முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், சபாநாயகர் அறைக்கு சென்ற விவகாரத்தில் அரசியல் இல்லை என்று பத்திரிகையாளர் குபேந்திரன் விளக்கம் அளித்துள்ளார். மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் அதிமுக உடன் தவெகவை கூட்டணி வைக்க பாஜக விடாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதிமுகவில் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன் ஆகியோரது மோதலின் பின்னணி குறித்து பத்திரிகையாளர் குபேந்திரன் யூடியூப் சேனலுக்கு அளித்துள்ள நேர்காணலில் கூறியிருப்பதாவது:- சசிகலா, தினகரன், ஓபிஎஸ், செங்கோட்டையன் ஆகியோர் அடங்கிய குழு உருவாகிறதா? என்று பலரும் கேள்வி எழுப்புகிறார்கள். ஆனால் அப்படி உருவாகுவதற்கான வாய்ப்புகள் கிடையாது. சசிகலா, சிறைத்தண்டனை முடிந்து பெங்களுருவில் இருந்து சென்னைக்கு வந்தபோது அவருக்கு இருந்த மவுசு என்பது அனைவருக்கும் தெரியும். பெங்களுரு முதல் சென்னை வரை சாலையின் இருபுறமும் கட்சியினரை நிறுத்தி வரவேற்பு கொடுத்தார்கள். ஆனால் கடைசியில் சசிகலா என்ன ஆகினார்?. அந்த தேர்தலிலேயே சசிகலா நிற்கவில்லை. புறக்கணித்தார். குறைந்தபட்சம் தன்னால் அரசியலுக்கு கொண்டு வரப்பட்ட தினகரனுடையே இணக்கமாக செயல்படக்கூடிய நிலையில் சசிகலா இல்லை. இவரால் ஒரு அணியை கட்டமைத்து ஒன்றும் செய்துவிட முடியாது. திரும்ப திரும்ப அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று சொல்வது என்பது வேறு ஒரு பலனுக்காக. செங்கோட்டையனுக்கு ஒரு ஆசை உள்ளது. அது அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்பதுதான். கட்சி தென் மாவட்டங்களில் பலகீனமாகியுள்ளது என்பதை செங்கோட்டையன் உணர்ந்திருக்கிறார். எடப்பாடி பழனிசாமிக்கும் இது தெரியும்.
இப்படிபட்ட சூழலில் வேலுமணி வீட்டு கல்யணாத்தில் செங்கோட்டையன் என்ன சொன்னார் என்றால்? தன்னுடைய பிரச்சினை மாவட்டத்தில் கொடுக்கப்படும் நெருக்கடியை தவிர்த்து, விஜய் என்பவர் நிரூபிக்கப்பட்ட அரசியல் தலைவர் அல்ல. அவருக்கான வாக்கு வங்கி எவ்வளவு என்பது நமக்கு தெரியாது. அவரை நம்பி தேர்தலில் களத்திற்கு சென்று பெரிய அளவில் தோல்வி ஏற்பட்டால், அதற்கு பிறகு நம்மால் தலைக்காட்ட முடியாது. எனவே நாம் பாஜக பக்கம் போகலாம் என சொல்கிறார். செங்கோட்டையன் மட்டுமல்லாமல் பல்வேறு அதிமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்களும், பாஜக பக்கம் போகலாம் என்கிறார்கள். சிறுபான்மையினரின் வாக்குகள் கிடைக்கா விட்டாலும் நமக்கு 6 – 7 சதவீத பாஜக வாக்குகள் கிடைக்கும். வட மாவட்டங்களில் பாமக, கொங்குமண்டலத்திலும், தென் மண்டல மாவட்டங்களிலும் இருக்கும் பாஜக வாக்குகள் நமக்கு கிடைக்கும் என்கிற அளவில் உள்ளார். அதிமுக ஒன்றிணைய வேண்டும். நல்ல கூட்டணி வேண்டும். கண்டிப்பாக அதிமுகவில் இருந்து வெளியேறுகிற மனநிலையில் அவர் இல்லை.
செங்கோட்டையன் சபாநாயகர் அறையில் சென்று அமர்ந்தார் என்று சொல்லுகிறார்கள். அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெறக்கூடிய அரங்கிற்கு அவரால் செல்ல முடியாது. முன்னால் சென்று சட்டமன்றத்திற்குள்ளும் அவரால் அமர முடியாது. மற்ற அனைவரும் வந்த பிறகு சபாநாயகர் அறையில் இருந்து சென்றுள்ளாரே தவிர, சபாநாயகர் அப்பாவு அறையில் அமர்ந்துகொண்டு செங்கோட்டையன் சசித் திட்டம் தீட்டினார்கள். அல்லது திமுகவுக்கு செங்கோட்டையன் வரப் போகிறார் என்று எதுவும் கிடையாது. நான் செங்கோட்டையனுடைய மதிப்பையோ, அவரது பலத்தையோ குறைத்து மதிப்பிடவில்லை. ஆனால் அவர் ஒரு புரட்சியை ஏற்படுத்துவதற்கோ, கட்சி மாறி சென்று தனியாக நின்று செயல்படுவதற்கோ வொர்த் இல்லை. உண்மையில் எம்.ஜி.ஆர் – ஜெயலலிதாவின் படம் இல்லை என்று செங்கோட்டையன் சொன்னதற்கு பின்னர் தமிழகத்தில் பல நிர்வாகிகள் அவரது வீட்டிற்கு சென்று நீங்கள் செய்த கலகம் சரியானது. நீங்கள் தான் கட்சியை வழிநடத்த வேண்டும் என்று யாரரும் சொல்லவில்லை. அவரும் யாரையும் பார்க்கவில்லை. தன்னுடைய உயரம் செங்கோட்டையனுக்கு நன்றாகவே தெரியும். அதனால் அவரால் கலகம் ஏற்படபோவ தில்லை. இந்த கலகம் நீடிப்பது போன்ற தோற்றம் இருக்கும். ஆனால் அதை முடித்துவைக்கும் நுண்ணிய திறமை எடப்பாடிக்கு வேண்டும்.
அதிமுக – பாஜக கூட்டணி தொடர்பாக ஈஷா யோகா மையத்தில் அமித்ஷா – வேலுமணி ஆகியோர் 8 நிமிடங்கள் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். பாஜக – அதிமுக கூட்டணி அமைக்கும் விவகாரத்திற்கு எடப்பாடி பழனிசாமியும் தயாராகத் தான் இருந்தாக வேண்டும். அவர் கடந்த நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக அண்ணாமலையை மாற்ற வேண்டும் என்று ஒரு குழுவை டெல்லிக்கு அனுப்பி வைத்துள்ளார். வேலுமணி, தங்கமணி உள்ளிட்டோர் கோவையில் இருந்து பெங்களுருவுக்கு சென்று அங்கிருந்து டெல்லிக்கு புறப்பட்டு சென்றனர். சந்திப்புக்கு நேரம் ஒதுக்கப்பட்டபோது அமித்ஷா விவரங்களை கேட்டு தெரிந்துகொள்கிறார். பிறகு குற்றம் சாட்டப்பட்ட அண்ணாமலையை அழைத்து உடன் வைத்துக்கொண்டு, அதிமுக முன்னாள் அமைச்சர்களுடன் பேசினார். இதன் பிறகு அண்ணாமலை மாற்றப்படவில்லை. எடப்பாடி பழனிசாமி அண்ணாமலை இல்லாத பாஜகவுடன் கண்டிப்பாக கூட்டணி வைக்க சம்மதம் தெரிவித்திருப்பார். அண்ணாமலையால் தான் அதிமுக – பாஜக கூட்டணி உடைந்தது என்பது அனைவருக்கும் தெரியும். எனக்கு தெரிந்தவரை 2026 சட்டமன்ற தேர்தலில் பாஜக, அதிமுக, பாமக, தேமுதிக மற்ற கட்சிகளுடன் இணைய அதிக வாய்ப்பு உள்ளது.
ஒட்டுமொத்தமாக 2026ல் பாஜக உடன் கூட்டணி இல்லை என்று சொன்ன எடப்பாடி பழனிசாமி, சமீப நாட்களாக அதை பற்றி பேசாதீர்கள், கூட்டணிக்கு இன்னும் 6 மாதம் உள்ளது என்றுதான் சொல்கிறார். எங்காவது பாஜகவுடன் கூட்டணி இல்லை என்று சொன்னாரா? அதன் பிறகு எடப்பாடியின் மவுத்பீசாக சொல்லப்படுகிற முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், ஒரு இடத்திலாவது இதனை மறுத்து பேசியுள்ளாரா? அதிமுக உடன் கூட்டணி அமைக்கப்போவது பாஜகவா? தாவெகவா? என்றால் பாஜக, கண்டிப்பாக தவெகவுடன் கூட்டணி அமைக்க விடாது. அதற்கு பதிலாக இவர்கள் கூட்டணிக்குள் சென்று அமர்ந்துவிடுவார்கள், இவ்வாறு அவர் தெரிவித்தார்.