Homeசெய்திகள்கட்டுரைஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்! ஜூனில் தரமான சம்பவம்! உடைத்துப்பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

ஸ்டாலின் போடும் ஸ்கெட்ச்! ஜூனில் தரமான சம்பவம்! உடைத்துப்பேசும் எஸ்.பி.லட்சுமணன்!

-

- Advertisement -

அமைச்சர் செந்தில் பாலாஜியை அமைச்சராக தொடரக்கூடாது என்று உச்சநீதிமன்றம் சொல்வதற்கு சட்டத்தில் அதிகாரம் இல்லை. அது முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரம் என்று  மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் தெரிவித்துள்ளார்.

செந்தில் பாலாஜி ஜாமின் வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பின் முழு விவரங்கள் குறித்து மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி. லட்சுமணன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது:- செந்தில் பாலாஜி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக அவர் சிறையில் இருந்தார். பல முறை பல நீதிமன்றங்களால் அவருக்கு ஜாமின் மறுக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் அரசியலமைப்பு சட்டப்பிரிவு 21ன் படி தனி மனித சுதந்திரம் பாதுகாக்கப்படும் என்ற அடிப்படையில், அவர் மீது எப்போது விசாரணை தொடங்கும் என்பது தெரியாத நிலையில், செந்தில் பாலாஜியை இத்தனை நாட்கள் சிறையில் வைத்தது தவறு என்ற அடிப்படையில் ஜாமினில் விட்டார்கள். அப்போது சாட்சிகளை கலைக்கக் கூடாது போன்ற வழக்கமான நிபந்தனைகள் மட்டுமே விதிக்கப்பட்டது. வேறு எந்த பிரத்யேக நிபந்தனைகளும் விதிக்கப்படவில்லை. வாதத்தில் அவர்கள் சொல்கிற விஷயம் நிஜமாகும். முதலில் அமைச்சராக இருந்தார். பின்னர் அமைச்சராக இல்லை. தனக்கு ஜாமின் வேண்டும் என கேட்கிறார். அப்படி ஜாமின் கொடுக்கிறபோது உங்கள் வார்த்தையை ஏற்றுக்கொண்டோம். அப்படியே தொடர வேண்டும். மீண்டும்  அமைச்சர் ஆகக்கூடாது என்று நீதிமன்ற உத்தரவிலும் சொல்லவில்லை. வாதத்தின்போது வாய்வார்த்தைகளாகவும் சொல்லவில்லை. செந்தில் பாலாஜி ஜாமினில் வெளியில் வந்தார். அடுத்த 48 மணிநேரத்தில் அமைச்சராகினார். அடுத்த சில மாதங்களிலேயே எதிர் தரப்பினர் உச்சநீதிமன்றம் செல்கிறார்கள். அந்த வழக்கு 5, 6 மாதங்களாக நடக்கிறது. இந்த வழக்கின் விசாரணையின் போது ஒரு நிபந்தனை விதிக்கிறார்கள். உங்களுக்கு பதவி வேண்டுமா? அல்லது ஜாமின் வேண்டுமா? என கேட்கிறார்கள். அதற்கான பதிலை தனது ராஜினாமா மூலம் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!
Photo: Minister Senthil Balaji

இதனை இரண்டு விதமாக பார்க்க வேண்டும். ஜாமின் தரப்பட்டபோது நீங்கள் அமைச்சர் ஆகக் கூடாது என்று அப்போதே நாங்கள் சொல்லத் தவறிவிட்டோம் என்று கடந்த நீதிமன்ற விசாரணையின்போது நீதிபதி தெரிவித்தார். அப்படி சொல்வதற்கு சட்டத்தில் இடம் கிடையாது. சில ஆயிரம் கோடி மதுபான ஊழல் வழக்கு என்று சொல்லப்பட்ட வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஜாமின் கொடுத்தபோது கூட
கூட நீங்கள் முதலமைச்சராக தொடரக்கூடாது என்கிற உத்தரவு போடவில்லை. முதல்வர் அலுவலகத்திற்கு போகாதீர்கள் என்று மென்மையாக தான் சொன்னார்கள். சட்டத்தின் பார்வையில் பார்த்தோம் என்றால் அப்படி சொல்வதற்கு நீதிமன்றத்திற்கு அதிகாரம் கிடையாது. அரசியலமைப்பு சட்டம் லெஜிஸ்லேச்சர், ஜுடிசியரி, எக்சிகியூட்டிவ் என தனித்தனி அதிகாரங்களை வழங்கி இருக்கிறது. ஒருத்தர் அதிகாரத்தில் மற்றொருவர் தலையிட மாட்டார்கள். அதனால்தான் அந்த உத்தரவிலும் சொல்லவில்லை. இவ்வளவு அவசரமாக செந்தில் பாலாஜி பதவி ஏற்றதுதான் இவ்வளவு பிரச்சினைகளுக்கு காரணம் என்று தற்போது விமர்சனங்கள் வருகிறது.

சாட்சியை கலைக்க கடந்த காலங்களில் செந்தில் பாலாஜி முயற்சித்துள்ளார். ஜாமின் கேட்கிற போது அவர் அமைச்சராக இல்லை. அதனால் நாங்கள் ஜாமின் வழங்கினோம். 2 நாட்களில் அவர் அமைச்சராகிவிட்டார். அப்போது நாங்கள் தவறு செய்து விட்டோமோ என நினைக்கிறோம் என உச்சநீதிமன்றம் சொல்கிறது. அதே வழக்கில் நீதிபதி ஓகா சொல்கிறார், நாங்கள் மெரிட் ஆப்த கேஸ் செல்லவில்லை என்று. அப்படி என்றால் வழக்கின் உண்மை தன்மை குறித்து போகக்கூடாது என்று சொல்கிறார். இவ்வளவு சொலகிற நீதிபதி நான் முடிவு எடுக்கிறேன். நீங்கள் அமைச்சராக தொடரக்கூடாது என்று சொல்லி இருக்கலாமே? ஏன் முடிவை செந்தில் பாலாஜியிடம் கொடுத்தார். ஏனென்றால் நீதிபதி சொல்வதற்கு அதிகாரம் கிடையாது. அரசியலமைப்பு சட்டப்பிரிவு 164ன் படி ஒருவர் அமைச்சராக தொடரலாமா? அல்லது கூடாதா? என்பது முதலமைச்சரின் தனிப்பட்ட அதிகாரமாகும். சட்டப்பிரிவு 75ன் படி ஒருவர் மத்திய அமைச்சராக தொடராலாமா வேண்டாமா என முடிவு செய்வது பிரதமரின் தனிப்பட்ட அதிகாரமாகும். இதில் ஜனாதிபதியோ, ஆளுநரோ எந்த நீதிமன்றமே தலையிட முடியாது. இதை புரிந்துகொண்டதால் தான் நீங்களே முடிவு செய்யுங்கள் என்கிறார் நீதிபதி. இன்றைக்கு ராஜினாமா செய்ததன் மூலமாக ஒரு தனி நபர், அல்லது சில தனி நபர்கள் அல்லது நீதிமன்றத்தின் ஒரு பகுதி, ஒரு பிரிவு ஏதோ ஒருவருயை அல்லது ஒன்றின் ஈகோ சமாதானப்படுத்தப் பட்டிருக்கிறது என்றுதான் சொல்லத் தோன்றுகிறது. அதை தாண்டி இதை விமர்சிக்க நான் விரும்பவில்லை.

ஏனென்றால் சட்டத்தில் அதற்கு இடம் இல்லை. அமலாக்கத்துறை இன்றைக்கு வைத்த வாதத்தை வைத்துதான் நான் ஈகோ என்கிற வார்த்தை எடுத்து வருகிறேன். செந்தில் பாலாஜி பதவியை ராஜினாமா செய்துவிட்டார் சரி. இந்த வழக்கில் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு பிறப்பித்தது போல அடுத்த ஆட்சி  திமுக  வந்தாலும், அந்த ஆட்சியில் செந்தில் பாலாஜியை அமைச்சராக நியமிக்கக்கூடாது என்று சொல்லுங்கள் என்று அமலாக்கத்துறையினர் சொல்கிறார்கள். இது சட்டத்தின் அடிப்படையிலான வாதமா? இன்றைக்கு செந்தில் பாலாஜிக்கு எதிராக இருப்பவர்களுக்கு எல்லாம் இது இனிக்கும். நாளைக்கு இன்னொருத்தருக்காகவும் நான் பேசுவேன். ஏனென்றால் அரசமைப்பு படி முதலமைச்சரிடம் இருக்கிற ஒரு உரிமையை நீதிமன்றம் பறிக்க முடியாது. அன்றைக்கு அவர்கள் அமைச்சர் ஆவதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்க வில்லை. அல்லது அமைச்சர் ஆகவே கூடாது என்றும் சொல்லவில்லை. அதெப்படி 48 மணி நேரத்தில் அமைச்சராகலாம் என்கிறார்கள். அந்த வரையறையை முதலமைச்சரை தவிர வேறு யாரும் செய்ய முடியாது.

இன்றைக்கு செந்தில்பாலாஜி தனது பதவியை ராஜினாமா செய்துவிட்டார். அமலாக்கத்துறை அவ்வளவு கடுமையான வாதங்களை வைத்தது. நீதிமன்றம் அதை கேட்டுக்கொண்டது. கபில் சிபல் எழுந்திருக்கிறார். இந்த வழக்கு 15 வருடங்கள் நடைபெறும். நடைபெறலாம். அத்தனை வருடங்களும் செந்தில்பாலாஜி அமைச்சராக கூடாதா என்று கேட்கிறார். அதையும் நீதிமன்றம் கேட்கிறது. கேட்டுவிட்டு எந்த உத்தவும் பிறப்பிக்காமல் வழக்கை முடித்து வைக்கிறது. இந்த வழக்கு தொடங்கி 5 மாதங்கள் ஆகிறது. ஒவ்வொரு முறை விசாரணை நடைபெறுகிறபோது அது உச்சநீதிமன்றமோ, உயர்நீதிமன்றமோ அன்றை விசாரணை முடிந்த உடன் ஒரு உத்தரவு போல வழங்குவார்கள். அப்படி இந்த வழக்கின் முதல் உத்தரவில் இதே நீதிபதி ஓகா, ஜாமின் குறித்து யாரும் பேசக்கூடாது என்று சொல்லியிருந்தார். அடுத்த 4 முறையும் அவருடைய மனநிலை அதுதான். 5வது முறை வருகிறபோதுதான் ஜாமினை ரத்து செய்யட்டுமா? வேண்டாமா? என்று ஒரு கேள்வியை முன்வைக்கிறார். எப்படி இதை கேட்கிறீர்கள் என்று கபில் சிபல் சொல்லிப்பார்க்கிறார். அவர் காதிலே வாங்கவில்லை. இந்த வழக்கில் விசாரணையே தொடங்காதபோது, செந்தில்பாலாஜி சாட்சிகளை எப்படி கலைத்தார்?. நீதிபதியின் பார்வை எல்லாம் ராஜினாமாவா? ஜாமினை ரத்து செய்வதா? என்றுதான் இருந்தது.

போதை சாம்ரஜியத்தால் தமிழகம் சீரழிந்து வருகிறது - மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சௌகான்

இதில் மற்றொரு சுவாரஸ்யம் என்ன என்றால் சட்டத்தின் பார்வையை தன்னுடைய வாயில் இருந்து சொல்லி அமல்படுத்திய நீதிபதி ஓகா, வரும் மே 24ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். அதனால் சில நாட்களில் வழக்கு விசாரணையில் இருந்து முடித்துக் கொள்வார். அவர் சத்தமின்றி ஓய்வுபெற்று போய்விடுவார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு பொலிட்டிகல் வில் பவர் இருந்தால், சட்டத்தின் பார்வைக்கு உட்பட்டு ஜுன் கடைசி வாரத்தில் செந்தில் பாலாஜி மீண்டும் அமைச்சராவதற்கு தடை இல்லை. மீண்டும் நீதிமன்றத்திற்கு போவார்கள் தான். அதை புதிய அமர்வு விசாரிக்கும். அப்போது மெரிட் ஆப்த கேஸ் முழுமையாக விசாரிக்கப்படும். அப்போது சாட்சிகளை எப்படி மிரட்டினார் என்று கேள்விகள் வரும். சில பல மாதங்கள் வழக்கு நடைபெறும். நான் மீண்டும் சொல்கிறேன். அதற்கு தேவை பொலிட்டிகல் வில் பவர்தான். சட்டம் அதற்கு தடையாக இல்லை. அதனால்தான் இன்றைக்கு கபில்சிபல் வாதத்தை கேட்டுக் கொண்டார்கள். அமலாக்கத்துறை வாதத்தை நிராகரித்தார்கள். உத்தரவில் எதுவும் போடவில்லை. அப்போது எவ்வளவு காலத்திற்கு செந்தில்பாலாஜி அமைச்சராகக் கூடாது என்கிற வரையரை என்பது இல்லை. சட்டத்தில் இல்லாத ஒன்றை அமல்படுத்த முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 

MUST READ