எடப்பாடி பழனிசாமியை பலவீனப்படுத்தி கட்சியை கைப்பற்றுவதில் ஒபிஎஸ், தினகரன் போன்றவர்கள் தீவிரமாக உள்ளனர். எனவே அவர்கள் திமுகவுக்கு செல்வதற்கு கூட வாய்ப்புகள் உள்ளன என்று மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் தெரிவித்துள்ளார்.


அதிமுகவில் இருந்து திமுகவுக்கு மேலும் பலர் வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அதன் பின்னணி குறித்து மூத்த பத்திரிகையாளர் தாமோதரன் பிரகாஷ் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் கூறியிருப்பதாவது :- கலைஞர் எதிர்ப்பில் உருவான இயக்கம் தான் அதிமுக. இன்று வரை அக்கட்சி 20 சதவீதம் வாக்குகளை வைத்திருக்கிறது. அந்த வாக்குகள் திமுக எதிர்ப்பு வாக்குகளாகும். திமுக எதிர்ப்பு என்பது, கலைஞரின் கடுமையான உழைப்பினால் குறைய தொடங்கியது. அதனால் கலைஞருக்கு எதிரான எதிர்ப்பு நடவடிக்கைகள் வேறு வடிவம் எடுத்தன. முதலில் காங்கிரஸ் வடிவில் இருந்த கலைஞர் எதிர்ப்பு, பின்னர் அதிமுகவாக மாறியது. காங்கிரஸ் வாக்குகளை எல்லாம் எம்ஜிஆர் எடுத்துக்கொண்டு கலைஞர் எதிர்ப்பை மட்டுமே முன்னிலைப்படுத்தினார்.
ராஜிவ்காந்தி படுகொலைக்கு பிறகு கலைஞர் எதிர்ப்பை மிகப்பெரிய அளவில் காங்கிரஸ் உடன் இணைந்து ஜெயலலிதா எடுத்தார்கள். அப்படிதான் எடுத்துக்கொண்டு வந்து நிற்க வைத்தனர். ஆனால் கலைஞரின் மறைவுக்கு பிறகு அந்த முயற்சி அவசியமற்றதாகி போய்விட்டது. ஸ்டாலினே தன்னை எம்ஜிஆர் ரசிகர் என்று சொன்ன பிறகு, கலைஞர் எதிர்ப்பு அதிமுகவிலும், அதிமுக எதிர்ப்பு திமுகவிலும் குறைகிறது. அங்கு ஒரு வெற்றிடம் உருவாகிறது. இதற்கு மத்தியில் அதிமுக எதிர்க்கட்சியாகவும், திமுக ஆளுங்கட்சியாகவும் மாறுகிறது.

தற்போது திமுக தங்களின் 2வது இன்னிங்சை தொடர நினைக்கும்போது, கலைஞர் எதிர்ப்பு ஒட்டுமொத்தமாக தேவையற்றதாகி விட்டது. கலைஞர் எதிர்ப்பு அரசியலுக்கான தேவை இன்றைக்கு இல்லாமல் போனதால், அதிமுக தொடர்ந்து 9 தோல்விகளை எடப்பாடி பழனிசாமி தலைமையில் சந்தித்துவிட்டது. 10வது தோல்வியை சந்திக்க அக்கட்சியினர் தயாராக இல்லை. எனவே நாம் திமுகவாக மாறிவிட்டால் அது வெற்றியாக மாறிவிடும் என்கிற எண்ணம் அதிமுகவினர் மத்தியில் ஏற்பட்டிருக்கிறது. எடப்பாடி எதிர்ப்பு என்பது, கலைஞர் எதிர்ப்பை விட வலிமையானதாகவே உள்ளது.
எடப்பாடி பழனிசாமி கட்சியில் சாதாரண நிலையில் இருந்து பொதுச் செயலாளராக மாறுகிறபோது ஏகப்பட்ட எதிரிகளை அவர் சம்பாதித்து விடுகிறார். அந்த எதிரிகள் பாஜக உடன் இணைந்து 18 சதவீதம் வாக்குகளை வாங்கக் கூடிய அளவுக்கு இருக்கிறார்கள். அதிமுகவை 38 சதவீதத்தில் இருந்து 20 சதவீதமாக குறைப்பவர்களாகவும் இருக்கிறார்கள். அதனால் 18 + 20 இணைந்தால் தான் 38 சதவீதம் வரும் என்று அதிமுக – பாஜக கூட்டணி அமைந்தது. ஆனால் அதில் முக்கிய சதவீத வாக்குகள் அதிமுக கூட்டணிக்கு வரவில்லை. அது டிடிவி தினகரன், ஓபிஎஸ் பக்கமே நின்றுவிட்டது. அப்படி ஓபிஎஸ் பக்கத்தில் இருந்தவர் தான் மனோஜ் பாண்டியன்.

பி.ஹெச். பாண்டியன் குடும்பம் திமுக எதிர்ப்பில் வளர்ந்த குடும்பமாகும். அந்த குடும்பத்தில் இருந்து ஒருவர் திமுகவில் இணைகிறார் என்றால்? அது பூங்கோதை ஆலடி அருணா என்கிற நாடார் சமுதாய தலைவர் தென்காசி மாவட்டத்தில் பலவீனமாக இருக்கிறார் என்பதால், மனோஜ் பாண்டியனை அழைத்து வந்து இணைத்துள்ளனர். அதன் பிறகு மைத்ரேயன், எழுத்தாளர் ஒருவர் திமுகவில் இணைந்தனர். இவர்கள் எல்லாம் சிறிய அளவிலான தலைவர்கள் தான். ஆனால் அடுத்து பட்டியலில் இருக்கும் சக்திகளாக வெளிப்படுபவர்கள் யார் என்றால்? நத்தம் விஸ்வநாதன், வைத்திலிங்கம், ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் போன்றவர்களாகும்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் எடப்பாடி அணி 75 இடங்களில் வென்ற நிலையில், தினகரனால் 50 இடங்களில் தோல்வியை சந்தித்தது. அதிமுக ஆட்சியை இழந்ததற்கு காரணம் டிடிவி தினகரன். அவருடன் இருந்த தங்க தமிழ்செல்வன், செந்தில் பாலாஜி போன்றவர்கள் இன்றைக்கு திமுகவில் இருக்கிறார்கள். அதே நிலைமை தான் தினகரனுக்கும். ஜெயலலிதா ஆட்சியில் நடந்த புகாரை செந்தில் பாலாஜிக்கு எதிராக பெரியளவுக்கு கொண்டுவந்தது அதிமுக. அதை அண்ணாமலை மூலம் அதை பெரிதாக்கி செந்தில் பாலாஜியை காலி செய்ய காரணம், கொங்கு மண்டலத்தில் தன்னைவிட பெரியவர் யாரும் கிடையாது என்பதற்காக தான்.

அதேபோல்தான் டிடிவி தினகரன் மத்திய மண்டலத்திலும், தென் மாவட்டங்களிலும் தன்னை தவிர யாரும் இருக்கக் கூடாது என்பதாகும். கடந்த முறை அண்ணாமலை, தினகரனுடன் நட்பாகி, ஓபிஎஸ், சசிகலாவை சேர்த்து நாடாளுமன்றத்தில் ஆடிய விளையாட்டு எல்லோருக்கும் தெரியும். தினகரன் திமுகவுக்கு போகாவிட்டாலும் எடப்பாடி பழனிசாமியை வீழ்த்துவதில் முன்னிலையில் நிற்கிறார். கடந்த சில நாட்களாக அவர் கொடுக்கும் பேட்டிகள், திமுகவுக்கு ஆதரவாக தான் உள்ளது. ஒபிஎஸ்-ம் அதே மாதிரி பேசுகிறார்.
ஓபிஎஸ் உள்ளிட்டோர் பாஜகவிடம் சென்று தங்களை அதிமுகவில் சேர்க்கும்படி கேட்டனர். ஆனால் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக மறுத்துவிட்டார். அதனால் எடப்பாடியின் தலைமையை பலவீனப்படுத்தி அடுத்த தேர்தலில் அதிமுகவை ஒருங்கிணைக்கும் முடிவுக்கு தினகரன், ஓபிஎஸ் போன்றவர்கள் வந்துவிட்டனர். அதேவேளையில் அதிமுகவில், விஜயுடன் கூட்டணி வைக்காவிட்டால் யாரும் போட்டியிடவே தயாராக இல்லை. அதனால் எடப்பாடி பழனிசாமி பாமகவையும், தேமுதிகவையும் எப்படியாவது கூட்டணிக்கு கொண்டுவர வேண்டும் என்று முயற்சித்து வருகிறார்.

தேமுதிகவின் வாக்கு சதவீதம் ஒன்றில் இருந்து 0.435 சதவீதமாக சரிந்துவிட்டது. அவர்களிடம் எ.வ.வேலு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார். அதிமுக தரப்பில் அடுத்த மாதம் மாநிலங்களவை எம்.பி. சீட் ஒன்று காலியாகிறது. அதை பாமகவுக்கு கொடுத்து அவர்களை கூட்டணிக்குள் கொண்டு வருவதற்கு முயற்சிகள் நடைபெறுகிறது. அதிமுக 20%, பாஜக 10%, பாமக 3%, தேமுதிக 1%, ஆட்சிக்கு எதிரான வாக்குகள் 4-5% வாக்குகள் என சேர்த்தால் தான் இவர்கள் 39 சதவீதம் வருவார்கள். திமுக 43 %, தவெக 4-5%, சீமான் 3% வாக்குகளுடன் உள்ளனர்.
இந்த களத்திற்குள் வெற்றி பெறுவதற்கான வாய்ப்புகள் வர வேண்டும் என்றால்? பாமகவும், தேமுகவும் அதிமுக முகாமுக்கு வர வேண்டும் என்று பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. தற்போது சாதாரணமாக இருந்தால் அப்படியே இருக்கலாம். ஆனால் திமுக பக்கம் போய் சேர்ந்தால் எம்.பி., எம்.எல்.ஏ என்று போட்டுக்கொள்ளளலாம். வாய்ப்புகள் திமுக பக்கம் அதிகமாக இருப்பதால் திமுகவுக்கு இடம்பெயர்வுகள் அதிகமாக இருக்கும், இவ்வாறு அவர் தெரிவித்தார்.


