spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்கட்டுரைஅலை அலையாய் மக்கள்! ஆர்ப்பரித்த பீகார்! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! ஆடிப்போன பாஜக!

அலை அலையாய் மக்கள்! ஆர்ப்பரித்த பீகார்! ஸ்டாலின் சொன்ன மெசேஜ்! ஆடிப்போன பாஜக!

-

- Advertisement -

மக்களை நோக்கி செல்கிற ராகுல்காந்தியின் பயணம் வெற்றி பெறும் என்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகார் சென்றதன் மூலம் கிடைத்திருக்கும் செய்தி என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி துணைப் பொதுச்செயலாளர் ஆளுர் ஷாநவாஸ் தெரிவித்துள்ளார்.

we-r-hiring

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பீகாரில் ராகுல்காந்தி உடன் இணைந்து யாத்திரை நடத்தியுள்ளது குறித்து விசிக துணைப் பொதுச்செயலாளரும், சட்டமன்ற உறுப்பினருமான ஆளுர் ஷாநவாஸ் பிரபல யூடியூப் அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது :-  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ராகுல்காந்தியின் யாத்திரையில் பங்கேற்க பீகாருக்கு சென்றுள்ளார். அங்கு சென்று புல்லரித்து போய் பதிவுகளை போட்டுள்ளார். மிகச் சிறப்பான ஒரு உரையை நிகழ்த்தி உள்ளார். அவருக்கு அந்த தகுதி உள்ளது. அதற்கு காரணம் இந்தியா கூட்டணி என்பது முதன்முதலில் அமைந்தது தமிழ்நாட்டில் தான்.  வெற்றிகரமாக 3, 4 தேர்தல்களை கடந்து தொடர்வது தமிழ்நாட்டில்தான். ராகுல்காந்தி இன்றைக்கு ஒரு ஜனநாயக காப்பாளராக களத்தில் நிற்கிறார் என்கிறபோது, அதை ஏற்கனவே செய்து காட்டியவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். இன்றைக்கு களத்தில் நிற்கிற ராகுல்காந்தியோடு ஒன்றிணைவதற்கு எதிர்க்கட்சிகள் தயங்குகின்றன. ஒன்றிணைந்தால் வெற்றி கிடைக்கும் என்பதற்கு உதாரணமாக திகழ்பவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தான். கலைஞர் காலத்தில் இல்லாத கூட்டணி ஒற்றுமையை செயல்படுத்தி காட்டியிருக்கிறார். தொடர் வெற்றிகளை நிகழ்த்தி காட்டியிருக்கிறார். கூட்டணியை கட்டுக்கோப்புடன் வைத்துள்ளார்.

திமுக கூட்டணிக்கு புதிய கட்சிகள் வருவதற்கு வாய்ப்பு உள்ளதா? என செய்தியாளர்கள் கேள்வி எழுப்புகிறபோது, அதற்கு பதில் அளித்த  முதலமைச்சர் புதிய கட்சிகள் வர வாய்ப்பு உள்ளது. ஆனால், கூட்டணி கட்சிகளுடன் ஆலோசித்துதான் முடிவு எடுக்கப்படும் என்று சொல்கிறார். இதுதான் கூட்டணியை கட்டுக்கோப்பாக கொண்டுசெல்லும் பாங்கு ஆகும். இந்தியா கூட்டணியில் தேசிய அளவிலும், பல்வேறு மாநிலங்களிலும் இது இல்லாமல் போனதன் விளைவை எல்லோரும் சந்திக்கின்றனர். ராகுல்காந்தியின் தலைமையை ஏற்க பல கட்சிகள் தயங்கின. கடைசியில் அவர்களும் வெற்றி பெறவில்லை. ராகுல்காந்தியும் வெற்றி பெறவில்லை. ஆனால் தமிழ்நாட்டில் மு.க.ஸ்டாலினின் தலைமை ஏற்றுக்கொண்டு அனைத்துக்கட்சிகளும் ஒத்த கருத்தில் உறுதியாக நிற்கிறோம். உறுதியாக பயணப்படுகிறோம். அந்த வெற்றியை  ஈட்டி காட்டியுள்ளோம். அப்போது மற்ற மாநிலங்களுக்கு மெசேஜ் சொல்கிற தகுதி தமிழ்நாட்டிற்கு இருக்கிறது. மற்ற மாநிலங்களுக்கு போய் வழிகாட்டக்கூடிய  முன்னுதாரணம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உள்ளது.  அதனால் அவர் அழைக்கப்பட்டுள்ளார். போய் அங்கே கம்பீரமாக நின்று பேசிவிட்டு வருகிறார்.

பாஜக ஒன்றும் வீழ்த்த முடியாத சக்தி அல்ல. அவர் மூன்று முறை பிரதமர் ஆனதற்கு எங்களுக்கு பங்கு கிடையாது. உ.பி., பீகார் போன்ற வடஇந்திய மக்கள் தான் அவரை பிரதமர் ஆக்கி உள்ளனர் என்கிற செய்தி அங்கே உள்ளது. ஜனநாயகத்தை காப்பாற்ற நாங்கள் நிற்போம். தமிழ்நாட்டில் வந்து அமலாக்கத்துறை, சிபிஐ வாலாட்ட முடியாது என்பதை செய்து கட்டியுள்ளோம். அமலாக்கத்துறை அனுமதி பெறாமல் எங்காவது நுழைந்தால் என்ன ஆகும் என்று நாங்கள் நிரூபித்துக் காட்டியுள்ளோம். டாஸ்மாக் வழக்கில் ஆயிரம் கோடி ரூபாய் ஊழல் என்று அண்ணாமலை சொன்னார். அதையே ஆதாரமாக கொண்டு அமலாக்கத்துறை சோதனை நடத்தியது.

கெஜ்ரிவாலை பிடித்து உள்ளே போட்டது போன்று, ஸ்டாலினையும் பிடித்து உள்ளே போட்டுவிடுவதாக மிரட்டினார்கள். ஆனால் இன்றைக்கு அமலாக்கத்துறை அபராதம் கட்ட வேண்டிய நிலையை ஏற்படுத்தி இருக்கிறோம். ஆளுநரை வைத்து தமிழ்நாட்டில் விளையாட்டு காட்ட முடியாது என்று நிருபித்துள்ளோம். மசோதாக்கள் மீது ஆளுநர் உடனடியாக முடிவு எடுக்க வேண்டும், மாநில அரசுக்குதான் அதிகாரம் என்று உச்ச நீதிமன்றம் வரை சென்று தீர்ப்பு வாங்கி வந்துள்ளது தமிழ்நாடு. இதனை பீகார் உள்ளிட்ட ஒட்டு மொத்த வடமாநில மக்களுக்கும் ஒரு காத்திரமான, நம்பிக்கையை தரக்கூடிய ஒரு ஐக்கான் நமது முதலமைச்சர் தான். அதனால் தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அழைக்கப்பட்டிருக்கிறார். அங்கே கம்பீரமாக பேரணியில் கலந்து கொண்டிருக்கிறார்.

எங்களை போன்று நீங்கள் இருங்கள். கட்டாயம் வெற்றிபெற முடியும். ராகுலும், தேஜஸ்வியும் ஜனநாயகத்தை காப்பாற்ற ஒரு சகோதரர்களை போன்று களத்தில் நிற்கிறீர்கள். மிகப்பெரிய வெற்றியை உங்களுக்கு பிகார் மக்கள் கொடுப்பார்கள் என்று சொல்கிறார். ஊடகங்கள் கை கொடுக்கவில்லை. அண்ணா ஹசாரே போன்று சமூக ஆர்வலர்கள் இந்த போராட்டத்தை முன்னெடுத்து செல்லவில்லை. மற்ற ஜனநாயகத்தின் அமைப்புகள் இந்த செய்தியை எடுத்துக்கொண்டு மக்களிடம் சேர்க்க வில்லை.  ஆனாலும் ராகுல்காந்தி தன்னந்தனியாக நின்று தொடர்ந்து பேசி, வலுவாக பேசி இன்றைக்கு ஒரு இயக்கத்தை கட்டிவிட்டார். களத்திற்கு போய்விட்டார். வியர்வை சிந்துகிறார். மக்களை நோக்கி செல்கிற அவரது பயணம்  வெற்றி பெறும் என்பதுதான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அங்கே சென்றதன் மூலம் கிடைத்திருக்கும் செய்தி. இது மிகப்பெரிய வெற்றி பெறும். பாஜக இதற்கு பதில் சொல்ல வேண்டும். அவர்கள் பதில் சொல்ல வேண்டிய நிலையை பீகார் மக்கள் உருவாக்குவார்கள். அந்த நிலையை நோக்கி இன்றைக்கு நாடு வந்துள்ளது. ராகுல் காந்தி முன்னெடுத்து இருப்பது மிகப்பெரிய பணி. ஆனாலும், ஜனநாயகத்தை நம்பக் கூடிய கட்சிகளின் துணையோடு, இந்த பயணத்தை மேற்கொள்கிறார். அது வெற்றி பெறும்.

மகாராஷ்டிரா தேர்தல் முடிவு; முதலமைச்சர் தேர்வில் பெரும் குழப்பம்

மோடி உலகமே வியந்து பார்க்கும் தலைவர். அவருடைய இடத்தை யாரும் அசைத்து பார்க்கமுடியாது என்று சொன்னார்கள். ஆனால் வாரணாசி தொகுதியில் பின்தங்கினார். அப்போது எல்லாவற்றிலும் மக்கள் ஒரு செய்தியை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். வாக்கு திருட்டு என்பது இன்றைக்கு மக்களிடம் விவாதப் பொருளாகி உள்ளது. ஆதாரங்களை கேட்டால், தேர்தல் ஆணையம் ஏன் ஆவணங்களை வழங்க மறுக்கிறார்கள் என்று பார்க்கிறார்கள். இந்த விவகாரத்தில் அம்பலப்பட்டிருப்பது பாஜக, தேர்தல் ஆணையமாகும். எனவே மக்களிடம் இந்த கருத்துக்களை கொண்டு செல்வதற்கு பீகார் பேரணி பயன்பட்டிருக்கிறது. வாக்கு திருட்டு விவகாரத்தை முன்வைத்து நாடு முழுவதும் இதுபோன்று போராட்டங்கள் நடைபெற வேண்டும். எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அந்த பேரணியில் பங்கேற்றது மிகப்பெரிய வரவேற்புக்கு உரியதாகும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.

MUST READ