மகளிர் குழுவால் இத்தனை நன்மைகளா?
மகளிர் தினம் என்றாலே நம் நினைவிற்கு வருவது சாதனை செய்த பெண்கள் மட்டுமே.
ஆனால் நம்முடைய வீடுகளில், நம் வீட்டு அருகில், சாலையில் என்று ஏராளமான பெண்கள் தினம் தினம் பல பிரச்சனைகளை கடந்து சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.
அந்த வகையில் முக்கியமாக பார்க்க வேண்டியவர்கள் மகளிர் குழுவை நடத்தி வரும் பெண்கள்.
மகளிர் தினமான இன்று அருணோதையா மகளிர் குழு தலைவரை சந்தித்து மகளிர் குழுவை பற்றி சில தகவல்களை கேட்டு தெரிந்து கொள்ள முயற்சி செய்தோம்.
அப்போது அவர் அறிமுகப் படுத்திக் கொண்டார். என் பெயர் லோகநாயகி நான் சென்னை கொருக்குபேட்டை, அண்ணாநகர் தொகுதியில் அருணோதையா மகளிர் குழுவை 20 ஆண்டுகளாக இயக்கி வருவதாக அறிமுகம் செய்துக் கொண்டார்.
மகளிர் சுய உதவிக்குழு என்றால் என்ன எதற்க்காக தொடங்கப்பட்டது?
மகளிர் சுயஉதவிக்குழு என்பது சுயமாக முன்னேற நினைக்கும் பெண்களுக்கும், உழைப்பால் முன்னேறி கொண்டிருக்கும் பெண்களுக்கும் பணம் முதலியவற்றை கொடுத்து உதவுவதற்காக தொடங்கப்பட்டது.
இதனால் குழுவில் உள்ளவர்களுக்கு என்ன பலன் ?
ஒவ்வொரு குழுவிலும் 12 முதல் 20 பெண்களை வரை சேர்க்கலாம், பண உதவி மட்டுமல்லாது அவர்களுக்கு தேவையான தொழில் செய்வதற்கான ஆலோசனைகளும் இதன் மூலம் வழங்கி வருகிறோம்.
ஒவ்வொரு மாதமும் குழுவில் உள்ள உறுப்பினரிடம் சிறு தொகையை வசூலித்து குழுவின் பெயரில் வங்கியில் செலுத்திவிடுவோம். பின் குழு உறுப்பினருக்கு தேவைபடும் நேரத்தில் அந்த பணத்தை எடுத்துக் கொடுப்போம்.
ஏனென்றால் பண தேவை இல்லாதவர்களே கிடையாது. அந்த சூழ்நிலையில் நாம் கந்து வட்டியை தான் அதிகம் நாடுகிறோம். வட்டிக்கு வாங்கிய பின், வட்டிக்கு வட்டி, அதை ஒரு நாள் கட்ட தவறினாலும் அதற்க்கு வட்டி, என வட்டி கொடுமைகள் அதிகமாகி பலர் தற்கொலை போன்ற விபரீத முடிவுகளையும் மேற்கொள்கின்றனர்.
ஆனால் நம் மகளிர் குழுவில் குறைந்த வட்டி தான், இதை தவணை முறையிலும் செலுத்துவதற்கு வழிமுறைகள் உள்ளது.
மகளிர் குழு லோன் மற்றும் வட்டி பற்றி?
மகளிர் குழுவில் படிப்பு லோன், வாகனதிற்கான லோன், சுய தொழில் தொடங்குவதற்கான லோன், போன்ற லோன்கள் எல்லாம் வழங்குவார்கள்.
வட்டிக்கான பைசா எவ்வளவு என்று வெளிப்படையாக எல்லாம் சொல்ல முடியாது, ஆனால் குறைந்த வட்டிக்கு தான் கொடுத்து வருகிறோம்.
உறுப்பினராக சேர்க்கப்படும் நபர் முறை கேடாக நடந்துக் கொண்டால் அவரை குழுவில் இருந்து நீக்குவிர்களா ?
நான் 20 ஆண்டுகளாக குழு இயக்கிவருகிறேன், இப்பொழுது என் மகள்களும் 9 ஆண்டுகளாக குழு இயக்குகிறார்கள், நாங்கள் பார்த்தவரை எங்கள் குழுவில் யாரும் முறைக்கேடாக நடந்ததில்லை.
அப்படி நடந்துக்கொண்டால் மூன்று முறை அவர்களுக்கு “வார்னிங்” கொடுப்போம், அதன் பின்னர் தான் நடவடிக்கை எடுக்கப் படும்.
மகளிர் சுய உதவிக்குழு எப்படி தொடங்குவது ?
மகளிர் குழுவை தொடங்கியதன் நோக்கம் ஏழை, எளிய மக்களுக்கு உதவுவதற்காக மட்டுமே. எனவே நாம் வசிக்கும் பகுதியில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள பெண்கள் குழுவில் சேரலாம். ஒரு குழுவில் சுமார் 12 முதல் 20 பெண்கள் வரை சேர்த்துக் கொள்ளலாம்.
ஒரே வீட்டில் இரு மகளிர் இந்த குழுவில் சேர முடியாது, வீட்டிற்கு ஒருவர் மட்டுமே சேர முடியும், சேர்க்கப்பட்ட மகளிரிடம் ஆதார் கார்டு போன்ற ஏதாகிலும் ஒரு ஆவணம், போட்டோ, இதை பெற்றுக்கொண்டு அருகிலுள்ள அரசு வங்கியில் குழு பெயரில் கணக்கு தொடங்குவோம் என்றார்.
மகளிர் ஒவ்வொருவரும் தனது சொந்த முயற்சியில் முன்னேற வேண்டும் என்ற நல்ல நோக்கத்திற்காக கொண்டுவரப்பட்ட
மகளிர் சுய உதவிக் குழு தற்போது பெண்களின் முன்னேற்றத்தில் பெரும் பங்காற்றி வருகிறது என்பதை நேரில் காண முடிந்தது. அவரிடம் இருந்து மகிழ்ச்சியுடன் விடைப்பெற்றோம்.