திமுக அரசு மீது விஜய் கீறல் விழுந்த ரெக்கார்டு போல திரும்ப திரும்ப ஒரே விமர்சனத்தை முன்வைப்பதாகவும், இப்படியே அவர் பேசினால் மக்கள் சலிப்படைந்து விடுவார்கள் என்றும் முன்னாள் ஐ.ஏ.எஸ் அதிகாரி பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

திருச்சியில் தவெக தலைவர் விஜய் சுற்றுபயணத்தை தொடங்கி இருப்பது குறித்து முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :- திருச்சியில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட நடிகரும், தவெக தலைவருமான விஜய், திமுக அரசு மீது பல்வேறு விமர்சனங்களை முன் வைத்துள்ளார். ஆளும் அரசு மீது குறை சொல்வது மிகவும் எளிதானது. சில விஷயங்களை அரசு சரியாக செய்யவில்லை என்பது உண்மைதான். ஆனால் பல காரியங்களை அவர்கள் சரியாக செய்துள்ளனர். மகளிருக்கு உரிமைத் தொகை கொடுத்தோம் என்று யார் அமதிப்பு செய்தார்கள்? உங்களுடைய உரிமையை உங்களுக்கு கொடுத்தோம் என்று மகிழ்ச்சியுடன் சொன்னால், அது அசிங்கப் படுத்துவதா? இல்லாத அர்த்தங்களை எல்லாம் விஜய் கண்டுபிடிக்கிறார். இது ஆரோக்கியமான அரசியல் கிடையாது.
ஒரு மக்கள் தலைவர், ஜனநாயகன் மக்களை தானே சந்திக்க வேண்டும். ஏன் தனி விமானத்தில் வருகிறார்?. முதல் முறை மக்கள் விஜயை பார்க்க ஆர்வத்தோடு வருவார்கள். தொடர்ந்து அவர் கீறல் விழுந்த ரெக்கார்டு போல இதையே பேசிக் கொண்டிருந்தார் என்றால்? வேறு எதாவது புதிதாக பேசுங்கள் என்று சொல்லிவிடுவார்கள். இதுதான் உண்மை.
விஜய், இதுவரை தான் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்வேன் என்று சொல்லாமல் இருந்தார். தற்போது பெண்கள் பாதுகாப்பில் நாங்கள் பின்வாங்க மாட்டோம் என்று சொல்கிறார். இது பொதுப்படையான வாக்குறுதிகளாகும். லஞ்சம், ஊழல் பெருகிவிட்டதாக சொல்கிற விஜய், அதனை ஒடுக்க அவர் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறார் என்று சொல்லவில்லை. உங்களுடையின் கட்சியின் மாநாட்டிற்கு கணக்கே கொடுக்காத நீங்கள் லஞ்சம், ஊழலை ஒழிப்பீர்கள் என்று யார் நம்புவார்கள்? தமிழ்நாட்டில் கிட்னி திருட்டு நடைபெறுகிறது. சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று சொல்கிற விஜய், தன்னுடைய படங்களில் வன்முறை காட்சிகளை அதிகளவில் வைப்பது ஏன்?
விஜய் தான் சார்ந்து இருக்கும் சினிமா துறைக்கே எதையும் செய்யாதவர். இவர் மக்களுக்கு அதை செய்வேன். இதை செய்வேன் என்று சொன்னால் யார் நம்புவார்கள். எம்ஜிஆர் வார்த்தைகளுக்கு நம்பத்தன்மை இருந்தது. ஆனால் விஜயின் வார்த்தைகளுக்கு நம்பகத்தன்மை இல்லை. ஆனால் விஜய்க்கு சினிமா கவர்ச்சி உள்ளது. அவருக்கு வாக்களிப்பவர்களும் இருப்பார்கள். தனிப்பட்ட முறையில் விஜய், எனக்கு யார் என்றே தெரியாது. ஆனால், சமுதாய உணர்வு? சமுதாய நிலை குறித்து புரிதல் இல்லாத விஜய்க்கு போடுகிற ஒவ்வொரு வாக்கும் தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு எதிராக போடுகிற வாக்குகளாகும்.
விஜய் பேசு பொருளாகி இருக்கிறார். அவர் கவனிக்க தக்க நபராக மாறி இருக்கிறார் என்பது உண்மையாகும். யாராவது அப்படி இல்லை என்று சொன்னார்கள் என்றால்? அவர்கள் தங்களை தாங்களே ஏமாற்றி கொள்கிறார்கள் என்று அர்த்தம். ஆனால் மக்கள் விஜயிடம் இந்த கேள்வியை எழுப்ப வேண்டும். சினிமாத்துறையை சேர்ந்த நீங்கள் அந்த துறைக்கு என்ன செய்திருக்கிறீர்கள்? சும்மா முதலிடம் பிடித்த மாணவர்களுக்கு கம்பியூட்டர் வாங்கி தருவதால், உங்களை சமுதாய நலன் காப்பவராக காண்பிக்க முடியாது. எனக்கு தெரிந்து விஜய் இதுவரை உருப்படியாக எதையும் செய்தது இல்லை.
தற்போதும் திரைப்படத்துறையில் நீங்கள் செல்வாக்கு மிக்கவராக தானே இருக்கிறீர்கள். இப்போது அவர்களுக்கு எதாவது செய்யுங்கள். நாங்கள் உங்களை எதாவது நம்புவோம். அடுத்தபடியாக பொதுமக்களுக்கு என்ன செய்யப் போகிறீர்கள் என்று தெளிவாக சொல்லுங்கள். தமிழ்நாட்டில் உள்ள குறைகள் குறித்து பேசக்கூடாது என்றோ, அரசை விமர்சிக்க கூடாது என்றோ நான் சொல்லவில்லை. நம்மால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு. இந்த அரசை கேள்வி கேட்கிற உரிமை நமக்கு உள்ளது. அதேநேரத்தில் இந்த அரசு போய்விட்டால் அடுத்து வருகிற அரசு எப்படி இருக்கும் என்கிற புரிதல் நமக்கு வேண்டும்.
ஒரு அரசின் அடிப்படை கொள்கை என்பது ஒருங்கிணைந்த வளர்ச்சியாக இருக்குமானால், அந்த மாநிலம் முன்னேறவே செய்யும். அதற்கு கேரளா, தமிழ்நாடு மாநிலங்கள் சான்றாகும். தமிழ்நாட்டில் என்ன நடந்துவிட்டது என்று விஜய் கேட்கிறார். அப்போது, இரட்டை இலக்க வளர்ச்சி எப்படி வந்தது? மத்திய அரசின் புள்ளியியல் அமைச்சகத்தில் இருந்து வருகிற புள்ளி விபரங்கள் சொல்கின்றன, தமிழ்நாடு மட்டும் தான் இரட்டை இலக்க வளர்ச்சியை எட்டியுள்ளது என்று. ஒரு திட்டத்தை செயல்படுத்துகிற போது ஆயிரம் பேருக்கு நன்மை செய்ய வேண்டும் என நினைக்கும்போது, 15 பேருக்கு பயன் கிடைக்காமல் போயிருக்கலாம்.
நீங்கள் அதை சுட்டிக்காட்டுங்கள். அவர்களுக்கும் கொடுக்க வேண்டும் என சொல்லுங்கள். அதைவிடுத்து 15 பேருக்கு கிடைக்கவில்லை பார்த்தீர்களா? இங்கே ஒன்னுமே நடக்கவில்லை என்று சொல்வது எதிர்மறை விமர்சனமாகும். அப்படி சொல்வது பிரயோஜனம் இருக்காது. இன்றைக்கு விஜயை பார்க்க கூட்டம் வருகிறது. நாளைக்கும் வரும். ஆனால் தொடர்ந்து இவர் இதேபோன்று பேசிக் கொண்டிருந்தார் என்றால் மக்கள் சிந்திக்க மாட்டார்களா? எனவே மக்கள் சிந்திக்க வேண்டும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.