சென்னை அண்ணா மேம்பாலத்தில் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு அரசு பேருந்து கீழே விழுந்த விபத்து தொடர்பான வழக்கில் ஓட்டுநரை விடுதலை செய்து சென்னை சைதாப்பேட்டை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
சென்னையில் கடந்த 2012 ம் ஆண்டு ஜூன் மாதம் 27 ஆம் தேதி அண்ணா மேம்பாலத்தில் மாநகரப் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பாரிமுனையிலிருந்து வடபழனிக்கு செல்லும் 17M என்கின்ற பேருந்து அண்ணா மேம்பாலத்தில் சென்று கொண்டு இருக்கும் போது, இடது வளைவில் திரும்பும் போது டிரைவர் சீட் கழன்றதால் பேருந்து வலது பக்கம் தள்ளப்பட்டு மேம்பாலச் சுவரை உடைத்துக்கொண்டு தலைக்குப்புற கீழே விழுந்ததில் பேருந்தில் இருந்த 40 பயணிகளும் சிறு காயங்களுடன் தப்பினர்.

இந்த சம்பவம் தொடர்பாக போக்குவரத்து போலீசார் , ஓட்டுனர் பிரசாத்தை கைது செய்து, ஓட்டுனர் பிரசாத்தின் ஓட்டுனர் உரிமத்தை கைப்பற்றினர். அவர் மீது,கண்மூடித்தனமாகவும் கவனக்குறைவாகவும் வண்டி ஓட்டுதல், உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்கள் மூலம் பிறரை காயப்படுத்துதல், உயிருக்கும் பாதுகாப்புக்கும் அச்சுறுத்தல் ஏற்படுத்தும் செயல்கள் மூலம் பிறரை மோசமாகக் காயப்படுத்துதல் ஆகியவற்றின் கீழ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
ஓட்டுனர் செல்பேசியில் பேசிக் கொண்டே ஓட்டியதால்தான் விபத்து ஏற்பட்டதாக கூறப்பட்டது. இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை சென்னை சைதாப்பேட்டை ஒன்பதாவது மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நீதிபதி சுப்ரமணியம் முன்பு நடைபெற்றது. ஓட்டுநர் சார்பில் வழக்கறிஞர் ஜார்ஜ் வில்லியம் ஆஜராகி, ஓட்டுனரின் அஜாக்கிரதையால் விபத்து ஏற்படவில்லை என்றும் அவர் செல்போனில் பேசவில்லை என்றும் தொழில்நுட்ப கோளாறு தான் காரணம் என்று வாதிட்டார்.
ஓட்டுனர் இருக்கை திடீரென்று கழன்றதால், பேருந்தின் ஸ்டேரிங் லாக் ஆகி விபத்து ஏற்பட்டதாகவும், இதை திசை திருப்ப அப்போதைய அரசு விபத்தில் காயமடைந்தவர்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்கியதாகவும் குறிப்பிட்டார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, டிரைவர் பிரசாத்தை இந்த வழக்கிலிருந்து விடுதலை செய்து தீர்ப்பளித்துள்ளார். ஏற்கனவே டிரைவர் பிரசாத்தை பணி நீக்கம் செய்த உத்தரவை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது குறிப்பிடத்தக்கது.
பணியாளர்களின் ஊதியம் 26 ஆயிரம் ரூபாய் வழங்க தமிழக அரசு பரிசீலிக்க வேண்டும் – சுப்பராயன் வலியுறுத்தல்