ஆவடி மக்களுக்கு விழிப்புணர்வு வேண்டும் !
ஆவடி மாநகராட்சியை சுற்றிலும் 13 ஏரிகள் இருக்கிறது. ஆனால் குடிநீரை காசு கொடுத்து வாங்க வேண்டிய கொடுமை நீடித்து வருகிறது. அதற்காக திட்டமிடக் கூடிய ஆட்சியாளர்களும் இல்லை. மூளையை செலவழிக்கக் கூடிய அதிகாரிகளும் இல்லை. 1000 வீடுகள் உள்ள நகரில் தண்ணீர் பற்றாக்குறை இருக்கிறது என்றால் உடனே அந்த இடத்தில் “போர்வெல்” போட்டு பிரச்சனையை முடிவிற்கு கொண்டு வந்துவிடுகிறார்கள். அந்த போரில் தண்ணீர் வருகிறதா? இல்லையா? அது எவ்வளவு நாள் பயன்பாட்டில் இருந்தது? அதைப் பற்றியெல்லாம் துளியும் கவலையில்லை. அந்த “போர்வெல்”- லுக்கு வரவேண்டிய கமிஷனை வாங்கிக் கொண்டு அந்த நகரை அத்துடன் மறந்து விடுவது. மீண்டும் அடுத்த கோடை காலத்தில் அதே நகரில் தண்ணீர் பிரச்சனை வரும், மறுபடியும் அதே இடத்திலோ அல்லது அதன் அருகிலோ ஒரு போர் போடுவார்கள்.
இப்படி ஆவடி மாநகரை சுற்றிலும் ஆயிரக் கணக்கான போர் போட்டதாக கணக்கு இருக்கிறது. இப்போதும் டெண்டர் வைத்து கொண்டு இருக்கிறார்கள். போர் போட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ஆனால் தண்ணீர் பற்றாக்குறை பிரச்சனை மட்டும் தீரந்தபாடு இல்லை.
ஆவடி மாநகரில் பட்டா நிலத்தில் வசிப்பவர்கள் மற்றும் அரசு புறம்போக்கு, ஏரி ஆக்ரமிப்பில் வசிப்பவர்கள் என்று இரண்டு பிரிவுகளாக வாழ்ந்து வருகின்றனர். பட்டா நிலத்தில் வசிப்பவர்கள் மாநகராட்சியில் முறையாக கட்டிட அனுமதி பெற்று, குடிநீருக்கு, கழிவுநீருக்கு பணம் கட்டி, வரி செலுத்துகின்றனர். அந்த அப்பாவி மக்களுக்கு வருடக் கணக்கில் சாலை வசதி இல்லை, குடிநீர் வசதி இல்லை, அவர்களின் கழிவு நீர் வெளியேறுவதற்கு வழியில்லை. ஆனால் மாநகராட்சிக்கு தொடர்பே இல்லாத எவ்வித கட்டணமும் செலுத்தாத ஏரியை ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள நகர்களுக்கு தார் சாலை, சிமெண்ட் சாலை என்று கோடிக் கணக்கில் செலவழிக்கிறார்கள்.அந்த பகுதிகளுக்கு கணக்கு வழக்கு இல்லாமல் குடிநீர் போர் போடப்படுகிறது.
ஏரி ஆக்ரமிப்பில் உள்ள நகர்களுக்கு சாலை அமைப்பதற்கு முறையாக டெண்டர் வைக்கிறார்கள். அதற்கு பூஜை போடும் நிகழச்சியில் அமைச்சர் கலந்து கொள்கிறார். அப்படி என்றால் ஏரிகளை ஆக்ரமிக்க மாநகராட்சி நிர்வாகமும், அமைச்சரும் ஊக்கப் படுத்துவதாகவே கருதத் தோன்றுகிறது.
இந்த அவளங்களை கண்டித்து போராடுவதற்கு எந்த அரசியல் கட்சிகளும் முன்வராது. எதிர்கட்சியில் இருக்கும் அதிமுக, பாஜக, நாம் தமிழர் கட்சி போன்ற அரசியல் கட்சிகள் மக்கள் பிரச்சனைகளை, மக்களின் அடிப்படை தேவைகளை குறித்து பேசுவதற்கு முன்வராது! வரவும் மாட்டார்கள்! பாஜக, நாம் தமிழர் கட்சிகள் மத அரசியல், சாதி அரசியல், இன அரசியலை பேசி மக்களிடம் பிரிவினையை ஏற்படுத்துவது என்பதே எதிர்கட்சிகளின் முக்கிய வேலைத் திட்டமாக இருந்து வருகிறது.
ஆளும் கட்சியுடன் கூட்டணியில் இருக்கும் இடதுசாரி அமைப்புகள் எப்போதும் மக்களின் அடிப்படை தேவைகளை பேசி, அதற்கான போராட்டங்களை கட்டமைப்பார்கள். ஆனால் அவர்களும் கூட்டணி தர்மம் என்ற பூச்சாண்டியை காட்டி மௌனவிரதம் கடைப்பிடிக்கிறார்கள்.
தமிழ்நாட்டில் ஏதாகிலும் ஒரு நகரத்தில், ஏதாகிலும் ஒரு அமைப்பு தங்களின் அடிப்படை தேவைகளுக்காக போராட்டம் நடத்தி கொண்டுதான் இருக்கிறது. அந்த பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆனால் ஆவடியில் மட்டும் எந்த காலத்திலும், எந்த அடிப்படை தேவைகளுக்காகவும், எந்த அமைப்பும் போராட்டம் நடத்தியதில்லை. அப்படி ஏதாகிலும் ஒரு அமைப்பு நடத்தியிருந்தாலும் அது அன்றைய ஆட்சியாளர்களை மிரட்டி ஆதாயம் அடைவதற்காகத்தான் இருந்திருக்கிறதே தவிர மக்களுக்காக அல்ல என்பதை உறுதியாக கூறமுடியும்.
எனவே, ஆவடி மக்கள் ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற வேண்டும். உங்களுக்கான, உங்களுடைய பிரச்சனையை தீர்க்க எந்த அமைப்பும், எந்த மதமும், எந்த கடவுளும் முன் வராது! வரவும் மாட்டார்கள்! உங்கள் பிரச்சனை என்ன என்று உங்களுக்கு புரிய வேண்டும். உங்கள் பிரச்சனைக்கு ஒரு வேளை நீங்களே கூட காரணமாக இருக்கலாம். நீங்களே கூட உங்களை அறியாமல் கால்வாயை ஆக்ரமித்திருக்கலாம். உங்கள் அருகில் உள்ளவர் அந்த காரியத்தை செய்திருக்கலாம், அதனை சரிப்படுத்த முயற்சி செய்ய வேண்டும்.
சமுதாயம் என்பது நீங்களும், நானும், மற்றவர்களும் சேர்ந்ததுதான். அதனால் நீங்கள் இல்லாமல் சமுதாயம் இல்லை. அதனால் நாம் ஒவ்வொருவரும் விழிப்புணர்வு பெற வேண்டும். நமது எண்ணம், நமது சிந்தனை, நமது செயல்களில் விழிப்புணர்வு பெற வேண்டும்.
(மீண்டும் பேசுவோம்)
என்.கே.மூர்த்தி