பிரிட்டிஷ் ஆட்சியில் செய்ததைவிட பல மடங்கு அராஜகத்தை முன்னாள் தலைமை தேர்தல் ஆணையர் ராஜிவ்குமாரும், தற்போதைய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமாரும், நம்முடைய ஜனநாயகத்திற்கு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி, தேர்தல் ஆணையம் உதவியுடன் பாஜக வாக்குகளை திருடுவதாக குற்றம்சாட்டியுள்ள நிலையில், இது தொடர்பாக மூத்த பத்திரிகையாளர் ஆர்.கே.ராதாகிருஷ்ணன் பிரபல யூடியூப் சேனல் ஒன்றுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளதாவது:- புலனாய்வு பத்திரிகையாளர்கள் செய்ய வேண்டிய வேலையை, எதிர்க்கட்சித் தலைவர் ராகுல்காந்தி செய்துள்ளார். ஆனால் இதனை இந்து பத்திரிகையை தவிர வேறு எந்த பத்திரிகையும் பெரிதாக பிரசுரம் செய்யவில்லை. தமிழ்நாடேகளில் இது தொடர்பான செய்திகள் வெளியாகவில்லை. எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்புகிறபோது, அதற்கு உதவிட வேண்டியது பத்திரிகைகளின் வேலையாகும். 2014க்கு முன்பாக பத்திரிகைகள் எந்த அளவுக்கு பாஜகவுக்கு உதவி செய்தனவோ, அதில் 10 சதவீதம் கூட இன்றைக்கு செய்யவில்லை. மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தலின் போது, தேர்தல் மோசடிகள் குறித்து நான் பேசி இருந்தேன்.
பாஜக தனக்கு என்று தேர்தல் பணியாளர்கள் என்கிற புதிய அணி ஒன்றை உருவாக்கியுள்ளது. இவர்கள் ஆர்எஸ்எஸ் இயக்கத்தை போன்று பதிவு செய்யப்பட்ட உறுப்பினர்களாக இருக்க மாட்டார்கள். தேர்தலின்போது ஒவ்வொரு ஊராக சென்று வாக்களிப்பார்கள். மகாராஷ்டிராவில் இவர்கள் செய்ததை நாங்கள் பார்த்தோம். குறிப்பிட்ட சில சட்டமன்றத் தொகுதிகளில் மட்டும் தான் இவ்வாறு வாக்களிப்பார்கள். பரவலாக வாக்களிக்க மாட்டார்கள். பாஜகவினர் அனைவருக்கும் இந்த தகவல் கிடைத்துவிட்டதால், ஒவ்வொருவரும் தங்களுடைய தொகுதிகளில் செய்ய தொடங்கிவிட்டனர். எதிர்க்கட்சிகள் வெற்றிகள் இதையும் தாண்டி தான் வருகிறது. பாஜகவின் செயல்பாடு 80 சதவீதம் இருக்கும் மகாராஷ்ராவிலேயே முறைகேடு இருப்பதாக நான் சொல்கிறேன். அதே முறைகேடு குறித்துதான் இன்றைக்கு ராகுல்காந்தி சொல்கிறார்.
ஒரே நபருக்கு உ.பி., மகாராஷ்டிரா, கர்நாடகா என அனைத்து மாநிலங்களிலும் வாக்குச்சீட்டுகள் இருக்கின்றன. ஒற்றை அறையில் 80 பேர் வாக்காளர்களாக உள்ளனர். அதேபோல், தந்தையின் பெயர் XX, JJ, HH என்றெல்லாம் பெயர்கள் உள்ளன. இதனை தேர்தல் ஆணையத்திற்கு கொண்டு செல்கிறபோது, இதை பிரமாண பத்திரமாக தாக்கல் செய்யுங்கள் என்று சொல்கிறது. இதுபோன்ற விநோதத்தை எங்காவது பார்த்துள்ளீர்களா? இதற்கு முன்னாள் தேர்தல் ஆணையராக இருந்த ராஜிவ்குமாராக இருந்தாலும் சரி, தற்போதுள்ள ஞானேஷ்குமாராக இருந்தாலும் சரி. அவர்களிடம் இருந்து பதிலே கிடையாது. நிர்வாசன் சதனில் உள்ள தேர்தல் ஆணையக்கட்டிடத்தை காலிசெய்துவிட்டு, டெல்லியில் உள்ள பாஜக அலுவலகத்தில் கொண்டுபோய் வைத்துவிடலாம்.
தேர்தல் ஆணையக் கட்டிடத்தை வாடகைக்கு விட்டு அந்த தொகையை நிர்மலா சீதாராமனிடம் வழங்கலாம் என்று நான் சொல்லியுள்ளேன். தேர்தல் ஆணையம் என்பது பாஜகவின் ஒரு அங்கம் என்று கொண்டுவந்திறலாம். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் செய்ததைவிட அதிக அராஜகத்தை ராஜிவ்குமாரும், ஞானேஷ்குமாரும் சேர்ந்து நம்முடைய ஜனநாயகத்திற்கு செய்து கொண்டிருக்கிறார்கள். பீகாரில் 65 லட்சம் வாக்காளர்களை நீக்குகிறார்கள். ஆனால் இதனை பெரிய அளவில் வாக்காளர் நீக்கப்படவில்லை என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது.
பீகார் வாக்காளர் சிறப்பு திருத்த நடவடிக்கை தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும். ஆனால் அவர்கள் ஆலோசனை வழங்குகிறார்கள். அதிகமான வாக்காளர்களை நீக்கினால் தலையிடுவேன் என்று உச்சநீதிமன்றம் சொன்னது. தேர்தல் ஆணையம் 65 லட்சம் வாக்காளர்களை நீக்கியது. ஆனால் உச்சநீதிமன்றம் தலையிட வில்லை. வழக்கு போய்க்கொண்டே இருக்கிறது. பீகார் தேர்தல் அக்டோபர் மாதத்தில் நடைபெற உள்ளது. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் எப்போது தீர்ப்பு வழங்கி, அதை எப்படி நடைமுறைப்படுத்துவார்கள்?. இந்த விவகாரத்தில் உச்சநீதிமன்றம் இன்னும் கால தாமதம் செய்வது ஜனநாயகத்திற்கு உகந்தது கிடையாது.
வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர்களை நீக்குவதை வெற்றி பெறுவதற்கான ஒரு யுக்தியாக பாஜக கையில் எடுத்துள்ளது. அதை தேர்தல் ஆணையம் நடைமுறைப்படுத்துகிறது. போலி வாக்காளர்களை சேர்ப்பதை மற்றொரு யுக்தியாக பாஜக எடுக்கிறது. அதையும் தேர்தல் ஆணையம் செயல்படுத்துகிறது. டிராவலிங் வாக்காளர்கள் என்கிற ஒரு யுக்தியையும் பாஜக கையில் எடுத்துள்ளது. அதையும் தேர்தல் ஆணையம் செயல்படுத்துகிறது. வாக்காளர்களை நீக்கும் விவகாரத்தில் எந்த எந்த சட்டமன்றத் தொகுதிகளில் இஸ்லாமியர்கள் அதிகமாக உள்ளனரோ, அந்த தொகுதியில் பல இஸ்லாமியர்களை நீக்கியுள்ளனர். காரணம் அந்த தொகுதிகளில் இந்தியா கூட்டணி வெற்றி பெற்றாலும் வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் இருக்கக்கூடாது என்பதற்காக. கடந்த தேர்தலில் பாஜக – நிதிஷ்குமார் கூட்டணி 15 முதல் 20 தொகுதிகளில் 3 ஆயிரத்துக்கும் குறைவான வாக்குகள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்றது. அந்த தொகுதிகளில் 5 ஆயிரம் முதல் 16ஆயிரம் வாக்குகள் வரை நீக்கியுள்ளனர்.
மற்றொன்று டிராவலிங் வாக்காளர்கள். உ.பி., மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களில் இருந்து வாக்காளர்களை கொண்டுவந்து இங்கு வாக்களிக்க வைப்பது. இதற்காக தான் பல்வேறு கட்டங்களாக தேர்தல் நடத்துகிறார்கள். மகாராஷ்டிராவில் 5 கட்டங்களாக தேர்தல் நடத்துவது, பாதுகாப்பு காரணங்களுக்காக இல்லை. டிராவலிங் வாக்காளர்களை ஓரிடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு கொண்டுசெல்வதற்காக தான். தற்போது மகாராஷ்டிரா, ஹரியானா, பீகார் மாநிலத்தின் வாக்காளர் பட்டியல் தேர்தல் ஆணையத்தின் இணையதள பக்கத்தில் கிடையாது. அதனை இணைய பக்கத்தில் இருந்து நீக்கிவிட்டனர். அப்போது இது முழுக்க முழுக்க பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பால் நடத்தப்பட்ட மோசடியாகத்தான் பார்க்க முடிகிறது. தேர்தல் ஆணைய அதிகாரிகளின் சிறு தவறால் நடந்த விஷயம் இது கிடையாது. வெளி மாநில தொழிலாளர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்குரிமை அளிக்கும் விவகாரம் சர்ச்சையாகி உள்ளது. வெளி மாநிலத்தில் இருந்து இங்கு வந்து குடியேறுபவர்களுக்கு வாக்குரிமை அளிப்பதில் தவறு கிடையாது. ஆனால் பணி காரணமாக இங்கு தங்கியுள்ளவர்களுக்கு வாக்குரிமை அளிப்பது தவறாகும். தமிழ்நாட்டில் 6 லட்சம் வாக்காளர்களை சேர்த்துவிட்டு, இனி இவர்கள் எல்லாம் தமிழ்நாடு வாக்காளர்கள் என்று சொல்வதை ஏற்றுக்கொள்ள முடியாது, இவ்வாறு அவர் தெரிவித்தார்.