திருச்சியில் மூக்கில் சதை வளர்ச்சிக்காக அனுமதிக்கப்பட்ட செவிலியர் மாணவி சீதாலட்சுமி, அதிகப்படியான மயக்க மருந்து கொடுக்கப்பட்டதால் உயிரிழந்ததாகக் கூறி அவரது உறவினர்களும் சக மாணவிகளும் அரசு மருத்துவமனை வளாகத்தில் சாலை மறியல் மற்றும் தீவிர போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த சீதாலட்சுமி என்ற செவிலியர் மாணவி, திருச்சி அரசு மருத்துவமனையில் மூன்றாம் ஆண்டு நர்சிங் படித்து வந்த நிலையில், அறுவை சிகிச்சையின்போது உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மூக்கில் சதை வளர்ச்சி காரணமாக மூச்சுத்திணறல் பிரச்சினையால் அவதிப்பட்டு வந்த சீதாலட்சுமி, அதற்காக திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில், மே 22 ஆம் தேதி அவருக்கு மயக்க மருந்து அளித்து அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டபோது திடீரென உயிரிழந்தார்.
இந்த சம்பவத்திற்கு மருத்துவர்களின் அலட்சியமும், உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளாததுமே காரணம் என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தகவலறிந்த மாணவியின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் சக செவிலியர் மாணவிகள் திருச்சி அரசு தலைமை மருத்துவமனை முன்பு திரண்டு சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் பரபரப்பான சூழலும் நிலவியது.
சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் மற்றும் உயர் அதிகாரிகள், போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் நேரில் சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ரமேஷ், “சென்னையிலிருந்து உயர்மட்ட குழு ஒன்று வந்து சம்பவம் குறித்து விசாரணை நடத்தும். தவறு நடந்திருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும். மாணவிகளின் புகார்கள் எழுத்துப்பூர்வமாக பெறப்பட்டுள்ளன. தற்காலிக நடவடிக்கைகளுக்கும் பரிந்துரை செய்யப்படும்” என தெரிவித்தார்.
திருக்கோவிலூர் அருகே மகளுக்கு நீதி கேட்டு தாய் கண்ணீர் மல்க முதலமைச்சருக்கு கோரிக்கை…
