திருவள்ளூர் மாவட்டம் பழவேற்காடு கடற்பகுதியில் மீனவர் வலையில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் சிக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பழவேற்காடு மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் உள்ள 30-க்கும் மேற்பட்ட மீனவ கிராமங்களைச் சேர்ந்த மக்கள் ஏரி மற்றும் கடற்பகுதிகளில் மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில், பசியாவரம் பகுதியைச் சேர்ந்த தேவபிரகாஷ் என்பவர் தனது படகில் நான்கு பேருடன் நேற்று வழக்கம்போல் கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.

அப்போது அவர்கள் வீசியிருந்த மீன்பிடி வலையில் சுமார் 10 கிலோ எடை கொண்ட, இரும்பால் செய்யப்பட்ட துருப்பிடித்த நிலையில் இருந்த மர்ம பொருள் ஒன்று சிக்கியுள்ளது. அந்த பொருள் வெடிகுண்டை ஒத்திருப்பதை கண்ட மீனவர்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு வந்த காவல்துறையினர், வெடிகுண்டு நிபுணர்கள் உதவியுடன் மர்ம பொருளை பாதுகாப்பாக கைப்பற்றி கரைக்கு கொண்டு வந்தனர். பின்னர் அதனை காவல் நிலையத்துக்கு எடுத்துச் சென்று தீவிர சோதனை மேற்கொண்டனர்.
இந்த மர்ம பொருள் குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. ராணுவ ஒத்திகை பயிற்சியில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருளா, ராக்கெட் லாஞ்சர் வகையைச் சேர்ந்ததா, கடற்படை கப்பலிலிருந்து தவறி விழுந்ததா அல்லது வேறு ஏதேனும் நாசவேலைக்காக பயன்படுத்த திட்டமிடப்பட்டதா என்பது குறித்து திருப்பாலைவனம் காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். மீனவர் வலையில் வெடிகுண்டு போன்ற மர்ம பொருள் சிக்கிய சம்பவம் பழவேற்காடு மீனவ கிராமங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நூற்றுக்கும் மேற்பட்ட டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம் – அம்பத்தூரில் பரபரப்பு…
