திருநெல்வேலியில் புகழ் பெற்ற இருட்டுக்கடை அல்வா உரிமையாளரான கவிதா சிங்கின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தனது கணவர் வீட்டினர், வரதட்சணையாக இருட்டுக்கடை அல்வா உரிமையை தங்களுக்கு மாற்றி தரும்படி கொலை மிரட்டல் விடுப்பதாக காவல் ஆணையரிடம் தெரிவித்திருக்கும் புகார் மனுவால் மிகப்பெரிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது….
நெல்லை டவுனில் உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா கடையை நடத்தி வரும் ஹரிசிங், கவிதா தம்பதியினரின் மகள் ஸ்ரீ கனிஷ்கா தனக்கு கணவர் வீட்டில் இருந்து வரதட்சனை கேட்டு கொலை மிரட்டல் விடுவதாக நெல்லை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுகுறித்து இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா ஹரிசிங் செய்தியாளர் சந்திப்பில் கூறும்போது…
எனது மகள் ஸ்ரீ கனிஷ்காவுக்கும் கோயம்புத்தூரை சேர்ந்த உறவினர் மகன் பல்ராம் சிங் என்பவருக்கும் கடந்த பிப்ரவரி மாதம் இரண்டாம் தேதி திருமணம் பிரம்மாண்டமாக நடத்தி வைத்தோம். ஆனால் திருமணம் ஆகி ஒரு மாதம் காலம் கூட இல்லாத நிலையில் என் மகளை வரதட்சனை கேட்டு அவரது கணவர் பல்ராம் சிங் கொடுமைப்படுத்தி இருக்கிறார் அவரது குடும்பத்தினரும் என் மகளிடம் கூடுதல் வரதட்சனை வேண்டும் விலை உயர்ந்த 1.5 கோடி மதிப்புள்ள டிபென்டர் கார் ஒன்றை கேட்டுள்ளனர். அதை நாங்கள் புக் செய்து வைத்திருந்தோம். இந்த நிலையில் எனது மகளின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருந்துள்ளார் அந்தப் பெண்ணையும் என் மகள் இருக்கும் போது வீட்டிற்கும் அழைத்து வந்து வாழ்ந்து வந்துள்ளார். இதுகுறித்து உன் தாயாரிடம் கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என என் மகளின் கணவர் மிரட்டி இருக்கிறார்.
இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் 15 ம் தேதி எனது மகள் கடும் மன வேதனையுடன் கோயம்புத்தூரில் இருந்து நெல்லைக்கு எங்கள் வீட்டிற்கு வந்து விட்டார். ஆனால் மறுநாளே எங்கள் வீட்டுக்கு வந்த மகளின் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினர் உங்கள் மகளுடன் வாழ வேண்டும் என்றால் கூடுதல் வரதட்சனை தர வேண்டும் மேலும் இருட்டுக்கடை அல்வா உரிமைத்தை மகளின் கணவர் பெயரில் எழுதித்தர வேண்டும் என மிரட்டினர். எனது மகளின் மாமனார் பாரதிய ஜனதா கட்சியின் செல்வாக்கு மிக்க நபருடன் தொடர்பில் இருப்பதாகவும் எங்கு சென்று புகார் அளித்தாலும் அதனை ஒன்றும் இல்லாமல் ஆக்கி விடுவேன்.
பொய்யை உண்மையாகவும் உண்மையை பொய்யாக்கவும் எனக்கு தெரியும் என மிரட்டுகிறார். இந்த பிரச்சனை குறித்து தமிழக முதல்வரின் தனிப்பிரிவுக்கும் மனு அளித்துள்ளோம் கருணையுடன் அவரும் எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை புரிந்து கொண்டு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று மீடியாக்கள் மூலம் வேண்டுகோள் விடுக்கிறேன் என உரிமையாளர் கவிதா ஹரி சிங் தெரிவித்தார்.
கவிதா ஹரிசிங் மகளான கனிஷ்கா கூறும்போது எனது கணவர் வேறு ஒரு பெண்ணிடம் தொடர்பில் இருக்கிறார். இதுகுறித்து உன் வீட்டில் கூறினால் உன்னை கொலை செய்து விடுவேன் என என்னை மிரட்டினார். என்னிடம் உனது அம்மாவிடமிருந்து இருட்டுக்கடை அல்வா கடை உரிமத்தை என் பெயருக்கு மாற்றி எழுதி தர வேண்டும் என கேட்டார். என் கணவரும் அவரது குடும்பத்தாரோ என்னை மிகவும் கொடுமை படுத்தினார்கள் நான் மிகவும் மன வேதனை அடைந்திருக்கிறேன் இது குறித்து மாநகர காவல் ஆணையரிடமும் புகார் அளித்திருக்கிறேன் என தெரிவித்தார்.
உலகப் புகழ்பெற்ற இருட்டுக்கடை அல்வா சுவையில் மட்டுமல்ல விற்பனையிலும் முதலிடத்தில் இருக்கிறது. மிக பிரம்மாண்டமாக பல கோடிகள் செலவு செய்து மகளுக்கு திருமணம் முடித்த நிலையில் இன்று வரதட்சணையாக வருவாய்க்கு ஆதாரமான புராதான லாலா கடை உரிமத்தை வரதட்சணையாக கேட்கும் கொடுமையை எண்ணி மனவேதனை அடைந்துள்ளார் இருட்டுக்கடை உரிமையாளர் கவிதா ஹரிசிங்.