான் சுட்டிக்காட்டியிருந்தேன்… அது மிகவும் குறைவு என்பதை உணர்ந்த முதல்வர், உடனடியாகக் பணக்கொடையை இரு மடங்காக உயர்த்தி ஆணையிட்டார். அது மட்டுமின்றி, அகதி முகாம்களின் நிலைமைகளைச் சீர்படுத்திட பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தவும் முதல்வர் ஆணையிட்டார். முதல்வரிடம் வழங்கிய அறிக்கையில், நான் முன்வைத்திருந்த கோரிக்கைகள் பலவும் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளன. குடியுரிமை தொடர்பான எனது கோரிக்கையும் இன்று தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்டு, மத்திய அரசிடம் அதுதொடர்பாக வலியுறுத்துவதற்கு தமிழக முதல்வர் அவர்கள் நடவடிக்கை எடுத்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.’

ஈழ அகதி மாணவர்ளுக்கு மருத்துவம், பொறியியல், ஐடிஐ போன்ற துறைகளில் தி.மு.க. அரசு இட ஒதுக்கீடுகள் வழங்கியிருந்தது. அதன்பின்பு ஆட்சிக்கு வந்த ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க அரசு, ஈழ அகதி மாணவர்களுக்கு 12ஆம் வகுப்பிற்கு மேல் படிக்க அனுமதி இல்லை என்று 03.09.1991ல் ஆணை பிறப்பித்தது. மறுபடியும் தி.மு.க. ஆட்சிக்கு வந்துதான் இந்த ஆணையை விலக்கிக்கொண்டது.

தி.மு.க. என்ற 75 வருட வரலாறு கொண்ட கட்சியின்மீது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பல்வேறு விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. அந்த விமர்சனங்கள் சிலவற்றில் நியாயமும் உண்டு. ஆனால், இலங்கைத் தமிழர்களின் பிரச்சினையைப் பொறுத்தளவில் தி.மு.க. மீதான எதிர் விமர்சனங்கள் செல்லுபடியற்றவை என்றே நான் கருதுவேன். ஏனெனில், இலங்கைத் தமிழர்கள் மீதான ஒடுக்குமுறைகளையும் இனவழிப்புகளையும் முக்கால் நூற்றாண்டாகத் தொடர்ச்சியாகக் கவனமெடுத்துக் குரல்கொடுத்த இலங்கைக்கு வெளியிலுள்ள ஒரேயொரு கட்சியாகத் தி.மு.க.வே இருக்கிறது. இலங்கையில் இருக்கும் சிங்கள முற்போக்குக் கட்சிகளோ, இடதுசாரி இயக்கங்களோகூட இலங்கைத் தமிழர்களுக்கு ஆதரவாக தி.மு.க. அளவுக்குப் போராடிய வரலாறு கிடையாது.

இலங்கைத் தமிழர்களின் அரசியல் உரிமைகளுக்காக தி.மு.க. தன்னால் முடிந்த அனைத்தையுமே செய்திருக்கிறது. இலங்கைத் தமிழர்களின் வரலாற்றிலும் ஈழப் போராட்டத்திலும் தி.மு.க.வின் மதிப்பு மிக்க பங்களிப்பு இன்னும் விரிவாகப் பேசப்படவேண்டிய ஒன்றாகும். இன்னும் துல்லியமாகச் சொன்னால், ஈழத் தமிழர்கள்மீது நேர்மையான கரிசனம் கொண்டு ஈழத்திற்கு வெளியே செயலாலும் சிந்தனையாலும் தியாகங்களாலும் இயங்கிய ஒரேயொரு பேரியக்கம் தமிழகத் திராவிட இயக்கமேயாகும்.

காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு – இந்தியாவின் முதல் கூட்டாச்சிக் குடியரசுக் கட்சி!

MUST READ